இராகுலைப் பார்த்து பாசக பயந்துவிட்டது – மெகபூபா முப்தி கருத்து

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 இல் தேர்தல் பரப்புரையில் பேசிய காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி, ‘‘எல்லாத் திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?” என்று விமர்சித்தார். இதுதொடர்பாக குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ்மோடி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இராகுல் குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து, இராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும்வரை குற்றவாளி என்று அறிவித்ததற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.

இந்த இரண்டு மனுக்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.பி.மொகேரா, இராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைத்ததுடன் பிணை வழங்கினார். இராகுல் குற்றவாளி என அறிவித்ததற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரும் மனு மீது பதில் அளிக்குமாறு புர்னேஷ் மோடிக்கும் குஜராத் மாநில அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த மனு மீது கடந்த 13 ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 20 ஆம் தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், அவதூறு வழக்கில் குற்றவாளி என சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை கோரி இராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நிதிபதி அளித்த தீர்ப்பில், “கீழமை நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கும் விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடனும் இதற்கு முன்பு பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படியும் செயல்பட வேண்டி உள்ளது. ஏனென்றால், இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை சார்ந்த விசயம்.

மேலும் இராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்காவிட்டால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(3) பிரிவின் கீழ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும். இதனால் இராகுல் காந்திக்கு திரும்பப்பெற முடியாத அளவுக்கு இழப்பு ஏற்படும் என்பதை அவரது வழக்கறிஞர் நிரூபிக்கத் தவறிவிட்டார்” என கூறப்பட்டுள்ளது.

இராகுல் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியதாவது….

சனநாயகத்தின் தாய் என்று பெருமை கொள்ளும் நாட்டின் சனநாயக வரலாற்றில் இன்று ஒரு கறுப்பு நாள். இராகுல் காந்தி நடத்தப்படும் விதம் பாசக சனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது. அவர்கள் ஒரு கட்சி அமைப்பை நிறுவ விரும்புகிறார்கள். அரசியல் சாசன ஆட்சியை மாற்றிவிட்டு பாசக ராஜ்ஜியத்தை அமைக்க விரும்புகிறார்கள். நீதித்துறைதான் மக்களின் கடைசி நம்பிக்கை. ஆனால் தாமதமாகச் செயல்படுகிறது.

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 தொடர்பான மனு விசாரணையின்றி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. பில்கிஸ் பானு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் இராகுல் வழக்கு விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்திய ஒற்றுமைப் பயணத்துக்குப் பிறகு இராகுல் புகழ் அதிகரித்ததால் பாசக பயந்து விட்டது. 1947 க்கு முன்பு கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தது போல் மேற்கு இந்திய கம்பெனியின் தவறான ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response