ஜெயலலிதா ஆட்சியில் இலஞ்சம் – சமுத்திரக்கனி பேச்சால் பரபரப்பு

சேலத்தில் தனியார் உணவகம் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி.

நிகழ்வின் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர்..

இன்று நாட்டில் இருக்கும் 7 கோடி பேரும் படங்களை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். போன் வைத்திருப்பவர்கள் விமர்சனம் செய்யலாம் என ஆகிவிட்டது. நல்ல படம் என்றால் அது ஓடிவிடும். விமர்சனம் அதை பாதிக்காது. விமர்சனம் என்பது அவர்களின் தனிப்பட்ட கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. தரமான படங்கள் என்றால், அது கண்டிப்பாக ஓடும். நல்ல சினிமாக்களை மக்கள் வரவேற்பார்கள்.

அண்மையில் நடிகர் விஷால் தணிக்கைத்துறைக்கு பணம் கொடுத்த விவகாரம் குறித்து பேசுகையில்,

நான் 5 படங்களைத் தயாரித்திருக்கிறேன். இதுவரை தணிக்கைத்துறைக்கு நான் காசு கொடுத்ததில்லை. என்னனுடைய ‘அப்பா’ திரைப்படத்துக்கு வரிவிலக்குப் பெற பணம் கொடுத்தேன். நியாயமாக ‘அப்பா’ திரைப்படத்தை அரசு எடுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் நான் தயாரித்த படத்துக்கு வரிவிலக்குப் பெற காசு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் சிறிய படங்கள் அதிகரித்துவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு வருடத்துக்கு 1000 படங்கள் என வெளியாகிறது. சிறிய படங்கள் வெளியாகாமல் சிக்கிவிடுகிறது.

காவிரி விவகாரத்துக்கு நான் கண்டிப்பாகக் குரல் கொடுப்பேன். தனியொரு மனிதனாக இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. பேச வேண்டிய இடத்தில் சரியாகப் பேசினால் நடக்க வேண்டிய விசயங்கள் நடக்கும். இது தொடர்பாக நடிகர் சங்கம் ஆர்பாட்டம் நடத்தினால் நான் வேலை இல்லாமல் இருந்தால் கலந்துகொள்வேன். காவிரி விவகாரத்தை பொறுத்தவரை சம்பந்தப்பட்டவர்கள் பேசி முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதில், 2016 ஆம் ஆண்டு அப்பா படத்துக்கு வரிவிலக்கு பெற இலஞ்சம் கொடுத்தேன் என்று அவர் சொன்னது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

அப்பா படம் 2016 ஜூலை ஒன்றாம்தேதி வெளியானது.அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அவருடைய ஆட்சியில் வரிவிலக்குப் பெறப் பணம் கொடுத்தேன் என்று வெளிப்படையாகச் சொல்லியிருப்பது அதிமுகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Leave a Response