ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை – தமிழக அரசின் முடிவு என்ன?

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை…..

ஜெயலலிதா, 2016 டிசம்பர் 5 ஆம் தேதி எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தது குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதா மருத்துவமனையில் 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் குறித்தும் அதைத் தொடர்ந்து அவரது மரணம் வரையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விசாரணையை மேற்கொண்டு அரசுக்கு 2022 ஆகஸ்ட் 27 இல் அறிக்கை அளித்தது.

அதில், ‘‘எய்ம்ஸ் மருத்துவக் குழு சிகிச்சை விவரத்தின் சுருக்கத்தை மட்டுமே அவர்களது கருத்தாக தெரிவித்துள்ளதால் அந்த அறிக்கையை ஆணையம் ஏற்கவில்லை. அரசால் ஏற்படுத்தப்பட்ட ஆய்வு வரம்புகளின் பரிந்துரையின் முதல் பகுதி, 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்களுடன் தொடர்புடையது. ஆய்வின் பிற்பகுதியைப் பொறுத்தவரை வி.கே.சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன், அப்போதையை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

டாக்டர் ஒய்.வி.சி.ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம், அப்போதைய தலைமைச் செயலாளர் இராம மோகன ராவ் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் 29 ஆம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விசாரணை ஆணையத்தின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.

அதன்படி ஆணையத்தின் அறிக்கையை சட்டப் பேரவையில் வைக்க முடிவு செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கையில் உள்ள சில அம்சங்களை விசாரணை ஆணையம் ஏற்காததைக் கருத்தில்கொண்டு சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக விசாரணை ஆணையம் அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

அதன் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று தக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆணையத்தின் அறிக்கையின் சுருக்கம் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளரிடம் வழங்கப்பட்டு அத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response