ஜெ மரணம் தொடர்பான குற்றச்சாட்டு – சசிகலா அறிக்கை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன், மருத்துவர் பாபு ஆபிரகாம், அப்போதைய தலைமைச் செயலாளர் இராம மோகன ராவ், அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி ஆகியோரைக் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் சசிகலா இதுதொடர்பாக விரிவான விளக்கம் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என்மீது பழிபோடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுபோன்று என்மீது பழிபோடுவது ஒன்றும் புதிது அல்ல. என்றைக்கு நான் ஜெயலலிதாவின் கரம் பிடித்தேனோ அன்று தொடங்கியது என்மீது இந்த பழிபோடும் படலம். அது இந்த நொடிவரை தொடர்கிறது. இதைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவு சாதித்திருக்க முடியாது. ஆனால், அதேசமயம் ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதுதான் வேதனையாக உள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் நினைவேந்தல் நடத்தப்பட வேண்டும் என்றே எனக்குத் தோன்றியது. ஆனால், அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதற்குப் பதிலாக அவருடைய மரணத்தையே அரசியலாக்கினார்கள். குறிப்பாக திமுக ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்தது. அதற்கு எங்கள் சொந்தக் கட்சியினரே பலிகடா ஆனது வேதனையான ஒன்று.

என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்றால் அதற்கு வேறு எத்தனையோ வழிகளைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு ஜெயலலிதாவின் மரணத்தை சர்ச்சையாக்கியதுதான் மிகவும் கொடுமையானது. ஜெயலலிதாவின் மரணத்தை சர்ச்சையாக்கி அதற்காக ஒரு விசாரணை ஆணையம் அமைத்து அதன் அறிக்கையையும் அரசியலாக்கிவிட்டார்கள்.

தற்போது இவர்கள் பங்குக்கு என்னை விசாரிக்கப்போவதாகச் சொல்கிறார்கள். எத்தனை முறை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டு இருக்கலாம். ஆனால் உண்மை என்றைக்கும் மாறாது. அவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் கிடையாது. அவருக்கு மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளித்து குணமடைந்து வீடு திரும்ப இருந்த நிலையில்தான் துரதிஷ்டவசமாக நிர்கதியாக விட்டுச் சென்றார் என்பது எதார்த்தமான உண்மை.

விசாரணை ஆணையத்தின் நோக்கமாக ஜெயலலிதா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட காரணமும் அங்கு சிகிச்சை அளித்த விதத்தை விசாரிப்பதற்காகத் தான் என்று சொல்லப்பட்டது. ஆனால், விசாரணை ஆணையம் தனது அதிகாரத்தை மீறி தேவையற்ற அனுமானங்களைச் சொல்லி என்மீது பழி போட்டு இருப்பது எந்தவிதத்தில் நியாயம். எங்கள் உறவு குறித்து ஆணையம் யாரையோ திருப்திப்படுத்தும் எண்ணத்தில் யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கில் இப்படிப்பட்ட தேவையற்ற கருத்துகளை அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

ஜெயலலிதாவை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் உற்ற தோழியாக இன்னும் சொல்லப்போனால் அவருக்குத் தாயாக இருந்து அவரைப் பாதுகாத்து வந்துள்ளேன். என்னையும் அவரையும் பிரிப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளவே சில காலம் நாங்கள் பிரிந்து என்ன நடக்கிறது என்று பார்த்தோம். சதி பின்னணிகளைத் தெரிந்து கொண்ட பின்னர் மீண்டும் அவருடன் இருந்துவந்தேன். 2012 முதல் எனக்கும் ஜெயலலிதாவுக்கும் உறவு சரியில்லை என்பது விசாரணை ஆணையத்துக்கு எப்படித் தெரியும்? யார் அப்படிச் சொன்னது? இறந்துபோன ஜெயலலிதா இதைச் சொல்ல வாய்ப்பில்லை.

அப்படி இருக்கும்போது இப்படி ஒரு பொய்யான அபத்தமான ஒருகருத்தை ஆணையம் தெரிவிக்கக் காரணம் என்ன? அதன் உள்நோக்கம் என்ன? ஆணையத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதுபோல ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் நான் ஒருபோதும் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துகளைச் சொல்லக்கூடிய அளவுக்கு நான் மருத்துவப்படிப்பு படித்தது கிடையாது. ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை தர வேண்டும் என்ன மருந்து தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவக் குழுவினரே எடுத்தனர்.

என்னுடைய எண்ணம் ஜெயலலிதாவுக்கு முதல்தர சிகிச்சை தர வேண்டும் என்பதே. என்னுடைய ஆலோசனைகளைப் பெற்று சிகிச்சை கொடுக்கும் அளவுக்கு அப்போலோ மருத்துவமனை ஒன்றும் சாதாரண மருத்துவமனை கிடையாது. ஜெயலலிதா உடல்நிலை குறித்த பரிசோதனைகளை ஏற்கனவே அந்த மருத்துவமனையில் செய்திருந்தோம் என்பதாலேயே அந்த மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றோம். அவரை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. மேலும் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க எந்தத் தேவையும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களும் முடிவெடுத்தார்கள்.

அறிக்கையில் என் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன். ஜெயலலிதாவின் மருத்துவச் சிகிச்சையில் நான் தலையிடவில்லை. இது குறித்து என்னிடம் எந்த விசாரணை நடத்தினாலும் அதை நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்

இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.

Leave a Response