தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் இன்றுமுதல் புதிய நடைமுறை – ஆசிரியர்கள் அதிருப்தி

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 37,554 அரசுப் பள்ளிகள் உள்ளன.இவற்றில் 52.75 இலட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏறத்தாழ 2.25 இலட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

ஆசிரியர் வருகைப்பதிவைக் கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற கைபேசி செயலியை பள்ளிக்கல்வித் துறை 2019 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இதன் வழியாக ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், ஆசிரியர் பணிப் பதிவேடு, வருகைப்பதிவு, மாணவர்விவரம் உள்ளிட்ட விவரங்களை ஒருங்கிணைக்க டிஎன்எஸ்இடி (TNSED) என்ற மேம்படுத்தப்பட்ட செயலியை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதன்மூலம் வருகைப்பதிவு உள்ளிட்ட அலுவல் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இந்தத் தகவல்களை துறை அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிக்க முடியும்.

இந்நிலையில், மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை இன்று (ஆகஸ்ட் 1,2022) முதல் செயலியில் மட்டுமே பதிவுசெய்தால் போதுமானது. மேலும், விடுப்பு, முன்அனுமதி ஆகியவற்றையும் ஆசிரியர்கள் செயலி வழியாகவே மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.பதிவேட்டில் வருகையைப் பதிவு செய்யக்கூடாது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த செயலி பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக்கல்வி ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையின் இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் கைபேசி பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு கைபேசி செயலியில் அனைத்தையும் செய்யுங்கள் என்பது முரண்பாடாக உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

Leave a Response