மபொசியின் பெருமையைப் போற்ற சீமான் முன்வைக்கும் 3 கோரிக்கைகள்

‘சிலம்புச்செல்வர்’ ம.பொ.சிவஞானம் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 03-10-2022 அன்று சென்னை, பாண்டி பஜார், தியாகராயர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது…..,

“தமிழக எல்லை மீட்புப் போராளி ‘சிலம்புச்செல்வர்’ என்று தமிழின மக்களால் அன்போடு அழைக்கப்படுகிற பெருந்தமிழர் ம.பொ.சி அவர்களின் நினைவைப் போற்றுகிற நாள் இன்று. ‘தமிழரசுக் கழகம்’ நடத்தி, எங்களைப் போன்ற அடுத்தத் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த பெருந்தகை. அவருடைய சொற்பொழிவைக் கேட்கும்போது, தடையின்றித் தமிழ்த்தாய் அவர் நாவில் விளையாடுவதைப் பார்க்க முடியும். அப்படிபட்ட ஆற்றல் வாய்ந்தவர் ஐயா ம.பொ.சி அவர்கள்.

இந்நாளில் நாம் தமிழர் கட்சி சார்பாகவும், ஐயா ம.பொ.சி அவர்களுடைய குடும்பத்தினர் சார்பாகவும் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம்.

நீண்ட நாட்களாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுள் ஒன்றானது, ஐயா ம.பொ.சி அவர்களுக்கு ஒரு மணிமண்டபம் கட்டுவது.

இரண்டாவது, தாம்பரத்திற்கு அருகில் உருவாக இருக்கிற பேருந்து நிலையத்திற்கு ஐயா ம.பொ.சி அவர்களின் பெயரைச் சூட்டுவது.

மூன்றாவது, தமிழக அரசு விருது வழங்கும்போது, இலக்கியத்தில் ஈடு இணையற்ற புகழ்பெற்ற, ‘சிலம்புச்செல்வர்’ என்று பாராட்டப்பெற்ற நமது ஐயா ம.பொ.சி அவர்களின் பெயரில் ஒரு விருது வழங்குவது

என்ற மூன்று கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுத்து, செயல்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசிற்கு முன்வைக்கின்றேன்.

பெருந்தமிழர் ம.பொ.சி அவர்களுடைய நினைவைப் போற்றுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். நாம் தமிழர் பிள்ளைகள் அவருக்கு எங்களுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான்,

“புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், ஐயா அப்துல் கலாம் போன்றவர்களெல்லாம் இந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள் என்று பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும்போது, உங்களுக்குக் கோவம் வருவது போல எனக்கும் கோவம் வருகிறது. அப்படிப்பட்ட பாடப் புத்தகங்களை ஒரு காலம் வரும்போது நாங்கள் கொளுத்துவோம் என்று கூறினேன். ஹெச். ராஜா போன்றவர்கள், அதை ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைக் கொளுத்துவோம் என்று கூறியதுபோலப் புரிந்து கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்களின் ஆர்.எஸ்.எஸ் கொள்கையும் அது தான் என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள்.

ஹெச். ராஜாவிற்கு நான் சொல்லிக்கொள்வது, இந்த நாட்டை ஆளுகிற பிரதமர், உங்களுடைய ஐயா மோடி அவர்களை எதிர்த்துச் சண்டை செய்து வருகிறோம். அவருக்கும் குருவாக இருக்கிற நாக்பூர் தலைமைப் பீடத்திடமே நாங்கள் மோதுகிறோம், நீங்கள் எங்களுக்கு எம்மாத்திரம். நீங்களில்லை, உங்களின் அப்பாவிற்கு அப்பா வந்தால் கூட எங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.

நான் எத்தகு பெருமைமிக்கத் தலைவனின் மகன் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியாது என்றால், தெரிந்துகொண்டு பிறகு பேசுங்கள். ஹெச். ராஜா ஒரு பரிதாபம் என்பதால் அவரைக் கடந்து செல்கிறேன். பாரதிய ஜனதா கட்சிக்காரர்களிடத்திலும், ஐயா ஹெச். ராஜா அவர்களின் குடும்பத்தினரிடமும் நான் அன்பாக விரும்பிக் கேட்டுக்கொள்வது, அவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடத்தில் சேர்த்துச் சிகிச்சை அளிக்குமாறு உங்களை அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response