நளினி உட்பட 6 பேர் விடுதலை – கொண்டாடித் தீர்க்கும் தமிழ்நாடு

இராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள நளினி, இரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும். நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், இரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரை விடுதலை செய்ய நீதிபதி ஆணையிட்டார்.

நளினி, ரவிச்சந்திரனின் மனுக்களை விசாரித்த பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நளினி உள்ளிட்ட அனைவரையும் முன்விடுதலை செய்ய தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இராஜீவ்காந்தி வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்பட 6 பேர் சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் வெளியே உள்ளார்.

இவர்களீன் விடுதலை உத்தரவை தமிழ்நாடு பெரிதாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு ஆறுதல் தரும் தீர்ப்பு, ஆளுநரின் பிழையை நீதிமன்றம் சரிசெய்திருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டப்பூர்வமான கடமையை ஆளுநர் தட்டிக்கழித்து வந்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் பாடம் புகட்டி இருக்கிறது, இனிமேலாவது தனது தவறை உணர்ந்து கொள்வார் எனவும் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு 7 பேருக்கும் விமோசனம் பிறந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மனசாட்சி, மனிதாபிமானமற்றவர் ஆளுநர் ஆர்.என்.ரவி என்றும் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

7 பேரையும் விடுதலை செய்யாமல் ஆளுநர் ரவி வேண்டும் என்றே காலம் தாழ்த்தினார் என திவிக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். 7 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு கால வரையறையை நிர்ணயிக்க வேண்டும். கோவையில் பல ஆண்டுகளாகச் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். சனாதனம், தேசிய கல்விக் கொள்கை பற்றிப் பேசுவதற்குத்தான் ஆளுநருக்கு நேரம் இருக்கிறது, தனது பணியைச் செய்ய நேரம் இல்லை என கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

இராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பேரன்பும்!என்று சீமான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இவர்கள் மட்டுமின்றி சமூகவலைதளங்களில் எல்லாம் ஆறு பேர் விடுதலை குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சிக் குறிப்புகள் எழுதிய வண்ணம் உள்ளனர்.

Leave a Response