இவ்வாண்டு பொறியியல் படிக்கப் போகிறவர்களுக்கு அமைச்சர் பொன்முடியின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில்…..

பொறியியல் கல்லூரிகளில் நடப்பாண்டு எந்த நடைமுறையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சில ஆண்டுகளாகக் குறைந்து வருவது உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசித்தோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு 631 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கு முந்தைய ஆண்டு 750 இடங்கள் காலியாக இருந்தன.

இதற்கு முக்கியக் காரணம் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகங்களில் சேர்ந்த பின்னர், நீட் தேர்வு மூலம் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பிற கல்லூரிகளில் இடம் கிடைத்ததும் அங்கு சேர்ந்துவிடுவது தான். இதனால் பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவு காலி இடங்கள் ஏற்பட்டு விடுகின்றன.

எனவே, இதனைத் தடுக்கும் முயற்சியாக நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்.

இதன் அடிப்படையில் நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்குகிறது. பொறியியல் கட்டணத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்பதால் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணமே வசூலிக்கப்படும்.

பொறியியல் கலந்தாய்விற்கு மாணவர்கள் ஜூன் 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாள். இந்த விண்ணப்பத்தை சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். அல்லது அவரவர் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இது தவிர தமிழகம் முழுவதும் மொத்தம் 110 இடங்களிலும் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ஆகஸ்டு 16 ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவ வீரர்கள், விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறும்.

இதில் துணை கலந்தாய்வு அக்டோபர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெறும். எஸ்.சி. கலந்தாய்வு அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் நடைபெறும். அக்டோபர் 18 ஆம் தேதியுடன் சேர்க்கை முடிந்து விடும். இதில் முதல் 15 ஆயிரம் பேருக்கு ஒரு வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும். ஒரு வாரத்திற்குள் பணம் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தப்படவில்லை என்றால் அவர்களின் விண்ணப்பங்கள் இரத்து செய்யப்பட்டு அடுத்த மாணவருக்கு அந்த இட வாய்ப்பு வழங்கப்படும்.

தனியார் அல்லது அரசு பொறியியல் கல்லூரி என எந்தக் கல்லூரியாக இருந்தாலும் இரு வாரத்தில் பணம் கட்ட வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response