ஆடு கோழி பன்றி வளர்க்க ரூ 50 இலட்சம்வரை மானியம் – தமிழக அரசு அறிவிப்பு

கோழி, ஆடு, பன்றி வளர்க்க ரூ.25 இலட்சம் முதல் ரூ.50 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாகச் செயல்படுத்தப்படும் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு முதல் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய கால்நடை இயக்கத்தின் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் இறைச்சி, பால், முட்டை மற்றும் கம்பளி உற்பத்தியை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் நோக்கமானது, புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனப்பயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டினத்தை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதலாகும்.

இத்திட்டத்தின் கீழ் கோழி வளர்க்க முனைவோர் 1000 நாட்டுக் கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து நான்கு வாரம் வரை வளர்த்து விற்க மொத்தத் திட்டச் செலவில், மூலதனத்தில் 50% மானியம் (அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை) வழங்கப்படும்.

ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் + 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்தத் திட்டச் செலவில், மூலதனத்தில் 50% மானியம் (அதிகபட்சமாக ரூ.50 இலட்சம் வரை) இரண்டு தவணைகளில் வழங்கப்படும். பன்றிப் பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் + 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்தத் திட்டச் செலவில், மூலதனத்தில் 50% மானியம் (அதிகபட்சமாக ரூ.30 இலட்சம் வரை) வழங்கப்படும்.

தீவனம் மற்றும் தீவனப்பயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஓராண்டில் 2000 – 2400 மெட்ரிக் டன் வைக்கோல் / ஊறுகாய் புல் /ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம் / தீவனக் கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள முனைவோர்க்கு தளவாடங்கள் வாங்க மொத்தத் திட்டச் செலவில், மூலதனத்தில் 50% மானியம் (அதிகபட்சமாக ரூ.50 இலட்சம் வரை) வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தனி நபர், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டுப் பொறுப்பு சங்கங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவை. தொழில் முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும். தொழில்முனைவோர்/தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கிக் கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும், திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும்.

பயன்பெற விரும்புவோர் https://nlm.udyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response