அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை – அன்புமணி சூசகம்

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் 2022 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2023 ஆம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் புதுச்சேரி அருகே பட்டானூரில் நேற்று நடந்தது.

அதில் பாமக நிறுவனர் இராமதாசு, பாமக தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அன்புமணி, தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கலைந்து, சீரழிந்து, அழிந்துள்ளது. பாமக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியதால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். தற்போது அதிமுக 4 ஆக உடைந்து உட்கட்சிப் பூசலால் தவித்து வருகிறது. இதனால் திமுகவுக்கு அடுத்தப்படியாக 2 ஆவது பெரிய கட்சியாக பாமக தான் உள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் விரைவில் நடைபயணம் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் விளம்பர அரசியல் செய்கின்றனர். மேலும் ஒரு கட்சியில் இருந்து சத்தம் மட்டுமே வருகிறது. உள்ளே ஒன்றும் கிடையாது. அது எந்தக் கட்சி என்று நன்றாகத் தெரியும். தினமும் அவர்களைப் பற்றி செய்தி வரவேண்டும். அவர் என்ன பேசுவார் என்று அவருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கும் தெரியாது. ஆனால் சத்தம் மட்டும் வரும் என்று கூறி தனது கடிகாரத்தைக் காண்பித்து அவர் யார் எனத் தெரிகிறதா? என்று கேட்டார். அப்போது பாஜக அண்ணாமலை என்று நிர்வாகிகள் கோரசாக சத்தம் போட்டதால் சிரித்துக் கொண்டு முடித்துவிட்டார். சமீபத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தான் கட்டியுள்ள கடிகாரம் ரபேல் கடிகாரன் எனக் கூறியது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் கடிகாரத்தைக் காட்டி விளம்பர அரசியல் செய்து வருகின்றனர் என்று அன்புமணி அண்ணாமலையைத் தாக்கியதால் வருங்காலத்தில் பாஜகவுடனும் பாமக கூட்டணி அமைக்காது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response