பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை – புதிய சர்ச்சை

பொறியியல் (இன்ஜினியரிங்) கல்விக்கான பாடத்திட்டத்தை தொழில்நுட்பக் கல்விக்கான உயர் அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்தல், மேம்படுத்துதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏஐசிடிஇ வடிவமைக்கும் பாடத்திட்டத்தை பொறியியல் கல்விக்கான உயர் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தை பல்கலைக்கழக நிர்வாகமே வடிவமைக்கிறது.

இந்நிலையில் 2019 ஜூன் மாதம் ஏஐசிடிஇ வெளியிட்ட வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு பொறியியல் சேர்ந்த மாணவர்களுக்கு பாடத்திட்டம் சாராத 32 பாடங்களில் 3 பாடங்களை விருப்பப்பாடமாக தேர்வு செய்து 3 ஆவது, 4 ஆவது, 5 ஆவது செமஸ்டரில் படிக்க வேண்டும் கூறியிருந்தது.

சமுதாயத்தில் தொழில்நுட்பகல்வி, மதிப்புகள் மற்றும் தர்மம், தர்மமும் சிறந்த வாழ்க்கை முறையும், புகைப்படம், வீடியோ எடுத்து ஆவணப்படுத்துதல் என 32 பாடங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தத்துவியல் பாடத்தின் 5 ஆவது யூனிட்டில் ‘‘அறிவே ஆற்றல்’’ என்ற தலைப்பில் நம்முடைய ஆற்றலை உணர்வது தொடர்பாக கீதையில் கூறப்பட்டுள்ளவை, மனதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அர்ஜூனனுக்கு கிருஷ்ணரின் உபதேசங்கள் ஆகியவை கொண்ட பகவத்கீதை பாடமாக உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மேலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மத்திய பணிகளில் மட்டுமல்லாமல், தமிழகப் பணிகளிலும் சேர்த்துள்ளதற்கு எதிர்ப்பு போன்றவைகளால் தமிழகத்தில் சர்ச்சைகளாகவே உள்ளன.

மேலும், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், சட்டப் பல்கலைக்கழகம், இசைப் பல்லைக்கழகங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமித்ததற்கும் எதிர்ப்பு இருந்து வருகின்றன.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகம் திடீரென்று பகவத்கீதையை பாடமாக கொண்டு வந்ததற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது மதச்சார்பின்மைக்கு எதிரானது எனவும், மதச்சார்பற்ற நாட்டில் திட்டமிட்டு பாடத்திட்டத்தில் மத விஷயங்களை சேர்ப்பதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர், எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கீதை தொடர்பான விஷயங்கள் திட்டமிட்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று நேற்று மாலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா விளக்கம் அளித்தார்.

அதுதொடர்பாக அவர் கூறியதாவது….

ஏஐசிடிஇயின் புதிய பாடத்திட்டத்தின்படி, 32 பாடங்களை பரிந்துரைத்துள்ளது. மானுடவியல், சமூகவியல், கலை சார்ந்தவை அந்த பட்டியலில் இருந்தது. பொறியியல் படிக்கும் மாணவர்கள் பிற விஷயங்கள் தொடர்பாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பது ஏஐசிடிஇயின் நிலைப்பாடு.

குறிப்பிட்ட தத்துவவியல் பாடத்தில் பழங்கால நாகரீகம், கிரேக்க, ரோமானிய நாகரீகம், மேற்கத்திய நாடுகள், கிழக்கு நாடுகளின் நாகரீகங்களின் ஒப்பீடு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

தத்துவவியல் பாடத்தைத் தேர்வு செய்தது மாணவர்கள் தான். மாணவர்கள் தத்துவியல் படிக்க விரும்பாவிட்டால், விருப்பப் பாடத்தை மாற்றிக்கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்விக்குழுக் கூட்டத்தில் அதற்கான விதி உருவாக்கப்படும். தத்துவவியல் படிக்க விரும்பாத மாணவர்கள் மீதமுள்ள பாடங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

மாணவர்கள் மீது மதத்தையோ, கீதையையோ, பிற விஷயங்களையோ திணிக்கவில்லை. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு எதுவுமில்லை.

ஏஐசிடிஇ வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ளவற்றை அண்ணா பல்கலைக்கழகம் பின்பற்றியுள்ளது. விருப்பப் பாடப்பட்டியல் நடைமுறை ஐஐடியில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்துவதே பாடத்திட்ட மாற்றத்தின் நோக்கம். அதனால் இதுதொடர்பாக கவலைப்படத் தேவையில்லை. தத்துவவியல் பாடம் கட்டாயப் பாடமல்ல. மாணவர்கள் விரும்பினால் படிக்கலாம்.

இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறினார்.

Leave a Response