இந்திய அரசின் பணிகளுக்கான தேர்வினைத் தமிழில் எழுதலாம் என்பது மாற்றப்பட்டுவிட்டதா?
உண்மையை விளக்குமாறு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
இந்திய அரசின் ஆயுதக் காவல்படையின் பணிக்கான தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததின் விளைவாக, ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு, தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் இத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையொட்டி முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் அனைத்துத் தேர்வுகளையும் தமிழல் நடத்தவேண்டும்” என்ற கோரிக்கையை விடுத்துள்ளார். ஆனால், ஏற்கெனவே தமிழ் உள்பட 14 தேசிய மொழிகளிலும் ஒன்றிய அரசின் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வரலாற்றுப்பூர்வமான உண்மை ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
1965 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் காங்கிரசு செயற்குழுக் கூட்டத்தினை மொழிப் பிரச்சனைக்காக அகில இந்திய காங்கிரசுத் தலைவராக இருந்த காமராசர் கூட்டினார். இருநாட்கள் நடைபெற்ற இச்செயற்குழுக் கூட்டத்தில் “ஆங்கிலம் அகற்றப்படும் இடங்களிலெல்லாம் மாநில மொழிகள் விரைவில் அமர்த்தப்படவேண்டும். மாநிலங்களில் அந்தந்த மொழிகளே ஆட்சிமொழிகள் ஆவதை விரைவுப்படுத்தவேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டு அது வளமாக்கப்படவேண்டும். அதற்குப் பிறகே இணைப்பு மொழியாக அதை பயன்படுத்துவது குறித்து ஆராயவேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய மொழிகளும் வளம்பெறச் செய்யும் திட்டம் ஒன்றினை இந்திய அரசு வகுத்துச் செயல்படுத்தவேண்டும். ஒன்றிய அரசின் தேர்வுகளை அவரவர்கள் தாய்மொழிகளில் எழுதுவதற்கு ஏற்ப அனைத்துத் தேசிய மொழிகளையும் தேர்வு மொழிகளாக ஆக்கவேண்டும்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை காமராசர் கொண்டுவந்த போது அனைவரும் அதை ஒருமனதாக ஏற்றார்கள். இந்தி மொழியின் தீவிர ஆதரவாளர்களும் அதற்கு சம்மதித்தனர்.
தலைமையமைச்சராக இருந்த லால்பகதூர் அவர்கள் இத்தீர்மானத்திற்கு சட்டரீதியான வடிவைக் கொடுத்து சட்டமாக்கினார். அதைத் தொடர்ந்து தமிழ் உள்பட அனைத்துத் தேசிய மொழிகளிலும் ஒன்றிய அரசின் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற தேர்வுகளை தமிழில் எழுதி பட்டம் பெற்று ஒன்றிய மற்றும் தமிழக அரசுப் பணிகளில் அமர்ந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, ஒரிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி, தற்போது அம்மாநிலத்தின் முதலமைச்சருக்கு ஆலோசகராக விளங்கும் ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் விளங்குகிறார். சிந்து நாகரிகம் குறித்த அவரது நூலை அண்மையில் முதலமைச்சர் அவர்களே வெளியிட்டுப் பாராட்டியுள்ளார்.
தலைமையமைச்சராக லால்பகதூர் இருந்த காலத்தில் அனைத்துத் தேசிய மொழிகளிலும் ஒன்றிய அரசின் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட்டதை இப்போதைய பா.ச.க. அரசு மாற்றியுள்ளதா? அப்படிச் செய்திருந்தால், அது மிகப்பெரிய அரசியல் சட்ட மீறலாகும். இதை தெளிவுபடுத்தவேண்டியது உள்துறை அமைச்சர் அமித்சா அவர்களின் பொறுப்பாகும். அவ்வாறு செய்ய அவர் முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.