ஒன்றிய வரலாற்றில் முதன்முறையாக – ஆளுநரை ஓடவிட்ட மு.க.ஸ்டாலின்

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டம் தொடங்கியது.காலை 10.01 மணிக்கு ஆளுநர் உரையாற்றினார்.

முன்னதாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததைக் கண்டித்தும், தமிழக அரசுடன் மோதல் போக்கைத் தொடர்ந்து கடைபிடித்து வரும் ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் காங்கிரசு, பாமக, மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

திமுக மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் அவரது ஆங்கில உரையைக் கவனித்துக் கொண்டு இருந்தனர். தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட உரையைத்தான் ஆர்.என்.ரவி படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, உரையின் 46 ஆவது பக்கத்தில் உள்ள முக்கிய பகுதியான, ‘‘சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக நிலைநாட்டுதலில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. இதனால் பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது’’ என்ற வாக்கியங்களை ஆளுநர் படிக்காமல் விட்டு விட்டார்.

உரையின் கடைசிப் பக்கத்தில், ‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திருநாடு’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. அதையும் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்தார்.

ஆளுநர் தனது ஆங்கில உரையைப் படித்து முடித்ததும் பேரவைத்தலைவர் அப்பாவு தமிழில் அதைப் படித்தார். தமிழ்நாடு அரசால் அச்சடித்துக்குக் கொடுத்த முழு உரையையும், ஆளுநர் படிக்காமல் விட்ட பகுதியையும் படித்து முடித்தார். அப்போது நேரம் காலை 11.30 மணி.

வழக்கமாக ஆளுநர் மற்றும் பேரவைத்தலைவர் ஆகியோர் உரையைப் படித்து முடித்ததும், தேசியகீதம் இசைக்கப்பட்டு பேரவையின் அன்றைய கூட்டம் முடிவடையும். ஆனால் நேற்று, பேரவைத்தலைவர் தமிழில் படித்து முடித்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அப்போது, ‘‘தமிழக ஆளுநரின் வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன் பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன. நமது திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாகச் செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டப்பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்யவில்லை. பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்துள்ள ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொண்டோம்.

ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, அவரால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறியதுமாகும். ஆகவே, சட்டப்பேரவை விதி 17-ஐ தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத்தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்ற தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

அப்போது அவையில் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதல்வர் மு.க.ஸ்டலின் தமிழில் கொண்டு வந்த வந்த தீர்மானத்தில் என்ன கூறப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை. அருகில் இருந்த தனது செயலாளரிடம், முதல்வர் பேசியது குறித்து கேட்டார். முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்தைப் பற்றிச் செயலாளர், ஆளுநரிடம் ஆங்கிலத்தில் கூறினார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் அவருக்கான இருக்கையில் அமர்ந்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர அவசரமாகப் பேரவையில் இருந்து வெளியேறினார். அவருடன் அவரது செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர்.

இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த, ‘‘தமிழக அரசால் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் தவிர ஆளுநர் தன்னிச்சையாகப் பேசியது அவைக் குறிப்பில் இடம் பெறாது என்ற தீர்மானம்’’ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, காலை 11.35க்கு சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்தது.

இந்திய ஒன்றிய வரலாற்றில் ஒரு ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்றும்போது, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, பின்னர் படிக்கும்போது அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் இதுபோன்று நடந்து கொள்வது இதுதான் முதல் முறை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக ஆளுநரின் செயலுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

பேரவை நிகழ்ச்சி முடிந்ததும் தேசிய கீதம் பாடப்படும். அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். ஆனால் கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே தேசிய கீதம் பாடும் வரை காத்திருக்காமல் ஆளுநர் எழுந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, திராவிட மாடல், சமூகநீதி, சுயமரியாதை, போன்ற சொற்கள் இடம்பெற்ற வரிகளைப் படிக்காமல் தவிர்த்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதேபோல், திராவிட மாடல் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு அரசு நடைபோடுகிறது என்ற வாசகத்தையும் படிக்கவில்லை. மேலும், தமிழ்நாடு அரசு என்ற இடங்களில் எல்லாம் ‘இந்த அரசு’ என்று ஆளுநர் படித்தார். அதேபோல், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற கலைஞரின் மேற்கொளையும் ஆளுநர் உச்சரிக்கவில்லை. திராவிட மாடல் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் புறக்கணித்தார். பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை திமுக அரசு வழங்கி வருகிறது என்ற வாசகத்தையும் அவர் படிக்கவில்லை. அதேபோல் வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம் மற்றும் பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர், கலைஞர் பெயர்களையும் படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.

இதனால் உடனடியாகப் பொங்கியெழுந்த முதலமைச்சர் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை உடனே கொண்டுவந்து நிறைவேற்றியதும் இந்திய ஒன்றிய வரலாற்றில் இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது.

Leave a Response