தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் – திமுக அறிக்கை

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த இலட்சுமணன் உள்பட 4 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன் இராணுவ வீரர் இலட்சுமணனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் இலட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இராணுவ வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பியபோது அவரது கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசியதைக் கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசியதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பா.ஜ.க.வுக்குத் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது. பதற்றத்தைப் பற்ற வைத்து வன்முறைகள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாவது நிச்சயம் என எச்சரிக்கிறேன்.

75 ஆவது விடுதலை நாள் கொண்டாடப்படுகின்ற நேரத்தில், உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் அவர்களது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசியிருக்கும் பா.ஜ.க.வினரின் அருவருக்கத்தக்க, அரசியல் பண்பாடற்ற செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டிற்காக உயிர்நீத்த ஓர் இராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதிலும் இதுபோன்று அரசியல் ஆதாயம் தேடும் அநாகரிகச் செயலில் ஈடுபட்டு, அராஜகத்தை பா.ஜ.க.வினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல். அது ஒருவழிப் பாதையல்ல என்பதை பா.ஜ.க.வினர் உணர வேண்டும் என எச்சரிக்கிறேன்.

ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாமல், அராஜகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் கனவு காண வேண்டாம்.

இராணுவ வீரரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தச் சென்ற மாண்புமிகு அமைச்சரின் காரின் மீது தாக்குதல் நடத்தி – உயிரிழிந்த இராணுவ வீரரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.விற்கு நாட்டுப்பற்று பற்றிப் பேசத் துளியும் அருகதை இல்லை என்பதோடு, இச்சம்பவத்தின் வாயிலாக அந்தக் கட்சியின் “நாட்டுப்பற்று” சாயம் வெளுத்துப் போயிருக்கிறது. செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பா.ஜ.க.வுக்குத் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது. பதற்றத்தைப் பற்ற வைத்து வன்முறைகள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாவது நிச்சயம் என எச்சரிக்கிறேன்.

ஊரெல்லாம் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில், தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள இயக்கம். சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்கும் இயக்கம். அமைச்சரின் கார்மீது காலணி வீசியவர்கள் – தூண்டி விட்டவர்கள் – துணைபோனவர்கள் ஆகியோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதால் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response