மோடி முகத்தில் கறுப்பு மை பூசிப் பதிலடி – தந்தைபெரியார்திராவிடர் கழகம் அதிரடி

மாமல்லபுரத்தில் 44 ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 189 நாடுகளைச் சேர்ந்த, 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

போட்டி தொடக்க விழா நாளை மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகிறார்.

இந்தப் போட்டிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அவ்விளம்பரங்களில் பிரதமரின் படமில்லை என்று சொல்லி, தமிழ்நாடு அரசின் விளம்பரங்களில் மோடியின் புகைப்படத்தை ஒட்டும் வேலையை பாஜகவினர் செய்தனர்.

இதற்குப் பதிலடியாக,

தமிழ்நாடு அரசு நடத்தும் சர்வதேச செஸ் போட்டியை பற்றிய விளம்பரப் பதாகையில் மோடியின் படத்தை பாஜக கோமாளிகள் ஒட்டியுள்ளனர்.

இதை கண்டித்து சென்னை முழுவதும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக மோடியின் படத்தை கருப்பு மை கொண்டு அழிக்கும் பணி துவங்கியுள்ளது என அவ்வமைப்பு சார்பில் அறிவித்து அதேபோல் மோடியின் படத்தை கறுப்பு மை பூசி அழித்தனர்.

அதற்காக, தந்தைபெரியார் திராவிடர் கழகத்தினரைக் காவல்துறையினர் கைது செய்துவருகின்றனர். அதேசமயம், தமிழ்நாடு அரசின் விளம்பரப் பதாகைகளைச் சேதப்படுத்திய பாஜகவினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதையொட்டி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழக அரசின் விளம்பரத்தை சேதப்படுத்தி உள்ள பாஜகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் கருப்பு மை பூசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள வழக்கு பதியாமல் விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response