பொறியியல் கலந்தாய்வு மீண்டும் தள்ளிவைப்பு ஏன்? – அமைச்சர் விளக்கம்

நீட் தேர்வு முடிவு வெளியாகாததால், தமிழகத்தில் இன்று துவங்க இருந்த பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் அளித்த பேட்டியில்……

தமிழகத்தில் பொறியியல் கல்விச் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு இன்று முதல் தொடங்குவதாக இருந்தது.
இன்னமும் நீட் தேர்வு முடிவு வராததால், அந்தத் தேர்வு முடிவைப் பொறுத்து உயர்கல்வி குறித்து மாணவர்கள் நிலைப்பாடு உள்ள காரணத்தால் இன்று துவங்க இருந்த பொதுக் கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுகிறது.

நீட் தேர்வு முடிவு வந்த பின்பு இரண்டு நாள் கழித்து இந்தப் பொதுக் கலந்தாய்வு துவங்கும். இதுதான் இந்தக் கல்வி கொள்கையில் உள்ள தொல்லை. முதலில் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிக்கான விண்ணப்பங்களுக்கு சிபிஎஸ்இ முடிவு காலதாமதமாக வந்ததால் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. நீட் தேர்வு முடிவு பின் மாணவர்கள் சிலர் மருத்துவப்படிப்புக்குச் சென்றதால், கடந்த ஆண்டு அண்ணா பல்கலையில் இடம் காலியாகவே இருந்தது.

மாணவர்கள் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரியில் காலி இடங்கள் வருவதைத் தவிர்க்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று நடைபெற இருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 2 நாட்களுக்குப் பின் பொதுக் கலந்தாய்வு துவங்கும். அரசு கலைக்கல்லூரியில் சேர்க்கை அதிகரித்து இருப்பதால் கூடுதல் இடம் ஒதுக்குவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

தமிழக முதல்வரின் நான் முதல்வன் கல்வித்திட்டத்தின்படி உயர்கல்வி மற்ற நாடுகளின் பல்கலைக்கழகத்தோடு இணைந்து பாடதிட்டங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து சென்னைப் பல்கலைக்கழகம் பிஎஸ்சி படிப்பை இந்தாண்டு அறிமுகம் செய்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் இடங்களுக்குப் பின்னர் அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response