அன்பான இந்தியாவுக்கான பயணம் – இராகுல்காந்தி பெருமிதம்

காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ என்ற பெயரில்,2022 செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைபயணம் நடைபெற்றது. பின்னர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பயணம் தற்போது டெல்லியை அடைந்துள்ளது.

இந்தப் பயணம் தற்காலிக ஓய்வுக்குப் பின்னர் நாளை மறுதினம் மீண்டும் தொடங்குகிறது. டெல்லியைத் தொடர்ந்து அடுத்தகட்டப் பயணம் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு இராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது……

ஒற்றுமை நடைபயணம் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. இதைத் தடுக்க பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் எந்தளவுக்கு முயற்சி செய்கிறதோ, அந்தளவுக்கு நடைபயணம் சிறப்பாகவே நடந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் செயல்படுதல் மற்றும் சிந்தித்தலில் புதிய வழியை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த யாத்திரையின் போது பாதுகாப்பு விதிகளை பலமுறை நான் மீறியதாக ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு என் மீது வழக்கு போட முயற்சிக்கிறது. அதே போல கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைக் காரணம் காட்டி பயணத்தை நிறுத்த முயற்சிக்கின்றனர்.

இந்த விசயத்தில் அரசு அமைப்புகள் பாரபட்சமாகச் செயல்படுகின்றன. பாஜகவின் சாலைப் பேரணிகள் மட்டும் கொரோனா விதிமுறைகளை மீறாதது எப்படி சாத்தியம்? நான் குண்டு துளைக்காத காரில் பயணம் செல்ல வேண்டுமென உள்துறை அமைச்சகம் கூறுகிறது. அதை எப்படிச் செய்ய முடியும்? நான் நடைபயணம் மேற்கொள்கிறேன். அதற்கு தகுந்த பாதுகாப்பைதானே அவர்கள் தர வேண்டும்? இதையும் ஒரு பிரச்னையாக்க மட்டும்தான் பார்க்கின்றனர். ஆனால் பாஜக என்ன செய்தாலும் இந்த நடைபயணத்தை நிறுத்த முடியாது. இதில் கொரோனா தொற்று நோயைப் பயன்படுத்தும் அற்ப அரசியலை அவர்கள் கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

வெறுப்புக்கு எதிராக தேசத்தை ஒன்றிணைப்பதே இந்த யாத்திரையின் நோக்கம். அன்பான இந்தியாவை விரும்பும் அனைவருக்கும் இந்த யாத்திரையின் கதவுகள் திறந்தே உள்ளன. எங்களுடன் இணையும் யாரையும் நாங்கள் தடுப்பதில்லை. அகிலேஷ், மாயாவதி மற்றும் பலரும் யாத்திரையில் பங்கேற்க விரும்புகிறார்கள். இது எங்களுக்கு வெற்றிகரமான யாத்திரை.

இப்போது நாட்டில் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பலை வீசுகிறது. இது வெளியில் தெரியாமல் இருக்கிறது. எனவே, எதிர்க்கட்சிகள் தொலைநோக்குப் பார்வையுடன் ஒன்றிணையும் போது, பாஜக அவ்வளவு எளிதில் வெற்றியைப் பெற்று விட முடியாது. ஆனால் சில அரசியல் நிர்பந்தங்கள் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். அதை எல்லாம் ஒதுக்கி வைத்து எதிர்க்கட்சிகள் திறம்பட ஒன்றிணைய வேண்டும். மாற்றுப் பார்வையுடன் மக்களை அணுக வேண்டும். அப்போது நமது வெற்றி நிச்சயமாகும். அனைத்து எதிர்க்கட்சிகள் மீதும் நாங்கள் மரியாதை கொண்டுள்ளோம்.

நான் டிசர்ட் அணிவது ஏன் அவர்களின் கண்களை உறுத்துகிறது. இது எனக்கு வசதியாக இருக்கிறது. டெல்லியில் கடும் குளிர் வீசினாலும் டிசர்ட் அணிவது எனக்குப் பிடித்திருக்கிறது. குளிரால் எனக்கு சளி எதுவும் பிடிக்கவில்லை. அதனால் ஸ்வெட்டர் எனக்கு தேவையில்லை.

பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் இன்னும் ஆக்ரோசமாக எங்களை எதிர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது காங்கிரசுக் கட்சியின் சித்தாந்தத்தை மக்கள் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும். நான் அவர்களை எனது குருவாகக் கருதுகிறேன். அவர்கள் எனக்கு வழிகாட்டுகிறார்கள், அதாவது என்ன செய்யக் கூடாது? என எனக்குப் பயிற்சி தருகிறார்கள். அவர்களிடம் நிறையப் பணம் இருக்கிறது, ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் உண்மையுடன் போராட முடியாது.

இந்தியா வாடகை வாங்கும் தேசமாக இல்லாமல் உற்பத்தி செய்யும் தேசமாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் மருத்துவம், பொறியியல், சிவில் சர்வீஸ் மற்றும் சட்டம் ஆகிய துறைகளுக்கு அப்பால் சிந்திக்கும் கற்பனைச் சிறகுகளைத் தரக்கூடிய வகையில் கல்விக் கொள்கை இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response