
2019 மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய இராகுல் காந்தி, “ஏன் அனைத்துத் திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்திய குற்றவியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் இராகுல் காந்தி மீது விசாரணை நடைபெற்றது.
2021 ஜூன் மாதம் இராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி, விளக்கம் அளித்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த 17 ஆம் தேதி இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா அறிவித்திருந்தார்.
இதையடுத்து, இராகுல் காந்தி உள்ளிட்டோர் சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். அனைத்துத் தரப்பினரும் ஆஜரான நிலையில் தீர்ப்பை வாசித்த மாஜிஸ்திரேட் வர்மா, இராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து மனுதாரர் புர்னேஷ் மோடி தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, “சட்டங்களை இயற்றும் மக்களவையின் உறுப்பினராக இராகுல் காந்தி உள்ளார். அவருக்கு சட்ட விதிகள் அனைத்தும் தெரியும். அவரே விதிகளை மீறியுள்ளார். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்” என்றார்.
இராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடும்போது, “வழக்கில் மன்னிப்பு கோர விரும்பவில்லை. இராகுல் காந்தி ஊழலுக்கு எதிராகவே பேசினார். அவர் தனது கடமையை மட்டுமே செய்தார்” என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் வர்மா, இராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்தார். இதையடுத்து, இராகுல் காந்தி தரப்பில் பிணை கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.
இராகுல் காந்தியின் வழக்கறிஞர் பாபு கூறும்போது, “இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நீதித் துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
இராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “எனது மதம் உண்மை, அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது கடவுள். அகிம்சை அதை அடையும் வழி. இது காந்தியடிகளின் பொன் மொழி” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்களவைச் செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,
குற்றவியல் வழக்கில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 102(1)(e)-ன் கீழ் கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் எனும் நிலையில் இருந்து இராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுகிறார். அவரது தகுதி நீக்கம் தீர்ப்பு வெளியான நாளில் (23.03.2023) இருந்தே அமலுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் இராகுல் காந்தியின் பதவி பறிபோயுள்ளது. சூரத் நீதிமன்றம் அவருக்கு விதித்த தண்டனையை ஒரு மாதத்துக்கு மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவரது தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தே, இராகுல் காந்தியின் பதவி நிரந்தரமாக பறிபோகுமா அல்லது தப்புமா? என்பது தெரியவரும்.
இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்கள் கூறும்போது, இராகுல் வழக்கில், அவர் உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்ய முடியும். ஒருவேளை உச்ச நீதிமன்றமும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், கண்டிப்பாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். அவர் விடுதலையான நாள் முதல் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்கின்றனர்.


