ஆளுநர் உருவபொம்மை எரிப்பு – கு.இராமகிருட்டிணன் அறிவிப்பு

அத்துமீறும் ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரிக்கப்படும் என தந்தைபெரியார் திராவிடர்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…….

தமிழ்நாட்டு மக்களால் வாக்களிக்கப்பட்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு தொல்லை கொடுப்பதுதற்காகவும்,
தன்னுடைய டெல்லி எஜமானர்களுக்கு கங்காணி வேலை பார்ப்பதற்காகவும்
ஆளுநர் என்ற நியமன பதவியில் அமர்த்தப்பட்ட ஆர்.என்.ரவி அவர்களின் வாய்நீளமும்,
அத்துமீறலும் அன்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தட்டிக் கேட்க ஆளில்லையென்றால் தம்பி சண்டபிரசண்டன் என்பது போல
இருக்கிறது ஆளுநரின் செயல்பாடுகள்.
ஆன்லைன் ரம்மி சூதாடிகளுக்கு குறைதீர்க்கும் முகாம் நடத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது போக மிச்சமிருக்கும் நேரத்தில் சனாதன தர்ம கதாகாலேட்சேபம் செய்கிறார். ஆனால் தமிழ்நாடு அரசு அனுப்பிவைக்கும் கோப்புகளை கவனிக்க நேரமில்லை.

இந்த நிலையில் அவர் நடத்திய ஒரு கதாகாலட்சேபத்தில், கடந்த அய்ம்பது ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு பின்னடைந்து விட்டதாக ஒரு பச்சை பொய்யை புளுகியிருக்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி யாருக்கு எஜமான விசுவாசம் காட்டுகிறாரோ அந்த பாஜக ஆட்சியின் ஒன்றிய அரசினுடைய ஒவ்வொரு துறை அமைச்சகங்களும் வெளியிடுகிற தமிழ்நாட்டின் முன்னேற்றம் குறித்த புள்ளிவிவரங்களைக் கூட இவர் படித்து பார்ப்பதில்லை போலிருக்கிறது.

உயர்கல்வி,மருத்துவம்,சுகாதாரம்,
தொழில்துறை,பொதுவிநியோகம்,
பெண்கல்வி,உள்கட்டமைப்பு,
மக்கள்நலத் திட்டங்கள் என அனைத்திலும் “திராவிடமாடல்” ஆட்சி நடக்கும் தமிழ்நாடு, வட மாநிலங்களை விட பலமடங்கு முன்னேற்றத்தில் இருக்கிறது.

ஆளுநர் ரவி அவர்களுக்கு இந்த உண்மைகள் தெரியாமல் இருக்காது.ஆனால் அவரது ஆழ்மனதில் படிந்திருக்கிற காவி அழுக்கும்,திராவிடர் இயக்க ஒவ்வாமையும் இந்த உண்மைகளை ஏற்கமறுக்கிறது. எனவே ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து பொதுவெளியில் புளுகுமூட்டையை அவிழ்த்துவிடும்
கீழ்த்தரமான வேலையில் வெட்கமின்றி ஈடுபடுகிறார்.

இவரது உரைகளை உளறல்களாக
நினைத்து எத்தனை நாட்கள் சகித்து கொண்டிருப்பது?
இதோ.. இன்று தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே சரியானது என்று ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனை கடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

இதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டு அரசோடு மோதிக் கொண்டிருந்த ஆளுநர் இப்போது நேரடியாக தமிழ்நாட்டு மக்களோடு மோதுவதற்கு தயாராகி விட்டார்.

வரலாற்றுக் காலத்திலிருந்து தமிழ்நாடு என்ற பெயர் விளங்கி வந்தாலும் அலுவல் வழியாகவும்,
அரசுமுறையிலும் “மெட்ராஸ் ஸ்டேட்”என்றிருந்ததை மாற்றி இந்த மண்ணிற்கு தமிழ்நாடு என்ற பெயர்சூட்டுவதற்கு நாம் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

“மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகும்,சென்னை ராஜதானியில் ஒட்டிக் கொண்டிருந்த பிற பகுதிகள் பிரிந்த பிறகும் மிச்சமிருக்கும் இந்த நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்ட முடியவில்லையென்றால் என்னுடைய பொதுவாழ்வு எதற்காக இருக்கவேண்டும்?” என்று சீறியவர் தந்தைபெரியார்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டவர் ஈகியர் சங்கரலிங்கனார்.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்திற்காக ஆட்சியை இழந்தாலும் மகிழ்ச்சியே என்று துணிந்து தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றியவர் பேரறிஞர் அண்ணா.

மொழி காக்கவும், தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டவும் உயிரைக் கொடுத்த வரலாறு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை.

தமிழ்நாட்டின் வரலாறு அறியாத ஆளுநர் தனக்கு உகந்த பெயர் தமிழகம் என்கிறார்.

மராட்டிய மாநிலத்தில் நின்று கொண்டு மும்பை எனக்கு ஒவ்வாது,பம்பாய் என்பதுதான் சரியானது என்று சொல்வதற்கு துணிச்சல் வருமா இவருக்கு?
தமிழ்நாட்டு மக்கள் சோற்றலடித்த பிண்டங்கள் என்ற நினைப்பா?

சங்பரிவாரங்களின் ஜால்ரா சத்தத்தில் தமிழ்நாட்டு மக்களின் குமுறல் ஒலி கேட்கவில்லையா?

எனவே,தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புக் குரல் ஆளுநரின் கேளாக் காதுகளுக்கு கேட்கும் வகையிலும்,
கொழுந்துவிட்டு எரியும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் முகமாகவும்
வருகிற 10.01.2023 செவ்வாய் அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்
தந்தைபெரியார் திராவிடர்கழகம் சார்பாக ஆளுநர் உருவபொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
கு.இராமகிருட்டிணன்.
பொதுச்செயலாளர்,
தந்தைபெரியார் திராவிடர்கழகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response