நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு எதிராக 2 நாள் நடைபயணம் – அன்புமணி அறிவிப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து என்.எல்.சி.அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வடலூாில் நடைபெற்றது.

இதற்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சபா.ராஜேந்திரன், வேல்முருகன், அய்யப்பன், அருண்மொழிதேவன், ராதாகிருஷ்ணன், சிந்தனைச்செல்வன் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை கி.சரவணன், என்.எல்.சி. நிர்வாக இயக்குநர் சதீஷ் பாபு, என்.எல்.சி.நில எடுப்புத்துறை அதிகாரிகள் விவேகானந்தன், கதிர்வேல், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அனைத்துக் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆனால் விவசாயிகள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பண்ருட்டி வேல்முருகன், அருண்மொழிதேவன் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி 2 நாள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…..

கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து காப்பாற்ற வேண்டிய பெரும் தேவையும், கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் அதனை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும். இயற்கை வளங்களும் அழிந்துபோகும். என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களைத் தருவதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.

என்.எல்.சி நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. அவ்வாறு என்.எல்.சி தனியார்மயமாக்கப்பட்டால், தனியார் நிறுவனத்தால் நிலங்களைக் கையகப்படுத்த முடியாது. எனவே, தனியார்மயமாக்குவதற்கு முன்பாகவே 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அதையும் சேர்த்துத் தனியாருக்கு விற்க என்.எல்.சி திட்டமிட்டிருக்கிறது. என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி இன்றும் நாளையும் என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எழுச்சி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Response