கணங்கள் தோறும் அழகைப் பருகிய பிரமிளின் கரடிகுடி – 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் பதிவு

பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் 1939 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் பிறந்தவர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவர். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.

சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மு சிவராம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில், 1997 சனவரி 6 ஆம் நாள் மறைந்தார்.

அவர் குறித்து,காற்றின் தீராத பக்கங்களில் எனும் படைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் தங்கம், தம் குழுவினருடன் பிரமிளின் 26 ஆவது நினைவுநாளில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.

அதுகுறித்த அவருடைய பதிவு……

பிரமிள் நினைவேந்தல் கரடிகுடியில்…..

கரடிகுடி ஊராட்சி மன்றச் செயலகத்துக்கான தெருவுக்கு, முதன்மைச் சாலையில் இருந்து இடதுபுறமாகத் திரும்ப வேண்டும். அந்தத் திருப்பத்தை நோக்கி எங்கள் வண்டி நெருங்க நெருங்க மனதுக்குள் குமிழியூதத் தொடங்கி விட்டது குதூகலம். 

இடங்களின் மீதான பற்றுகள் எல்லாம் காய்ந்த சேற்று மண் உதிர்வது போல நம்மிலிருந்து தாமாக உதிர்ந்துவிட்டன என்று நம்பியிருந்த நமக்குள் அதிர்ச்சி கலந்த வியப்பைத் தந்தது, குமிழிகளின் கொப்பளிப்பு. 

சொந்த ஊருக்குத் திரும்பி வருவதைப் போன்ற ஒரு கிளர்ச்சி.கரடிகுடி, அவ்வளவு ஆழத்தில் நமக்குள் கரைந்து விட்டிருக்கிறது என்பதை எதிர்பாராமல் உணர்ந்தோம்.

கரடிகுடியும் தன்னுள் நம்மைக் கரைத்து விட்டிருக்கிறது என்பதை, கரடிகுடி நூலகர் திரு.ஜெகதீசன் அவர்களது வரவேற்கும் பாங்கிலிருந்து உணர்ந்தோம். வெளியூர் போயிருந்த ஊர்க்காரர் ஒருவருக்கு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சொந்த ஊர் வந்தடையும்போது எப்படியான வரவேற்பு கிட்டுமோ அப்படியான வரவேற்பு கிட்டியது திரு.ஜெகதீசன் அவர்களிடமிருந்து. 

கரடிகுடியில் பிரமிளுக்குச் சிலை வடிக்கும் பணியிலாகட்டும், சிலை வடிக்கும் பணியை விவரணப்படமாக்குகிற படப்பிடிப்பு நாட்களில் ஆகட்டும் – ஒவ்வொரு அணுவின் அசைவிலும் திரு.ஜெகதீசன் அவர்களின் பங்கு அணு மையமாகக் கிடக்கிறது. இந்த ஆவணப் படத்திற்கு எவரிடமிருந்து சரியான தகவல்களும், பிரமிள் குறித்த நினைவுகளும் கிடைக்கும் என்பனவற்றை எல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.அவரவர்களோடு நன்கு உறவு முறையைப் பேணி வருகிறார்.அதனால், இன்னாரை நீங்கள் சந்திக்கலாம் என்று சரியானபடி நமக்கு யோசனைகள் சொல்கிறார். சந்திப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்கிறார். அவ்விடங்களுக்கு எல்லாம் நம்மோடு பயணித்து வந்து அறிமுகம் செய்விக்கிறார்.எல்லாவற்றுக்கும் மேலாக, எங்கேயும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், நமக்கும் சந்திப்பவருக்கும் இடையில் இணக்கம் நிலவுவதற்கானவற்றைக்  கையாண்டு சந்திப்புகளை எல்லாம் நிறைவளிக்கக் கூடியனவாக நிறைவேற்றித் தந்திருக்கிறார்.

 ‘காற்றின் தீராத பக்கங்களில்’படப்பிடிப்பு நடந்த நாட்களில், நமது குழு தங்குவதற்கு என்று ஒரு வீட்டை, மாத வாடகைக்கு அமர்த்திக் கொடுத்தார்.அவரது உடன் பிறந்த தம்பி திரு தாமோதரன் அவர்களின் வீடுஅது. தாமோதரன் அவர்களும் அவரது குடும்பத்தாரும் அந்தத் தெரு மக்களும் நமக்குக் கொடுத்த ஒத்துழைப்பு மிக அருமையானது. அந்த வீடு மட்டுமா…? ஊரே நமக்கு ஒத்துழைத்தது அருமையாக. பல வீடுகள் விருந்துக்கு அழைத்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இன்னமும் ஏராளமான திண்ணை வீடுகள் இருக்கிற ஊராக்கும் கரடிகுடி. 

விருந்தினரைத் தம்மவராக நினைப்பது திண்ணையூரின் கலாச்சாரம் அல்லவா? அதிலும் நாங்கள் குடியிருந்தது  
கிழக்கு மேற்காக நீண்டு வாட்டமாக அமைந்ததெரு. எல்லா வீடுகளுக்கும் திண்ணை இருந்தது என்றாலும் ஒரு வீட்டின் திண்ணை மிக மிக நீளமானது. சிவப்பு சிமென்ட் மெழுகியிருந்த திண்ணை. உதயசூரியன் தனது கதிர்களை மஞ்சளும் சிவப்பும் பொன்னிறமுமாக மாறி மாறி சாய்வாக அந்தத் திண்ணை மீது பொழிந்தவாறு மேலெழும்ப மேலெழும்ப அந்தத் திண்ணையின் வண்ணம், அதன்மினுமினுப்பு, பொலிவு, ஒளி … 
எல்லாமே கணந்தோறும்மாறிக்கொண்டே இருக்கும் பாருங்கள் – பேரழகு. 

காலை நேரங்களில் ‘மே மே’ என்று கத்தி, தீவனம் போடச் சொல்லி வீட்டுக்காரர் அம்மாக்களை அனத்துகிற மாடுகளும்; ‘ம்மாம்மா’ என்று கத்தி, அன்னைப் பசுவின் அடிமடி சுரக்கிறஅரும்பால் உறிஞ்சுவதற்காகப் பசியோடு முறையிடுகிற கன்றுக் குட்டிகளும்; சைக்கிள் ஹேண்டில் பாரின் மணியைக் கணகணவென ஒலித்தபடி சரக் புரக்கென்று வந்து நின்று கடக் முடக்கென்று ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி தளக் புளக்கென்று தத்தம் உயரமான கேன்களில் பாலை ஊற்றிக்கொண்டு விடுவிடுவெனப் போய் வருகிற பால்காரர்களும்; முழங்கால் வரைக்கும் தெரிந்தால்தான் என்ன என்று சேலை நுனியை இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு அங்குமிங்கும் குடும்ப வேலைகளாக நடமாடிக் கொண்டிருக்கிற பெண்களும்; ஊருக்கே ராஜா போன்ற தோரணையைப் போர்த்துக் கொண்டுபுறங்கை கட்டியவாறு இப்புறமும் அப்புறமும் தெருவை மிடுக்குடன் நோட்டம் விட்டபடி ஊருக்குள்ளிருந்து முதன்மைத்தெருவின் டீக்கடை பெஞ்சுகளை நோக்கி சாவகாசமாகச்சென்று கொண்டிருக்கிற ஆண்மக்களும்; குரைக்க மறந்து சோம்பலாக வெயில் காய்ந்தபடி, வெயில் படும் இடங்களைத்தேடித் தேடி  நகர்ந்து படுத்தபடி, வஜ்ராசனத்தில் யோகநிலையெடுத்து தெருக் கோடி வரை வேடிக்கை பார்த்தபடி -இப்படியாகச் சும்மாவே கிடக்கிற ஞானமடைந்த நாய்களும்;ஏதாவது பொருளை வாங்குவதற்காகத் தெருவைப் பராக்கு பார்த்தபடிப் குதித்தோடுகிற சிறார்களும்; இதுதான் நாங்கள் குடியிருந்த தெருவின் காலை நேரச் சித்திரம். நேரத்துக்குத்தக்கபடி இந்தச் சித்திரம் மாறும். தெருவுக்குத் தக்கபடியும் மாறுபடும். 

வியாழக்கிழமை நாளில் ஊரின் கோலமே முற்றிலும் மாறிவிடும்; அன்று சந்தை நாள். இதுதான் கரடிகுடி. 2022 லேயே இப்படியென்றால் கால் நூற்றாண்டுக்கு முன்னர் இன்னும் பழைய பண்பாட்டுக் கூறுகள் உயிர்ப்புடன் இருந்திருக்கும் இல்லையா? அதனால்தான் இந்தக் கரடிகுடி – திண்ணை வீடுகள் கொண்ட திண்ணையூராகிய கரடிகுடி – தனது திண்ணைக்கலாச்சாரத்தின் சிகரமாக, ஈழ நாட்டில் பிறந்த கவிஞருக்கு இறுதிக்காலத்தில் இடம் தந்து, அந்தக் கவிஞர் மறைந்த பின்னர் அவருக்கு நினைவிடமும் தந்திருக்கிறது. 

பிரமிளுக்கு மட்டுமா? பிரமிளின் பெயரைச் சொல்லிக் கொண்டு வந்த எங்களுக்கும் அல்லவா இடம் தந்திருக்கிறது. நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் திரு தாமோதரனும்,அவரது குடும்பத்தாரும் இறுதிவரை காட்டிய பண்பாடு, அந்தத்திண்ணையூரின் ஒரு சோறு பதம். 

படப்பிடிப்புக் குழு தங்கியிருந்த அந்த மாடி வீட்டின்  கதவு திறந்ததுமே கண்ணில் படுவது, எதிர்த் தெருவின் மூலை வீட்டு நெற்றியில் மேடாகப்பொலிகிற ‘ராமையா இல்லம்’ என்ற எழுத்துப் பொறிப்பு. 

பிரமிள் தனது இறுதிக் காலத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த இல்லம் அது. அன்றாடம் நாம் அதிகாலை எழுந்ததும்  செய்த முதல் வேலை, பால்கனிக்கு வந்து நின்று பிரமளின் வீட்டைப்பார்த்து ஒரு சல்யூட் அடிப்பது. பல் தேய்த்தல் என்கிற முதல் வேலையை ஆரம்பிப்பது கூட வாத்தியாருக்கு வணக்கம் போட்டு விட்டுத்தான் என்றிருந்த நாட்கள் அவை. 

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்குக் கிளம்புவதற்கு முன்னர், பால்கனியில் நின்று அந்த வீட்டைப் பார்த்து, இன்றைக்கு என்ன வேலை நடக்கவிருக்கிறது என்று வாத்தியாரின் காதில் ஒரு வார்த்தை போட்டுவிட்டுப் புறப்படுவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.

அந்தத் தெருவுக்குப் பிரமிளின் பெயர் சூட்டப்பட இருக்கிறது – சிலை நிறுவி முடித்த பின்னர். அன்றைய நாளில் தமிழ் இலக்கிய உலகை கரடிகுடி வரவழைக்க வேண்டிய வேலைகால சுப்பிரமணியத்துடையது. அப்படி ஒரு விழா சிறப்பாக நடக்க வேண்டுமானால், முந்தைய நிலையின் களப் பணிகள் முதன்மையானவை. 

இந்தக்களப்பணிகளில் தன்னை ஒப்புக்கொடுத்திருப்பவர் திரு ஜெகதீசன். ஆனாலும் ஒருபோதும் அவர் தன்னைப் பினாத்திக் கொண்டதில்லை. பிரமிளுக்குச் சிலை வடிப்பதற்கும், பிரமிள் வாழ்வை விவரணப்படம் ஆக்குவதற்கும் நம்மை எது செலுத்துகிறதோ அது அவரால் உணரப்பட்டிருக்கிறது. அவர் நமக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பில் தன்னலம் சற்றும் இல்லையா என்றால் – தன்னலம் மட்டுமே அதற்குக் காரணம் என்று சொல்லலாம்! 

jagadeesan -Thangam - Giridharan -azahgiri udhayan - bala balaji
jagadeesan -Thangam – Giridharan -azahgiri udhayan – bala balaji

பிரமிள் சிலை கரடிகுடியில் நிறுவப்பட்டால் அது தனது ஊருக்கே பெருமை சேர்க்கும் என்கிற தன்னலம்தான் அவரது தன்னலம். இதே தன்னலம்தான் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கிரிதரன் அவர்களுக்கு கூட. நமக்கும் தலைவருக்கும் (அங்கு மக்கள் அவரை அப்படித்தான் – தலைவர் என்று தான் – அவர் இல்லாத போதும் சொல்லுகின்றனர் ) இடையிலான முதல் சந்திப்பிலேயே – சில மணித்துளிகள் கால அளவுக்குள்ளேயே– முடிவெடுத்தார், பிரமிள் சிலை நிறுவுவதற்கு எல்லா உதவிகளையும் இந்த மெட்ராஸ்காரங்களுக்குச் செய்து கொடுப்பது என்று. 

அந்தக் கணத்திலிருந்து இப்பொழுது வரை நமது முயற்சிகள் அனைத்தும் இலகுவாக நடப்பதற்கு முதற்காரணமாகத் தலைவரைத்தான் சொல்ல முடியும். அவருடனான முதற் சந்திப்பு சென்ற ஆண்டு மார்ச் ஐந்தாம் தேதி இரவில் நடந்தது. அவரைச் சந்தித்து விட்டுச் சென்னை திரும்பும்பொழுது காரோட்டிக் கொண்டிருந்த நடிகர் திலீபனிடம்  சொன்னோம் : “மனிதர்களை நம்புகிறார்.சந்தேகப்படவில்லை. விரைந்து முடிவெடுக்கும் திறன் வாய்த்திருக்கிறது. தான் பேசுவதை விட, பிறருக்குச்செவிமடுப்பதை முதன்மையானதாகக் கருதுகிறார்.
முழுமையாகச் செவிமடுக்கிறார். தாழ்வு மனப்பான்மை உயர்வு மனப்பான்மை ஆகிய இருமுனைகளும் அவருக்கு இல்லை.அதனால் உறவாடலில் லயக்கேடு உண்டாவதில்லை.உள்ளார்ந்த லயத்தை உணர்ந்து வைத்திருக்கிற அபூர்வமான மனிதர் இவர். புதிய ஊர்த் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கலைஞர்கள் என்று தம்மை முறையிட்டுக் கொள்கிற பலருக்கும்கூட வயப்பட்டிராதஉள்ளார்ந்த லயம் இவருக்கு வாய்த்திருக்கிறது. மக்களுக்கு நிறையச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்” என்று நம்பிக்கையோடு தெரிவித்திருந்தோம். அது உண்மைதான். 

கரடிகுடியில் ‘காற்றின் தீராத பக்கங்களில்’ படக் குழு, சென்ற ஆண்டு (அதற்குள் ‘சென்ற ஆண்டு’ ஆகிவிட்டதா?!)தங்கியிருந்த காலத்தில், தலைவர் எப்படி பம்பரமாகச்சுற்றுகிறார் சுழலுகிறார் என்பதைக் கண்டிருந்தோம். ஊர் மக்களுடன், ஏழை பாழை சாதி சனம் கட்சி என்று வேறுபாடு இல்லாமல் அன்புடனும் மரியாதையுடனும் அவர் உறவாடுவதைக் கண்டோம் தொடர்ந்து ஊருக்குள் ஏதாவது ஒரு பணி நடந்து கொண்டே இருப்பதையும் கண்டுகொண்டே இருந்தோம். இப்படிப்பட்ட சிறப்புகள் வாய்த்தவர்தான் ஊராட்சி மன்றத் தலைவர் திரு கிரிதரன். நாங்கள் சென்று சேர்ந்தபோது தலைவர் செயலகத்தில் இல்லை. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தார்.  

திரு ஜெகதீசன், தலைவருக்கு அழைத்து, நாம் வந்திருப்பதை அறிவித்தார். இதற்கிடையில் துணைத் தலைவராகிய திருமதி.பாலா பாலாஜி அவர்களும் வந்து சேர்ந்துவிட்டார். 

1996 ஆம் ஆண்டு பிரமிள் ஒரு ஆம்புலன்சில் கரடிகுடி கொண்டு செல்லப்பட்டு, நள்ளிரவில் படுக்கையோடுஆம்புலன்சிலிருந்து கீழே இறக்கப்பட்ட போது முதல் முறையாக பிரமிளைக் கண்டிருக்கிறார் திருமதி பாலா.இன்றும் பிரமிள் குறித்த நினைவுகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். கரடிகுடிக்குப் பிரமிள் கொண்டு செல்லப்பட்டபோது, பேச முடியாதவராக இருந்தார் பிரமிள். விழிகளின் மொழிதான். இந்த அளவிலான 
வெளிப்பாட்டு ஊனங்களைக் கடந்தும் பிரமிளின் பண்புகளை உணர்ந்து கொண்டு, 
அவர் ஒரு உயர்ந்த மனிதர் என்று புரிந்து வைத்திருக்கிறார் திருமதி பாலா. 

பேச்சு தொடர்ந்துகொண்டிருந்த போதே – எம்.எல்.ஏ வின் சந்திப்பை முடித்துவிட்டு ஊராட்சி மன்றச் செயலகத்திற்கு வந்து சேர்ந்த ஊர்த் தலைவர் ‘பிரமிள் சிலை எப்போது நிறுவுவீர்கள்? ஆவணப்படம் எப்போது முடியும்? ஊர் மக்கள் ஆர்வமாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.

கையொடிந்த விபத்திலிருந்து நாம் முற்றாக வெளிவந்து விட்டோம் என்பதாலும், பழைய நலத்துடன் இருக்கிறோம் என்பதாலும் – ‘எப்பொழுது அடுத்த வேலையை ஆரம்பிப்பீர்கள்?’ என்ற கேள்வி அவரிடம் இருந்து வந்தது.இனி நமக்கு மருத்துவம் தேவைப்படவில்லை என்பதால் விரைவில் வேலை ஆரம்பித்து விடலாம் என்ற உறுதியைக்கொடுத்தோம். 

அதற்கு முன்னர், Feature film முக்கான திரைக்கதை வேலையை முடித்துவிட்டு, அடுத்ததாக சிலை நிறுவுதல் பணியைத் தொடரவிருப்பதாக நமது நிலைமையைச் சொன்னோம்.பிரமிள் பிறந்த நாளாகிய ஏப்ரல் 20 அன்று சிலை திறப்பு வைத்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கூறிய போது மகிழ்ந்தேற்றார்.

 “பிரமிளின் புத்தகம் ஒன்றை, படிப்பதற்குக் கேட்டிருக்கிறார் எம்.எல்.ஏ” என்றார். ஊராட்சி மன்றத்தில் நாம் ஒப்படைத்திருக்கிற பிரமிள் படைப்புகள் ஆறு தொகுதிகளிலிருந்து ஏதாவது ஒன்றை எம்மெல்ஏவுக்குத் தரலாம் எந்தத் தொகுப்பை தருவது சரியாக இருக்கும்? என்று கேட்டார். பிரமிளின் பேட்டிகளும்  உரையாடல்களும் என்ற தொகுதி பொருத்தமாக இருக்கும்; அது ஐந்தாம் தொகுதி;ஆனால் ஊராட்சி மன்றத்தில் இருக்கும் தொகுப்பிலிருந்து தர வேண்டாம். அது, கரடிகுடி ஊராட்சி மன்றத்தின் சொத்து.சென்னையிலிருந்து, கால சுப்ரமணியத்திடம் சொல்லி அனுப்பி வைக்கிறோம்” என்றோம். ஆக, இந்த மூவருடன் ஒரு உரையாடல் முடிந்த பின்னர் பிரமிள் நினைவிடம் சென்றோம்.

சுடுகாட்டின் ஊடே பிரமிள் நினைவிடம் நோக்கி நடந்துகொண்டிருந்தபோது,சுடுகாட்டைச் சீர்படுத்தி அழகுமயமாக்குவதற்கு என்று அவர் வைத்திருக்கும் திட்டத்தைத் தெரிவித்தார். நினைவிடத்தின் முகமெதிரே பரந்து கிடக்கும் நிலத்தை எவ்வளவு அழகுற அமைக்கப் போகிறார் என்ற கனவையும் விவரித்தார். 

அழகை ஆயுட்காலம் முழுவதும் கணங்கள் தோறும் பருகி வந்தவரான பிரமிளின் கண்ணெதிரே அழகுற அமையப்போகும் அந்த இடத்தை, நாமும் நமது கனவில் கண்டு பார்த்தோம். 

கரடிகுடி மக்களுக்குச் செய்வதாக அவர் கொடுத்த உறுதிமொழிகளை  நிறைவேற்றிக்கொண்டு வருகிறார். அவர் கொடுத்திராத உறுதி மொழியாகிய ‘பிரமிள் நினைவிடம் அமைத்தல்’ என்பதை,அவர் கொடுத்திருந்த உறுதி மொழிகளைக் காட்டிலும் சிறப்பாக முடித்துக்காட்ட வேண்டும் என்பதில் திண்ணமாக இருக்கிறார். 

நினைவிடம் தூய்மையாககப்பட்டிருந்தது. அந்த வேலைகளை திரு.ஜெகதீசன் முன்னின்று ஆட்களை வைத்து நடத்தி முடித்திருந்தார். மேடை மீது பூக்களைத் தூவி விட்டுமேடையை மலர்வயமாக்கலாம் என்று சொன்னார் திரு ஜெகதீசன். அதற்கென்று பூ மாலையில் இருந்து பூக்களைப்பிரிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஏனெனில் அதற்கென்று உதிரிப்பூக்கள் தனியாக ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்து எடுத்து சமாதி மீது அடுக்கப்பட்டிருந்தது.  

கரடிகுடியை நெருங்குவதற்கு முன்னரே, அணைக்கட்டு பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு பூ மாலையை வாங்கி மகிழுந்தின் பின்னிருக்கையில் போட்டுவிட்டுத்தான் கரடிகுடிக்குள் நுழைந்திருந்தோம். பூமாலையை வாங்கும் பொழுது அந்தப் பூக்கார அம்மா, கடைசியாக சில பூக்களைத் தனியாக ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு கையில் அன்புடன் கொடுத்து, “இத்தப் பிச்சுப் போடுங்க சார் போய் மேடைல”என்று சொல்லிப் புன்னகைத்திருந்தார். பூமாலையை விற்பதற்கு முன்னரே, “இந்தப் பூமாலை எதற்காக வாங்குகிறீர்கள்?” என்று கேட்டிருந்தார். சட்டென்று விடை வந்தது அழகிரியிடம் இருந்து, “சாமிக்குப் போடப் போறோம்” இதைச் சொல்லிவிட்டு ஒரு முறுவலோடு அழகிரி நம்மை நோக்க, நமக்கு ஒரே சிரிப்பாக வந்துவிட்டது. உடனடியாகப் பேருந்து நிலையத்தின் திக்கில் விரைசலாக ஒரு முறை கழுத்தைத் திருப்பி – அந்தச் சிரிப்பு முகத்தசைகளில் நடனம் கொண்டுவிடக் கூடாது என்று மூச்சுக்குக் கட்டளையிட்டு –  மூச்சை உள்ளிழுத்து, அந்த மூச்சோடு சிரிப்புக்குச் சமாதி கட்டினோம். பின்னர்தான் அந்த அம்மையாரை நேர்கொண்டு பார்க்க முடிந்தது.

 “ஒரு பெரிய மனிதரின் சமாதியில் கிடத்துவதற்கான பூமாலை” என்றோம். அந்த மேடையின் அளவு என்ன என்பதையும் கேட்டு,பின்னர்தான் அந்த அம்மையார் பூமாலையை நமக்கென்று பரிந்துரைத்திருந்தார். தொங்கிக் கொண்டிருந்த மாலைகளில் பெரிய மாலை அது. வணிகர்கள் பெரிய இலாபத்திற்காக, பெரிய விலையுள்ள பொருட்களை சிபாரிசு செய்வார்கள் என்கிற வணிக சூத்திரம் நினைவிலிருந்து பிறந்து, அந்த எண்ணம்,தொலைக்காட்சித் திரையில் ஓடுகிற டிஜிட்டல் எழுத்துக்கள் போல ஆழ்மனதில் ஒரு வரியென இரகசியமாக ஓடிப் போனது. அந்த ஆழ்மன வரியைப் படித்துவிட்ட அம்மையார், “பெரிய மேடைக்கு இதுதான் சார் பொருத்தமா இருக்கும்!” நமக்கோ திக்கென்று இருந்தது!! அடுத்த கட்டமாக விலை பேரம் ஆரம்பமாகியது. பேரம் பேசுவதில் அழகிரி கில்லாடி.எப்படியென்றால், நமது பழைய கால கிராமத்துப் பெண்களை விட ஒரு படி மேல் – தப்பு தப்பு … பல படிகள் மேல். இந்த முறையும் அழகிரி தனது வேலையைக் காட்ட ஆரம்பிக்க,பேர உரையாடல் சுவைபட நெடுநெடுவென வளர்ந்தது.

 “180 ரூபா சார்” தொங்கிக் கொண்டிருந்த மாலையை, வறண்ட பார்வையால் வருடியபடியே அழகிரி : “ நூறு ரூபா வாங்கிங்கம்மா” “நூறு ரூவாய்க்குக் கட்டுபடி ஆகாது சார்” என்று சற்றே சிடுசிடுவெனக் குறுக்கிட்டார், நெடுநெடுவென வளர்ந்து அருகே நின்றிருந்த அவரது மகன். எங்களைப் பற்றி அம்மாவும் மகனும் நல்ல விதமாகக் கணித்தது தவறாகிவிட்டது என்ற தோல்வி அவரது குரலில் நடுங்கி அதிர்ந்தது. 

சற்று முன்னர் காரை வெகு தொலைவில் நிறுத்திவிட்டு, நல்ல பூக்கடையை கண்டுபிடிப்பதற்காகக்கடைத் தெருவில் நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது அழகிரியிடம் “பூக்கடைகளின் பக்கம் தலை திருப்பி வேடிக்கை பார்க்காமல் அலட்சியமாக, பார்வையை வேற இடத்தில் வைத்து கவனித்துக் கொண்டு வா அழகிரி;கண்டுபிடிச்சுருவாங்க!” என்று எச்சரிக்கை கொடுத்திருந்தோம். நீரின் மீனுக்கு – துடிப்பதற்கும்; காட்டின் மானுக்கு –துள்ளுவதற்கும் ; சினிமாக்கார அழகிரிக்கு – நடிப்பதற்கும்;சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன? படிக்காமலே 100 மார்க் வாங்கி விடுகிற பையனை, “நல்லாப் படி” என்று சொல்லுகிற முட்டாள்தனம் போல் ஆகிவிட்டது நமது போதனை. அதனால்தானோ என்னவோ… கடைத் தெருவின் இரு மருங்கிலும், பூமாலைகள் தொங்கிக் கொண்டிருக்க மேசைகள் மீது பூக்கள் பரப்பப்பட்டிருக்கப் பரபரவென்று இயங்கிக் கொண்டிருந்த பூக்கடைகளைக் கண்டும் காணாமல் கண்டு நடந்து கொண்டிருந்த எங்களில் நம்மை மட்டும் நோக்கி அந்த அம்மையார் “சார் பூ வேணுமா?” என்று கேட்டார். அம்பு குத்தியது போல் இருந்தது நமக்கு. காதில் விழவில்லை என்பது போல் நாம் நடந்து நடித்ததைக் குரலால் மறித்து, “வாங்க சார் … பூ மால” என்றார். உண்மையில் நாம் அதிர்ந்து போனோம் அழகிரியும்தான். இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. இருவருமே சிரிப்பை இரகசியமாக முழுங்கிக் கொண்டோம். 

அந்த அம்மையாரின் கடையைக் கடந்து ஒரு 100 அடி காதில் கேட்காதது போல் நடந்து கடந்துவிட்டோம். இப்பொழுது முடிவெடுத்தாக வேண்டிய நேரம். அழகிரியைப் பார்த்து, “யப்பா… நம்ம திட்டம் போட்டு கூட நம்முடைய திட்டத்தை தானாக் கண்டுபிடிக்கிறாங்க அப்படின்னா அது பயங்கர சென்சிடிவிடி.இந்த சென்சிடிவிடிக்காக நாம அந்த அம்மாவுக்கு பிசினஸ் கொடுக்கலாம். ஓகே?” என்று பெருவிரலை மடக்கி உயர்த்திக்காட்டி, திரும்பி இருவரும் நடந்தோம் அம்மையாரின் கடை நோக்கி. 

அப்புறமாகத்தான், மேலே கண்டபடி பேர உரையாடல் நடந்திருந்தது. நெடுநெடுவென வளர்ந்திருந்த மகனின் சிடுசிடு வென்ற வார்த்தைகளைக் கேட்ட அழகிரி, ஸ்டீபன் ஹாக்கிங்சின் கருந்துளைக் கோட்பாட்டை விளக்குவதற்கு முந்தைய நிலைக்குள் ஆழ்ந்து போவது போல் தீவிரமாகத் தனக்குள் ஆழ்ந்து பயணித்த பின்னர், “ சரிமா … 150 ரூபாவாங்கிக்கங்க”… சற்று முன்னர் மூச்சுக் காற்றோடு உள்ளிழுத்து விழுங்கியிருந்த சிரிப்பு, “நான் வெளியே வந்து விடவா?” என்று பந்து போலத் துள்ளித் துள்ளிக் கேட்டது. அழகிரி மீண்டும் பேர விளையாட்டைத் தொடர முயற்சிக்க,“விட்டுருப்பா… கேட்டதக் கொடுத்துவிடலாம். பிரமிள் இதை விரும்ப மாட்டார்” என்று சொல்லிவிட்டு அந்த அம்மையாருக்கு 200 ரூபாய் கொடுத்தோம். 180 போக 20 ரூபாய்தான் பாக்கிதரவேண்டும். மாறாக 30 ரூபாயாகத் தந்தார் அந்த அம்மையார். அந்தப் பத்து ரூபாய், அந்த அம்மையார் அறிந்திராத பிரமிளுக்கு அவர் கொடுத்த மதிப்பு. ஆனால் அந்தப் பத்து ரூபாய் கோடான கோடிகளுக்கும் மேலானது. பத்து ரூபாய் வேறுபாட்டை, “பரவாயில்லையே” என்ற ஒரு வார்த்தை மூலம் நாம் அங்கீகரித்தோம்.

ஒரு ஓவியர், தான் வரைந்த ஓவியத்தில் இறுதியாகப் புன்னகையின் தீற்றலை ஏற்றியது போலொரு மென் முறுவலைக் காட்டினார்அம்மையார் . தானொரு பெரிய மனுஷி என்கிற தோரணையானது அகந்தையின்றி வெளிப்பட்டது. அத்தோடு நிறுத்தியிருக்கலாம். அடுத்தபடியாக, அன்பு கொண்டு சில உதிரிப் பூக்களை எடுத்து சிறிய பிளாஸ்டிக் கவரில் போட்டு நீட்டினார். “இது என்னங்கமா? போனசா?” “சமாதி மேடைல பிச்சுப் போடுங்க. நல்லா இருக்கும்” அப்படி அவர் கொடுத்திருந்த உதிரிப் பூக்கள்தான்  எங்களால் பிய்க்கப்பட்டன. 

பூக்களைப் பிய்க்கத் தொடங்கினார் திரு ஜெகதீசன். அவரை அடியொற்றினோம். பின்னர் ஊர்த்தலைவர் திரு கிரிதரன் அவர்களிடம் மாலையைக் கொடுத்து, நினைவிடத்தில் சார்த்தச் சொன்னோம். அவர் மறுத்து‘நீங்கள் போடுங்கள் சார் ‘ என்றார். மாட்டோம் என்று மறுத்து, அதற்குப் பொருத்தமானவர் ஊர்த் தலைவர்தான் என்பதை ஏற்க வைத்து, அவரையே மாலை சார்த்த வைத்தோம். 

ஒரு பூரிப்புடன்தான் மாலையைச் சாரத்தினார். வரலாற்றுக்கலைஞனுக்கு மாலை சார்த்திக் கொண்டிருக்கிறோம் என்கிற வரலாற்றுப் பெருமிதத்தில் அப்போது அவர் பொலிந்துகொண்டிருந்தார். மேலேறிக் கொண்டிருந்த சூரிய ஒளியில். சற்று முன்னர், கட்சியின் கூடுதலான பொறுப்பு ஒன்றுக்கு எம்.எல்.ஏவால் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். 

இப்படியாக நிறைவேறியது பிரமிள் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி●

Leave a Response