திமுக ஆட்சியிலும் தமிழுக்கு எதிரான தீண்டாமை – சான்றுடன் பெ.மணியரசன் அறிக்கை

பழனி குடமுழுக்கு வேள்வியில் தமிழ் முழுக்கப் புறக்கணிப்பு, தி.மு.க.ஆட்சியிலும் தமிழுக்கு எதிரான தீண்டாமை என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…..

பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு 27.01.2023 அன்று நடப்பதை ஒட்டி 24.1.2023 அன்று பழனிமலையில் வேள்விச் சாலை தொடங்கப்பட்டது.

வேள்விக் குண்டங்கள் 90லும் – பிராமண அர்ச்சகர்கள் மட்டுமே அமர்ந்து சமற்கிருதத்தில் மந்திரம் சொல்லிக் கொண்டுள்ளார்கள். உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி, அந்தக் தொண்ணூறு குண்டங்களில் 45 குண்டங்கள் தமிழ்
மந்திரம் சொல்லி அர்ச்சிப்போர் அமர்ந்து பூசைகள் செய்து கொண்டிருக்கவேண்டும்.

ஆனால் 90-இல் ஒன்றில் கூட தமிழ் மந்திரம் சொல்வோர் அமர்த்தப்படவில்லை; தமிழ் மந்திரம் இல்லை. அனைத்திலும் பிராமண அர்ச்சகர்கள் சமற்கிருத சுலோகங்களை மட்டுமே சொல்லிக்
கொண்டுள்ளார்கள்.

வேள்விச் சாலைக்கு வெளியே சற்று தள்ளி ஓதுவார்கள் சிலரை வெறுந் திடலில் உட்கார வைத்து அவ்வப்போது பாட வைத்துள்ளார்கள். அந்தக் காட்சிகளை நேரில் பார்த்தவர்கள் படம் எடுத்து வலைத் தளங்களில் போட்டுள்ளார்கள்.

ஏற்கெனவே இருதடவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தமிழ்பாதி சமற்கிருதம் பாதி என்ற அளவில் மந்திரங்கள் சொல்லி குடமுழுக்கு சார்ந்த அர்ச்சனைகளை – பூசைகளை செய்திட ஆணை இட்டுள்ளது.

இப்போது பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை அதே போல் தமிழ்பாதி – சமற்கிருதம் பாதியாக நடத்த வேண்டும் என்று கடந்த 19.01.2023 அன்று கரூர் வழக்கறிஞர் இராசேந்திரன் தொடுத்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால வழிகாட்டல் வழங்கியது. அவ்வாறு செய்வதாக அரசு வழக்கறிஞர்
நீதிமன்றத்தில் உறுதி கொடுத்தார்.

ஆனால் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் வேள்விக் குண்டத்தில் தமிழ் மந்திரம் ஓதாமல் சமற்கிருதத்திலேயே முழுக்க முழுக்க பூசை மந்திரங்களைச் சொல்லி வருகின்றார்கள்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்புகளைப் புறக்கணித்து அவமதித்து வருகிறது. பழனிமுருகன் கோயில் குடமுழுக்கு தமிழ் மந்திரம் ஓதி நடத்தப்படும்என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சொல்லி வந்தவை அனைத்தும் வெறும் பாசாங்கு; அவை போலியானவை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

திருக்கோயில்களில் தமிழுக்கும் தமிழ் அர்ச்சகர்களுக்கும் எதிரான தீண்டாமையைத் தொடர்ந்து கடைபிடிக்க சமற்கிருத பிராமண அரச்சகர்களுக்கு முழு வாய்ப்பு வசதிகளைத் தி.மு.க. அரசு உண்டாக்கித் தருகிறது.

அரசு அமைத்துள்ள ஆன்மிக வல்லுநர் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள பேரூர் ஆதீனகர்த்தர், மு.பெ.சத்தியவேல்முருகனார் போன்றோர் கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகிய இடங்களில் தமிழ்க்கிரியை மந்திரங்கள் சொல்லி அரச்சிக்கப் பலருக்குப் பயிற்சி கொடுத்துள்ளார்கள்.

நடைமுறையில் அவர்கள் முழுக்க முழுக்கத் தமிழ்க் குடமுழுக்கு நடத்தி வருகிறார்கள். எமது தெய்வத் தமிழ்ப் பேரவை ஆன்றோர்களும் நிறைய தமிழ்க்குடமுழுக்குகள் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையிலாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது அரசின் தமிழ்விரோத – தமிழ் அர்ச்சகர் விரோத நிலைபாட்டைக் கைவிட்டு,உயர்நீதிமன்றத்தீர்ப்பின்படி பழனி முருகன் கோயில் கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகிய மூன்று இடங்களிலும் – சரிபாதியாகத் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனையை செயல்படுத்தி சமநீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response