பாஜக ஆளும் குஜராத்தில் ஆறாய் ஓடும் கள்ளச்சாரயம் – 28 பேர் மரணம் 50 பேர் கவலைக்கிடம்

பாஜக ஆட்சிசெய்யும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், அங்கு கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. நேற்று முன் தினம் அதிகாலை பொடாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் சுற்றியுள்ள உள்ள கிராமங்களில் வசிக்கும் 50 க்கும் மேற்பட்டோருக்குத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் பாவ்நகர், பொடாட் மற்றும் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அனைவரும் விசம் கலந்த கள்ளச்சாராயம் குடித்திருப்பது தெரிந்தது. மருத்துவர்கள் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 28 பேர் இறந்தனர். 45 க்கும் மேற்பட்டோருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக குஜராத் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மதுவிலக்கு மற்றும் கலால் துறை இயக்குநர், குஜராத் தடய அறிவியல் ஆய்வக இயக்குநர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்ட குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது.

குஜராத் டிஜிபி ஆஷிஷ் பாட்டியா நேற்று அளித்த பேட்டியில், ‘பொடாட்டின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண் உட்பட சிறு சிறு கொள்ளையர்கள் சிலர், அதிக விஷத்தன்மை கொண்ட மெத்தில் ஆல்கஹாலை தண்ணீரில் கலந்து போலி மதுபானத்தை தயாரித்து, ஒரு பாக்கெட் ரூ.20 என்று விற்றுள்ளனர். அதை வாங்கி குடித்தவர்களே உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தத்தில் மெத்தனால் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால் இதுதான் குஜராத் மாடலா? எனப் பலர் விமர்சனம் செய்துவருகின்றனர்.

Leave a Response