ஜெயலலிதா மரணம் – ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் தொடங்கினார். அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் சேர்ந்து ஆட்சி அமைத்த பிறகு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் 2017 செப்டம்பர் 25 ஆம் தேதி தொடங்கப்பட்டு 2017 செப்டம்பர் 30 ஆம் தேதி செயல்படத் தொடங்கியது.

இந்த ஆணையம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர், மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், போயஸ் தோட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள், ஓட்டுநர்கள், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.

சசிகலா மற்றும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்கள், பொதுமக்களிடம் பெற்ற பிரமாண பத்திரங்கள், சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.

பின்னர் அமைச்சரவையில் இந்த அறிக்கை முன் வைக்கப்பட்டது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் பல பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அவை…..:

2016 செப்டம்பர் 20 ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அப்போது, சபரிமலைக்குச் சென்றிருந்த மருத்துவர் சிவகுமாரிடம் சசிகலா காய்ச்சல் தொடர்பாகக் கூறியுள்ளார். அதற்கு பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்று சிவகுமார் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். மீண்டும் இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் வழக்கமான இடைவெளியில் ஜெயலலிதாவுக்கு சசிகலா பாராசிட்டமால் மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். அதுவும் ஆதாரமாக உள்ளது.

2016 செப்டம்பர் 21 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் தலைமைச் செயலகத்தில் 7 பேருந்துகள் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போயஸ்கார்டனை அடைந்ததும், அவர் காரில் இருந்து இறங்கும்போது தன் நிலை தடுமாறி கீழே விழவிருந்து, சமாளித்து, தனித்து வீட்டிற்குள் சென்றார். காரில் இருந்து இறங்கும்போது தன் நிலை இழந்தும், அவரால் வீட்டிற்குள் வர முடிந்தது என ஆணையம் முடிவு செய்கிறது.

செப்டம்பர் 22 ஆம் தேதி சசிகலா, மருத்துவர் சிவக்குமாருக்கு போன் செய்து ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் போயஸ்கார்டன் வரும்படி கூறினார். அவர் இரவு 8.45 மணிக்குப் பிறகு ஜெயலலிதாவின் வீட்டை அடைந்துள்ளார். அவர், ஜெயலலிதாவின் படுக்கை அறையில் நுழைந்தபோது, சசிகலா, ஜெயலலிதாவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு சில முறை இருமல் வந்துள்ளது. அவர் ஏற்கனவே மருந்து சாப்பிட்டதாக சசிகலா சொன்னார். பிறகு ஜெயலலிதா தன் படுக்கையில் சாய்ந்தார். அப்போது ஜெயலலிதாவின் அறையிலேயே தங்குவதாக சசிகலா கூறினார். ஆனால் ஜெயலலிதா மறுத்து விட்டார். பின்னர் ஜெயலலிதா பல் துலக்குவதற்காக (தூங்குவதற்கு முன்) குளியலறையில் சிறிது நேரம் இருந்தார். பின்னர் ஜெயலலிதா வெளியே வந்து படுக்கையை நோக்கி நடந்தார். படுக்கையை நெருங்கும்நேரத்தில் அவர் மயங்கி சசிகலா மற்றும் டாக்டர் சிவக்குமார் மீது விழுந்தார். சசிகலா அவரைப் படுக்க வைத்தார். சிறிது நேரத்தில் ஜெயலலிதா மயக்கமடைந்தார். அப்போது ஜெயலலிதாவின் பாதத்தில் டாக்டர் சிவக்குமார் மசாஜ் செய்ததாக சசிகலா கூறியுள்ளார்.

அப்போது, மருத்துவர் சிவக்குமார், அப்போலோ மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தேவை என்று கூறியுள்ளார். 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. பின்னர் ஜெயலலிதா அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். சரியாக இரவு 9.45 மணிக்கு கார்டனில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு 10.15 மணிக்கு மருத்துவமனையை ஆம்புலன்ஸ் அடைந்தது என மருத்துவப்பதிவேடுகளில் பதிவாகியுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்தார் என்பது டாக்டர் சினேகாஸ்ரீ சாட்சியத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஜெயலலிதாவின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்ட செப்டம்பர் 27 ஆம் நள்ளிரவு வரை சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பின்னடைவுக்கு வழிவகுத்த இதய பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கத் தவறிவிட்டனர்.

ஜெயலலிதா மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவின் இரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா பருமன், உயர் இரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவுநோய், ஹைப்போ தைராய்டிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு சிறுநீர்த் தொற்று காரணமாக செப்சிஸ் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2016 செப்டம்பர் 27 ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. டாக்டர் சமின் சர்மா ஆஞ்சியோ செய்யத் தயாராக இருந்து, ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட பிறகு நுரையீரல் நிபுணரான டாக்டர் பாபு ஆபிரகாம், ஏன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவை அழைக்க வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சர்மாவை ஏற்பாடு செய்தவர் ஜெயலலிதாவின் உறவினர் என்று கூறியுள்ளனர். ஆனால் உறவினர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. சரியான நேரத்தில் ஆஞ்சியோ செய்யப்படாமல் இருக்க சசிகலாவால் திறமையாக உத்தி கையாளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு மிகப்பொருத்தமான சிகிச்சை முறைக்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் சசிகலாவால் செய்யப்பட்டிருக்க வேண்டும். வியக்கத்தக்க வகையில் மற்ற அனைவரையும் புறந்தள்ளியுள்ளனர்.

ஜெயலலிதாவின் உடல் நிலை மற்றும் சிகிச்சையின் போக்கைப் பற்றிய நம்பத்தக்க, உண்மையான நிகழ்வுகளை வெளிப்படுத்தாததால் சிகிச்சையின் முழு விவரமும் வெளிப்படைத்தன்மையின்றி இரகசியமாக்கப்பட்டது. நோயாளி சுயநினைவுடன் இருந்தபோது அவரது உடல் பிரச்னைகள் மற்றும் செய்யப்பட வேண்டிய சிகிச்சை குறித்து அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் ஏன் நம்பத்தக்கவர்களாக கருதப்படவில்லை என்பதும் புதிராகவே உள்ளது. இந்தத் திட்டம் அனைத்தும் அறிவார்ந்த வகையில் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு இதயம், நுரையீரல் வீக்கம் உள்பட பல மோசமான உபாதைகள் இருந்தது குறித்த உண்மை யாருக்கும் தெரிவிக்கப்படாதது ஏன் என்பது திகைப்பூட்டுவதாக உள்ளது. மருத்துவர் ரிச்சர்டு பீலே கொடுத்த 6 பக்க அறிக்கையில் ஜெயலலிதாவுக்குப் பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். டாக்டர் பாபு ஆபிரகாம் அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்டு ரஸ்ஸலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும்போது ரஸ்ஸல், ஆஞ்சியோ மற்றும் அறுவை சிகிச்சை செய்ய ஏற்ற நேரம் என்று அக்டோபர் 11 ஆம் தேதி இரவு 11 மணிக்குத் தெரிவித்தார். ஆனால், அது தேவையில்லை என்று டாக்டர் பாபு ஆபிரகாம் தெரிவித்ததால் அந்த சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டது. மருத்துவர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும் முரண்பட்ட கருத்துகளிலிருந்து இணைந்து நோயாளியின் நன்மைக்காக ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் செய்யப்படவில்லை.

அரசிடம் நம்பிக்கை கொள்ளாமல் சிகிச்சை முழு நடைமுறையும் சசிகலா மற்றும் அவரது மருத்துவ உறவினர்கள் மற்றும் ஒரு சிலரின் தனிப்பட்ட குழுவின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. சசிகலா மீது பத்திரிகையில் வெளியான செய்தியால் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சிகிச்சை தொடர்பாக யாருக்கும் தெரியப்படுத்தாமலும், இரகசியம் காத்தும் அவரின் சிகிச்சைக்காக வெளி மருத்துவர்களை வரவழைத்ததுபோல் காட்சிப்படுத்தி ஆஞ்சியோ, அறுவை சிகிச்சை செய்யவிடாமல் சசிகலா மிகவும் எச்சரிக்கையும் செயல்பட்டுள்ளதாகவே ஆணையம் கருதுகிறது.

மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு எம்பாமிங் தொடங்கியபோது ஜெயலலிதா 10 முதல் 15 மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டார் எனக் கண்டறிந்தார்.

ஜெயலலிதாவின் மருமகன் தீபக் சாட்சியத்தில் ஜெயலலிதாவின் டிரைவர் மற்றும் பூங்குன்றன் ஆகியோரின் தகவலின் அடிப்படையில் 4 ஆம் தேதி மதியம் 3.30 மணிக்குத்தான் அவர் இறந்துள்ளார். அதன் அடிப்படையில்தான் முதலாம் ஆண்டு நினைவை அனுசரித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தாமதத்திற்கு சிபிஆர் மற்றும் ஸ்டெர்னோடமி என்ற செயல்முறைகள் தந்திரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா 2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணி இறந்த நேரம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவமனை செவிலியர்கள், பணி மருத்துவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50 மணிக்குள் ஆகும்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் தமிழக முதல்வர் பதவிக்குத் தன்னை பொருத்திக்கொள்ளத் தயார் நிலையிலிருந்து ஜெயலலிதாவின் வாரிசாக ஓ.பன்னீர்செல்வம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தற்செயலான நிகழ்வல்ல. அப்படித் தோன்றவில்லை. அதிகாரமையத்தின் மர்மமான சூழ்ச்சிகளால் புதிதாகக் கிடைத்த பதவி அவருக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை. அதனால் தர்மயுத்தம் தொடங்கினார், சிபிஐ விசாரணை கோரினார். அதன்பின்னர் துணை முதல்வர் பதவி கிடைத்தது.

அதன்பிறகு ஒரு புதிய பரிமாணத்தில், செய்தித்தாளில் வெளியான மறைந்த முதல்வரது மறைவில் மறைந்துள்ள மர்மம் பற்றிய பொதுமக்களின் அறிக்கைகள், வதந்திகள், சந்தேகங்களைக் கொண்ட செய்திகளின் அடிப்படையிலேயே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். நேர்மையாகவும், நியாயமாகவும் நிகழ்வுகளின் உண்மைச் சூழலை வௌிக்கொணரும் நோக்கத்துடன் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதன் காரணங்களை ஓ.பன்னீர்செல்வம் நிராகரித்தது, தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திலிருந்து இறக்கும் வரை ஒவ்வொரு கட்டமாக முதல்வரின் உடல் நிலையை ஆணையம் விரிவாக விசாரித்தது. அவருக்கு ஏற்பட்ட கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், மாறுபட்ட ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், எரிச்சல் கொண்ட குடல் நோய்குறி, வயிற்றுப்போக்கு, மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார் என்ற பல்வேறு மருத்துவர்களின் நோயறிதலையும் ஆணையம் பதிவு செய்துள்ளது.

டாக்டர் சமின் சர்மாவை சசிகலாவின் உறவினர்தான் அழைத்துவந்துள்ளது தெரியவந்தாலும் அந்த உறவினர் யார் என்று ஒருவரும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக மயிலாப்பூர் எஸ்.பி.(செக்யூரிட்டி) அலுவலகத்திடம் கேட்டதற்கு எந்த விபரமும் தரப்படவில்லை. சசிகலா சம்மந்தப்பட்டதால் துறை ஏன் எதையும் வெளிப்படுத்தவில்லை என்பதை ஆணையத்தால் புரிந்துகொள்ள இயலவில்லை.

வதந்திகளால்தான் இந்த ஆணையம் தேவைப்பட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினாலும் இங்கு கூறப்படும் அரசியல் குறித்த கண்ணோட்டம் தற்செயலானவை மட்டுமே தவிர தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

இரு கட்சிகளும் அரசியல் ரீதியாக வேறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்டிருந்தாலும் ஆணையத்தின்மீது நம்பிக்கைவைத்து விசாரணை தொடர அதன் பதவிக்காலத்தை நீட்டித்ததற்காக தமிழ்நாடு அரசுக்கும் முதல்வருக்கும் ஆணையம் நன்றி தெரிவிக்கிறது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. இந்த அனைத்து கருத்துகளிலிருந்தும் வி.கே.சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்குப் பரிந்துரைக்கிறது. அப்போதைய தலைமைச்செயலாளர் இராமமோகன்ராவ் மீதும் விசாரணைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response