காந்தி பெயரைச் சொல்ல தகுதி வேண்டும் – மோடி முன்னிலையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியிலிருக்கும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் 11,2022 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது…..

காந்திக்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவர் தனது வாழ்நாளில் 26 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். தமிழை விரும்பிக் கற்றவர். மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டவர். திருக்குறளுக்காகவே தமிழ் கற்க வேண்டும் என்று சொன்னவர். உயராடை அணிந்து, அரசியல் வாழ்வுக்குள் நுழைந்த அவரை, அரையாடை கட்ட வைத்தது தமிழ் மண். வட இந்தியர்கள் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அம்மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர்.

எந்தச் சூழலிலும் மற்றவர்களால் திருட முடியாத ஒரே சொத்து கல்வி. இக்கல்வியை சிறப்பாக வளப்படுத்துவது மாநில அரசின் கடமை. ஒன்றிய அரசிடம் ஒரு முறையீடு செய்கிறேன். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். சமூகத்திற்குச் சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்ற காந்தியடிகளின் சிந்தனையுடன், அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைக்க இளைஞர்களாகிய உங்களை வேண்டுகிறேன்.

உண்மை, ஒழுக்கம், வாக்குத்தவறாமை, சமமான நீதி, மதநல்லிணக்கம், வகுப்பு ஒற்றுமை, சிறுபான்மையினர் நலன், தனிநபருக்கான மதிப்பு, ஏழைகளின் நலன், அகிம்சை, தீண்டாமை விலக்கு, அதிகாரக்குவியலை எதிர்த்தல், ஏகபோகத்திற்கு எதிர்ப்பு, சுதந்திரமான சிந்தனை அனைவரது கருத்திற்கும் மதிப்பளித்தல், கிராம முன்னேற்றம் இவை தான் காந்தியத்தின் அடிப்படைகள்.

இவை அனைத்தும்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்கள். இவற்றைக் கடைபிடிப்பதன் மூலம் காந்தியின் பெயரைச் சொல்ல நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்வோம். இசைஞானி இளையராஜாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இளையராஜாவிற்கு இசைஞானி பட்டம் வழங்கியது தலைவர் கலைஞர்தான். உலக மாமேதை இளையராஜாவையும், மிருதங்க வித்வான் உமையாள்புரம் காசிவிஸ்வநாதன் சிவராமன் மற்றும் பட்டம் பெற்றுள்ள அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த கோரிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் பிரதமர் மோடியை மேடையில் வைத்து புகழமட்டுமே செய்த நிலையில், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் உரிமைக்கான கோரிக்கையை உரக்கப் பேசியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.

Leave a Response