மெய்காண் கலைஞர் பிரமிள் – பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை

கவிஞர் பிரமிள் பிறந்தநாள் இன்று.(20.04.1939) அதையொட்டி இயக்குநர் தங்கம் எழுதிய கட்டுரை மீள் பதிப்பு செய்யப்படுகிறது…….

இன்னவூரில் இன்னாருக்கு இந்நாளில் இன்னார் பிறந்து இன்னின்ன செய்தார் என்றெல்லாம் புள்ளிவிவரங்களைக் கோர்த்தால் ஒன்று கிடைக்குமே அதுவல்ல பிரமிள் வரலாறு. பிரமிள் யார்?

அவரை ஏசுபவர்கள்கூட, ‘பெருங்கவி’ என்று ஏற்கின்றனர். காழ்ப்பு கொண்டு கபடத்துடன் கருத்துரைக்கிற அல்லது பொய்யுரைக்கிற அல்லது மெய்யுரைக்கிற இலக்கியக்காரர்களை விட்டுத்தள்ளிவிட்டு, உள்ளத்தில் தோன்றுகிறபடியே பிரமிளைப்பற்றி மதிப்பீடு வழங்குகிறார்களே அவர்களது மதிப்பீடுகளில் காணமுற்பட்டாலும், தட்டையான தோற்றங்களில்தான் காட்சியாகிறார் பிரமிள். பிரமிளின் முப்பட்டைத் தோற்றத்தைப் பிடித்துவிட முயன்றார் சங்கரராம சுப்ரமணியம். வேறெவரும்கூட முயன்றிருக்கக்கூடும்.

‘சென்ற நூற்றாண்டில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு பிரமிள்’ என்றொரு கருத்தைப் பலரும் வெளிப்படுத்துகின்றனர். தமிழின் மரபிலிருந்து கிளைத்தெழுந்து வந்தவர்களான மேற்கண்ட முப்பெருமகனார், தமிழைத் தத்தமது வாழ்கால மாற்றங்களுக்கு இசைவுறும்படியும், வருங்கால மாற்றங்களை நேர்கொள்ளும்படியும் புத்தாற்றலூட்டிப் புதுக்கியவர்கள் என்பதால் இணை மதிப்பீட்டுக்கு உரியவர்களாகிறார்கள் என்பது வரலாற்றில் நிலைத்துவிட்ட பார்வை. இது எவரது மதிப்பீட்டுப் புலனாய்வுத் துறை கொண்டும் துப்பறிந்து மேலே கொண்டுவரப்பட்ட மறைவுண்மையன்று.

பாரதியும், புதுமைப்பித்தனும் தமிழ் இலக்கியப் போக்கின் எதிர்காலத்தில் நேரடியாகப் பங்குசெலுத்துகின்றனர். பிரமிளின் தாக்கமானது வெறும் இலக்கியப் போக்குமாற்றங்களோடு மட்டுமே நின்றுவிடுகிற ஒன்றல்ல. முன்னையர் இருவரைக் காட்டிலும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். பழைய காலத்தில் குடும்ப சோதிடர் என்றொருவர் இருப்பாரே அதுபோலத் தமிழ் இனத்தின் சமூக சோதிடர் பிரமிள். தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலக் கலை இலக்கியப் பண்பாட்டு வரலாற்று ஆன்மீக மதவாத விபத்துகளைக் குறித்து ஆரூடம் சொன்னவர். உலக வரலாறானது தமிழின வரலாற்றை உருவழிக்கப் போகிறது என்பதையும், தமிழ்ச் சமூகம் இந்தப் புவியில் அழியாது உயிர்தரிக்க வேண்டுமானால் தமிழ்ச் சமூகத்திற்குள் ஏற்பட்டாக வேண்டிய ‘அகவிழிப்பு’ குறித்தும் ஒரு மாயக்காரனைப் போலக் ‘குறிப்புகள்’ கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அதனால்தான் முப்பெருமகனாருள் தனிப்பெருமகனார் ஆகிறார் பிரமிள். இப்படிச் சொல்லுவதால், ‘முன்னையோரைவிட இவர் பெரிய ஆளாக்கும்’ என்பதல்ல பொருள். பாரதியும், புதுமைப்பித்தனும், பிரமிளும் ஒரே ஆற்றலே என்றும் வெவ்வேறு ‘காலவெளி’களின் வேறுவேறு வடிவங்கள் என்றும் புரிந்துகொள்வோம்.

பிரமிளின் காலவெளி என்பது மெய்விழிப்பர் ஜே.கிருஷ்ணமூர்த்தியாரின் பேரறிவுப் பெருங்கருணை ஒளிக்கதிர்கள் மானுடகுலப் பரப்பெங்கணும் பாய்ந்து நுண்ணுணர்வுள்ள உள்ளங்களில் மனிதாயப் பெருவிழிப்பு மொக்கவிழச் செய்த காலவெளியாகும். கிருஷ்ணமூர்த்தியின் இந்தச் செய்தியை, ‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’ என்ற ஒற்றை வரிக்குள் விதையென ஒளித்துவைத்திருக்கிறார் பிரமிள். விட்டைக்குள் கனியின் விதைபொதித்து மேலேறி விட்டைவீசி விதைபரப்பிக் காடுபண்ணும் பறவையவர். மானுடப் பரப்பெங்கணும் கிருஷ்ணமூர்த்தியின் ஆன்மீகத்தை முளைக்க வைக்கும் கவிதைவரி ‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’; தமிழ்ப் பரப்புக்குள் முடங்கிவிடக்கூடிய வரியல்ல. ஏனெனில் அவர் உலகக் கவிஞர்; ஆன்மீகக் கவிஞர். அதே போழ்தில் தமிழ் இனத்தின் அரசியல் விடுதலைக்காகவும் எழுதியவர். அவரது ஒரு விழி உலக மாந்தரின் ஆன்மீக விடுதலை என்றால் மறுவிழி தமிழரின் அரசியல் விடுதலையாகும்.

புத்தர் மலர்ந்ததற்குப் பின்னர் கீழைத்தேயக் கலை இலக்கியப் பண்பாட்டு அரசியல் போக்குகள் துரிதப்பட்டது போல், ஏசுநாதர் உயிர்த்தெழுந்ததற்குப் பின்னர் மேலைத்தேயக் கலை இலக்கியப் பண்பாட்டு அரசியல் போக்குகள் துரிதப்பட்டது போல், ஜே.கிருஷ்ணமூர்த்தியார் விழிப்புற்றதற்குப் பின்னர் இங்கத்தைய கலை இலக்கியப் பண்பாட்டு அரசியல் போக்குகள் துரிதப்பட்டிருக்கவில்லை. முன்னவர் இருவரதும் மெய்யியக்கச் செயல்பாட்டு அடித்தளங்கள் மீது சமயங்கள் எழும்பி நின்றன. கிருஷ்ணமூர்த்தியோ, இருந்த “ஸ்டார்’ (1911) அமைப்பைக் கலைத்ததோடு நிற்காமல், தான் இனி எவருக்கும் குருவல்ல; தனக்குச் சீடர் என்பாரும் இல்லை (1929) என்று அறிவித்தவர்.

இதுகாறும் மானுடகுலம் கண்டிராத அளவில் மெய்யறிவு மரபின் நுண்மைகளைத் துலங்கப் பண்ணிய, இருபதாம் நூற்றாண்டின் புத்தம்புதுக்கியான மெய்விழிப்பர் ஜே.கிருஷ்ணமூர்த்தியாரின் வீச்சுக்கு முற்றாகத் தன்னை ஒப்புக்கொடுத்தவர் பிரமிள். கிருஷ்ணமூர்த்தியின் பெருஞ்செய்தியாகிய ‘விழிப்புணர்வு’ என்ற ஒற்றைச் சொல், தன்மய ஆற்றலின் கபடவடிவங்கள் அனைத்தையும் கண்டுணர வல்லது என்று கண்டுணர்ந்து இருந்தார். நிகழ்கணத்தில் விழிப்புணர்வுடன் இருத்தலே மெய்யறிவு என்பதைத் தனது எழுத்துகளில் தொடர்ந்து பதிவுசெய்து வந்தவர். மரணத் தறுவாயிலும் – நோயினால் அழுந்திக்கொண்டிருந்த வதைகாலத்தில்கூட – தன்விழிப்பு பிறழாதிருந்தது பிரமிளிடம்.

வாழ்வின் பொருளைப் புரிந்துணர்வதற்குத் தன்விழிப்பு தவிர முறைகளேதுமில்லை என்று அறிவித்தவர் #ஜே_கிருஷ்ணமூர்த்தி. தத்துவங்கள், கோட்பாடுகள் என்று அறியப்பட்டிருந்த அறிவுமுறைகளையும்; மதங்கள், மடங்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று நடப்பிலிருக்கிற அமைப்பு முறைகளையும்; சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்ற பின்பற்று முறைகளையும்; சட்டங்கள், கட்டளைகள், நெறிமுறைகள் போன்ற கெடுபிடிகளையும்; கடவுளரின் உருவங்கள், மதநூல்கள் போன்ற வழிபாட்டுக்கு உரியனவற்றையும்; தியானம், தவம் போன்ற பயிற்சி முறைகளையும்; ‘அனைத்துக்கும் அப்பால் உள்ள ஒன்று’ என்பது போன்ற நம்பிக்கைகளையும் முற்றிலுமாகப் புறக்கணித்தவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி. அறிந்தவை அறிவல்ல; அறிந்ததனின்றும் விடுதலை அடைவதே அறிவு என்று அறிவுறுத்தியவர். அறிந்ததனின்றும் விடுதலை என்பது மீண்டும் குழந்தைமைக்குத் திரும்புதல். குழந்தை பிறந்த கணத்திலிருந்து ஆளுமையாக உருவடையும் பருவம் வரையிலான உள்ளத்தை, ‘உட்கிரகிக்கும் மனம்’ என்கிறார் குழந்தை உளவியல் கலைஞரான மேதை மரியா மான்ட்டிசோரி. உட்கிரகித்தவற்றால் ஆளுமையேற்றம் பெற்ற ஒருவர் இதுகாறும் அறிந்ததனின்றும் விடுதலை பெறுவது எப்படி? ஏன் விடுதலை பெறவேண்டும்? . . . கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கான விடைகள் எந்த மதநூலிலும் இல்லை; எந்த குருமாரிடமும் இல்லை. இருப்பவைகளெல்லாம் கேள்விகளே; விடைகளல்ல. கேள்விகளே பயணம்; விடைகளல்ல. விடைகள், அடைந்துவிட்ட இலக்குகளாகும். இலக்குகள், பயணம் முற்றுப்பெற்றுவிட்டதை அறிவிக்கின்றன. வாழ்தல் என்பது அனுபவித்தல், அறிதல், உணர்தல் ஆகியனவாம். வாழ்தல் என்பது ‘நிகழ்கணத்தில்’ இருப்பதாகும். வாழ்வு என்பது உருவாக்கச் செயல்பாடு உறைந்துவிட்ட வடிவத்தை எய்திவிட்ட பொருளன்று; இடையறாத இயக்கவுயிர்ப்பாகும். வாழ்க்கையைப் பற்றிய எத்தகைய கருத்தும், எவருடைய கருத்தும் வேறொருவருக்கு வாழ்வைப் புரியவைத்துவிடாது. புறவுலக இயக்கத்தையும், அகவியக்கத்தையும் இடையறாத விழிப்புடன் உற்றுநோக்குவதன் வழியே’தான்’, ‘தான்’தான் வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். ‘தான்’தான் தன்னைப் புரிந்துகொள்ள முடியும். குருமார்களால் எதுவும் ஆகப்போவதில்லை என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. குருசீட மரபைப் புறக்கணித்த கிருஷ்ணமூர்த்தியிடம் பிரமிள் தனது அகந்தையை ஒப்புக்கொடுத்தவர் என்றால் குருசீட மரபை ஏற்றுக்கொண்டவரா பிரமிள்? அல்ல; தன்மயத்தை ஒப்படைத்தவர்.

தன்மயத்தை ஒப்படைத்தலே பெருவாழ்வு. பெருவாழ்வு என்பது பெரிய ‘நான்’ அல்ல; பெரிய ‘எனது’ அல்ல; பெரிய தன்மயம் அல்ல.. பேரியற்கைக்குள் தன்மயத்தை ஒப்படைத்தல் அல்லது வரலாற்றுக்குள் தன்மயத்தை ஒப்படைத்தல் என்ற இரண்டு வழிகள்தான் உள்ளன. முதலாவது வகையினர் மெய்விழிப்பரென்றும், இரண்டாவது வகையினர் புரட்சிக்காரரென்றும் கருதத்தக்கவர். மெய்விழிப்பர் அன்பின் வழியிலும், பரட்சிக்காரர் சினத்தின் வழியிலும் உலக மாறுதல்களை உருவாக்க முயல்பவர்கள். ஒரு வகையில் இரு வகையினரும் ஒருவகையினரே. ‘புத்தரின் ஈகத்திற்கு இணையானது சேகுவேராவின் ஈகம்’ என்று ராம்சுரத்குமார் யோகியார் பிரமிளிடம் வெளிப்படுத்திய கூற்று, தமிழ் அறிவுலகிலொரு திறப்பைக் கொணர்ந்த ஒன்றாகும்.

‘தான்’ என்ற தன்மயத்தை அழித்தொழித்த மெய்விழிப்பரும், ‘தான்’னின் நிழலான ‘தன் பற்றை’ அழித்தொழித்த புரட்சிக்காரரும் வெவ்வேறு முறைகளில் விடுதலை பெற்ற உயிராற்றலின் மனித வடிவங்களாவர். அதனால்தான் இந்த இரண்டு தரப்பினரும் உலக மானுட விடுதலைக்காகத் தலைமையேற்கும்படி காலம் இவர்களை வேண்டிக்கொள்கிறது. இரண்டு தரப்பினரின் பயணங்களும், பயணவழிகளும் வேறுவேறானவை. இரண்டின் நோக்கமுமே விடுதலை. ஒன்று அகவிடுதலை; மற்றொன்று புறவிடுதலை. ஒன்று அகப்புரட்சி; மற்றொன்று புறப்புரட்சி. ஒன்று அறிந்ததனின்றும் விடுதலை; மற்றொன்று அறிவின் வழிகொண்டு விடுதலை. ஒன்று தன்மயத்திலிருந்து தனிமனிதர்கள் விடுவித்துக்கொள்வதன் விரிவே சமூக விடுதலை என்கிறது. மற்றொன்று சமூகவிடுதலைக்குள் தங்கியிருக்கிறது தனது விடுதலை என்கிறது. ஒன்று பேரண்ட ஆற்றலுக்குள் ‘தான்’னைக் கரைத்துக்கொள்வதற்காக, ‘தான்’ பயணிக்கும் வழி. மற்றொன்று மானுடகுலப் பெருவரலாற்றுள் தன்னைக் கரைத்துக்கொள்வதற்காக, ‘தான்’ பயணிக்கும் வழி. ஒன்று அன்பின் வழி; மற்றொன்று சினத்தின் வழி. இரண்டுக்கும் நடுவிலிருக்கிறது ஒரு மெலிய கோடு. அதுதான் மெய்காண் கலைஞரின் பாதை; அதுதான் பிரமிளின் பாதை. புத்தரின் பயணவழிக்கும், சேகுவேராவின் பயணவழிக்கும் இடையிலிருக்கிற இந்த மெலிய கோட்டின் மீது நடையிடும்பொழுதில் இப்புறத்தே சரிந்தால் மெய்விழிப்பராகவும், அப்புறத்தே சரிந்தால் புரட்சிக்காரராகவும் ஆகிவிடக்கூடும். ஆனால் தன்வழியில், தனிவழியே நடந்தவர் பிரமிள். இருபுறமும் கண்ணுற்றபடி தன்வழியில் நடையிட்டவாறே புத்தரின் உலகு கையளிக்கிற மெய்யையும், சேகுவேராவின் உலகு கையளிக்கிற மெய்யையும் ஏந்திப்பெற்று எழுத்தாக வெளிப்படுத்திச் சென்றார்.

பிரமிளின் இந்தப் பாதை, முன்னர் எவரும் நடந்து துலங்கப்பண்ணியிருந்த பாதையல்ல; மேலும், பாதையே அல்ல. பாதையற்ற வெளியில் பிரமிளைத் தள்ளிவிட்டு, பிரமிளின் பயணத்தைத் தீர்மானித்தவர் ஒரு மெய்விழிப்பர்; திருகோணமலை சாது அப்பாத்துரையார் அவர்கள். பிரமிளின் வளரிளம் பருவத்தில், கைக்கடிகாரத்தைக் கடற்கரையில் கழற்றி வைத்துவிட்டுக் கடல்நீச்சலுக்குச் சென்றிருந்த பிரமிள் திரும்பிவந்து கண்டபோது கடிகாரம் காணாமல் போயிருக்க, இதன் விளைவான கேள்விகளுடன் அப்பாத்துரையாரிடம் பிரமிளை அழைத்துச் சென்றிருக்கிறார் பிரமிளின் தாயார். இப்படியாக, வளரிளம் பருவத்தில், தன்மயம் இறுகி கெட்டிப்படுவதற்கு முன்னரே மெய்விழிப்பரொருவர் நேரடியாகக் காட்சியாகிறார் பிரமிளுக்கு. பிரமிளின் அகவுலகைத் திறந்துவிட்டவராகவும், பாதையற்ற வெளியில் பிரமிளைத் தூக்கிச் சுழற்றியெறிந்து தனது பாதையைத் தனது காலடிச் சுவடுகள் கொண்டே சமைத்துக்கொள்ளும்படியான படைப்புச் சவாலுக்குள் பிரமிளைத் தள்ளிவிட்டவராகவும், பிரமிளின் ஆரம்பகால அறிவியக்கத்திற்குப் பொறுப்பேற்கிறார் அப்பாத்துரையார்.

மெய்விழிப்பின் நேர்வடிவென அப்பாத்துரையார் பிரமிளின் வாழ்வில் தோற்றங்கொடுப்பதற்கு முன்னரே மெய்விழிப்பின் அறிவுலகவடிவத்தை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூல்களுக்குள் கண்டிருந்தார் பிரமிள். தனது தன்மயத்தை ஒப்புக்கொடுப்பதற்காக அப்பழுக்கற்ற மனிதாயத்தைத் தேடிக்கொண்டிருந்த பிஞ்சு உள்ளமானது அப்படியொரு மனிதாயத்தின் நேர்வடிவென அப்பாத்துரையார் நின்றபொழுதில் அந்த மனிதாயத்தைத் தொழுதேற்றுக்கொண்டது. இவ்வகையில், பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகிற கடவுள்மார்களிடம் அல்ல, தன்னைப் போலவே உண்டுறங்கி கழிவு நீக்கி உயிர் தரிக்கிற மனிதப்பிறவியிடம் ‘தான்’னை ஒப்படைக்கிற மெய்யறிவு மரபின், தன்னடக்க மரபின் தொடர்ச்சியாகும் இது.

அங்குலிமாலா என்ற திருடர் புத்தர் பெருமானை நேரடியாகக் கண்டுவிழித்து புத்தர் பெருமானின் சீடராக மாறிய கதையொன்று உண்டு. சிலுவையில் அறையவேண்டியது ஏசுநாதரையா அல்லது திருடனும் கொலைகாரனுமாகிய அடிமை பாரபாஸையா என்ற கேள்வியை ரோமப் பேரரசு மக்கள் முன்னே வைக்க, ‘வாக்களித்து’ பாரபாஸை மக்கள் விடுவிக்க, ஏசுநாதரைக் கண்டுவிழித்த பாரபாஸின் அகம், ஏசுவின் மெய்யறிவைப் பரப்புகிற சீடராக பாரபாஸை வழிநடத்திற்று என்பதற்கான கதைகள் மேற்குலகில் காணக்கிடைக்கின்றன. அவ்வளவு ஏன், ஏசுவைச் சிலுவையில் ஏற்றியவனே ஏசுவின் மெய்யறிவைப் பரப்புகிற பெருந்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதோடு, ‘கிறித்துவன் என்று தன்னை ஒருவர் அழைத்துக்கொள்வதென்பது அரசகுற்றம்’ என்ற கொடுஞ்சட்டத்தை எள்ளிநகையாடியபடி ‘கிறித்துவன்’ என்று தன்னை அழைத்துக்கொண்டு அரசகொலைக்கு வாழ்வை எதிர்ப்பின்றி ஈகம் செய்தார் என்ற கதைகளும் கிறித்துவ நூல்களில் காணக்கிடைக்கின்றன.

உலக நிலைமை இவ்வாறிருக்க, கலையுள்ளம் வாய்த்த ஒரு விடலை, நுண்ணுணர்வு துடிக்கும் ஒரு விடலை, எப்பொழுதுமே தீவிர நிலையில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு விடலை, மெய்விழிப்பர் ஒருவரை நேரில் கண்டால் என்ன ஆவார் விழிப்படைவதைத் தவிர? மெய்விழிப்பர் ஒருவரிடம் இப்படி ஒப்புக்கொடுக்கப்பட்டதொரு தன்மயம் பிற்காலத்தில், தன்மயத்தின் இயங்குமுறை குறித்து ஜே.கிருஷ்ணமூர்த்தி நுட்பமாக விளக்கிச் செல்லுகையில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் விளக்கம் போல் அல்லாது தனது விளக்கமே போல் விளங்கிக்கொள்ள இயலுமாயிற்று. சாது அப்பாத்துரையார் தனது தீவிரத் தன்மையாலும், செயல்முறைகளாலும் பிரமிளின் மெய்விழிப்பைத் தூண்டிக்கொண்டிருந்தது போல் அல்லாமல் ஜே.கிருஷ்ணமூர்த்தி நவீன மொழியில் நுண்ணிய தர்க்கங்களால், மானுடகுல மெய்யறிவு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத வகையில் தன்மயத்தின் நுண்ணியக்கத்தை விளக்கிச் செல்லுகையில் பிரமிள் அதை இலகுவாக வாங்கிக்கொண்டார்.

அடையாறு தியாஸபிக்கல் சொஸைட்டிக்கு ஆண்டிறுதிச் சொற்பொழிவுக்காக ஜே.கிருஷ்ணமூர்த்தி வருகை தந்த பொழுதிலெல்லாம் அங்கிருந்தார் பிரமிள். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்குப் பின்னர் பிரமிளின் இறுதிக்காலம் வரையிலும் J.K.Foundation நூலகத்தில் உறுப்பினராயிருந்து நூல்கள் வழியாகவும், சனிக் கிழமைகளின் காணொளித்திரையிடல் வழியாகவும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மெய்யறிவுடன் தொடர்புறுபவராக, தொடர்ந்து அங்கு சென்றுவந்துகொண்டிருந்தார்.

பிரமிள் தனது இளமைப் பருவத்தில், திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் கிளம்பிப் போய் யோகர் சுவாமிகளைச் சந்தித்து வந்திருக்கிறார். அப்பாத்துரையின் மெய்மொழிகளைத் தொகுத்து அவர் எழுதிய நூலான தியானதாராவை “To the eight impossible friends” என்று குறிப்பெழுதி – சாது அப்பாத்துரையார், யோகர், தங்கப்பொன்னு, ஜே.கிருஷ்ணமூர்த்தி, மாயம்மா (சேலத்தில் இருக்கிறது அம்மையார் சமாதி), நயினார் சுவாமி, யோகிராம் சுரத்குமார் ஆகிய மெய்விழிப்பர்களுக்குப் படையலாக்கியிருக்கிறார். அப்பாத்துரையார் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து மறைந்ததொரு மெய்விழிப்பராவார். அவரது மெய்யுரைகள் பிரமிளால் மட்டுமே எழுத்து வடிவில் பதிவாகியிருக்கின்றன. மெய்விழிப்பை நேரடியாகத் தூண்டிவிடக்கூடிய நூலாகும் தியானதாரா. 1964 ல் அப்பாத்துரையார் காலமாகிவிட்டார். 1989-ல் கால சுப்ரமணியத்தின் லயம் வெளியீடாக வெளிப்பட்டது தியானதாரா. மெய்விழிப்படைந்த ஒருவரால்தான் அத்தகையதொரு நூலை எழுதவியலும். இலக்கியப் பயிற்சிகளால் கூடிவருவதல்ல. உண்மையில் பிரமிள் வெறும் கவிஞரோ, கலைஞரோ, விமர்சகரோ அல்ல. அவரது அடையாளம் ஆன்மீக உலகு சார்ந்தது.

கலைத் துறையினரோடும், அறிவுத் துறையினரோடும் இடையறாத மோதல்கள் நிலவிவந்தபோதிலும் ‘மெய்விழிப்புடன் இசையுறவு’ கொண்டிருந்தார் பிரமிள். ‘எல்லோரிடமும் சண்டையிட்டுக்கொள்வார் பிரமிள்’ என்றொரு கருத்து உண்மையைப் போல் நிலைத்துவிட்டது. எப்படியென்றால், ‘ஒல்லியாக இருப்பாரே அவரா?’, ‘குண்டாக இருப்பாரே அவரா?’, போன்ற கேள்விகளுக்குள் இருக்கிற ஒருவரின் அடையாளம் அந்த ஒருவரைப்பற்றிய உண்மையைக் கொண்டிருப்பது போல, ‘எல்லோரிடமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பாரே அவரா?’ என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கேட்டு ‘சண்டைக்காரர்’ என்ற கருத்து உண்மைபோல விதைக்கப்பட்டுவிட்டது.

தமிழ் கலைத் துறையினரோடும், அறிவுத் துறையினரோடும் முரண்பட்டு வாழ்ந்தவர்தான் பிரமிள். ஆனால் எல்லோருடனும் முரண்பட்டு வாழ்ந்தவரல்ல. உண்மையில் பிரமிள், மலர்ந்த மனிதர்கள் எவருடனும் முரண்கொண்டவரல்ல. உலக மாந்தரொடு இசைவுடன் உறவு பூண்டு மகிழ்வதும் மகிழ்வுறுத்துவதும்’தான்’ அவரது விழைவு. இவ்வகையில், தனது அன்பைக் கொண்டு பிறரை நனைவிக்கும் தருணம் வாய்த்த பொழுதிலெல்லாம் உருவழிந்து அன்பென ஒழுகியவர். பிரமிளுக்கும் அடுத்தவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்குக் காரணமாக எப்பொழுதும் அமைந்து வந்திருப்பது – ‘மெய்’! மெய்யை மெய்யென்று அகந்தையின்றி ஏற்றுக்கொண்டவர்களோடு ஒருபோதும் முரண்பட்டவரல்ல. ஏனெனில், மெய்யை, மெய்யென்று, மெய்தானென்று, எந்தத் தருணத்திலும், எவரிடத்திலும் ஒத்துக்கொண்டவர் பிரமிள். மெய்யை, மெய்யென்று, மெய்தானென்று, எந்தத் தருணத்திலும், பிரமிளிடத்தில் ஒத்துக்கொண்டவர்களோடு பிரமிள் ஏன் முரண்பட்டதில்லை; அதன் பெயர் ‘அறிவொழுக்கம்’

அறிவொழுக்கம் எனப்படுவது – மெய்யை மெய்யென்று ஏற்பதும், .மெய்யல்லாததை மெய்யல்லாதது என்று உரைப்பதும் ஆகும். இந்த அறிவொழுக்கமே பிரமிளை நடத்தியது. இந்த அறிவொழுக்கத்தைப் பயிலாதவர்களோடுதான் பிரமிள் முரண்பட்டார். பெரிய பெரிய கலைஞர்களென்று பெயரெடுத்தவர்களுக்கெல்லாம்கூட இந்த அறிவொழுக்கம் வாய்த்திருக்கவில்லை. கலை கைகூடுவதாலேயே இந்த அறிவொழுக்கம் வாய்த்துவிடும் என்பதற்குமில்லை. ஊட்டம் கொடுத்து ஊட்டம் கொடுத்துத் தன்மயத்தைப் பேணி வளர்த்தவாறே கலை நுட்பங்களைக் கற்றுக்கொண்டு தன்னைக் கலைஞனாக நிறுத்திக் கொள்வதொன்றும் கடினமானதல்ல. அகமலர்ச்சியற்ற இத்தகையவர்கள் தமது கலைநுட்பங்களைக் காட்டிப் பேர்பண்ணிக் கொள்வதென்பதும், விருதுகளைக் கைப்பற்றிக் கொள்வதென்பதும், மீசை முறுக்கிக் கொள்வதென்பதும், மார்தட்டிக் கொள்வதென்பதும் கலையுலக வழமைதான். இந்த வழமையை அடித்து நொறுக்கியவர் பிரமிள். ‘கலை என்பது தொழில்நுட்பமல்ல; மெய்காணுதல் என்றார். கலைஞர் என்பவர் மெய்யுரைப்பவர் என்றார். கலைவாழ்வு என்பது மெய்விழிப்பு என்றார்.

காலங்காலமாக மானுடகுலத்தின் தீராத முரண்களுக்கெல்லாம் காரணமாவது தன்மயம் என்பதால், தன்மயத்தைக் கரைத்துக்கொள்ளாதவர்கள் எத்தகைய கலைப்பயிற்சி பெற்றிருந்தவர் என்றாலும், காலங்காலமாக மானுடத்தின் தீராத முரண்களைத் தீர்ப்பதற்கு மாறாகப் பேணிவளர்ப்பவராகிறார் என்பதுதான் பிரமிளின் கண்டுபிடிப்பு. இந்தக் கண்டுபிடிப்பை – மெய்யை – ஏற்றுக்கொண்டால், ஊட்டம் கொடுத்து ஊட்டம் கொடுத்து ஊதிப் பெருக்கி ஊதிப் பெருக்கிப் பேணிப் பேணி வளர்த்தி நிறுத்தியிருக்கிற தங்கள் தன்மயம், பாவம், என்னவாகுமோ என்று தத்தமது தன்மயத்தின் மீது பேரன்பு பொழிந்தவர்களும், தங்கள் பிழைப்புவாதம் என்னவாகுமோ என்று கவலைப்பட்டவர்களும், தமிழ் அறிவுலகைச் சீர்குலைத்து விடுவதென்ற தங்களது கமுக்கமான வரலாற்றுத் திட்டங்கள் சீர்குலைந்துவிடக்கூடுமோ என்று அஞ்சியவர்களும்தான் பிரமிளோடு முரண்பட்டார்கள்.

இங்கு, பிரமிளோடு முரண்பட்டவர்கள் எவரெவர், முரண்பாடுகள் எவ்வப்பொழுது முளைத்தன என்றெல்லாம் குறிப்புகள் கொடுப்பது சாத்தியமற்றது. ‘பிரமிள் படைப்புகள்’ என்று தலைப்பிட்டு அவரது ஆய்வாளர் கால சுப்ரமணியம் ‘லயம்’ வெளியீடாகக் கொணர்ந்திருக்கிற ஆறு தொகுப்புகளின் மூவாயிரத்து நானூறு பக்கங்களில் அடங்கியிருக்கின்றன மேற்படி விவரங்கள்.

ஊட்டம் ஏற்றி தன்மயத்தை ஊதிப் பெருக்கி, கலையில் ‘தன்னை’ ஒளித்தவர்களுக்கும் ; உள்ளொளி ஏற்றி தன்மயத்தை எரித்துக் கருக்கி, கலையில் ‘தன்னை’ ஒளிர்த்தவருக்கும் இடையிலான கலையார்த்த, பண்பாட்டு, அரசியல், வரலாற்றுப் போராகும் பிரமிள் என்கிற மெய்காண் கலைஞரின் வாழ்வும் எழுத்தும்.

Leave a Response