நாளை மோடி சென்னை வருகை இன்றே டிரெண்டாகும் கோபேக்மோடி

மாமல்லபுரத்தில் 44 ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 189 நாடுகளைச் சேர்ந்த, 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

போட்டி தொடக்க விழா நாளை மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகிறார். விமானநிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமரை வரவேற்கின்றனர்.

சுமார் 50 நிமிடங்கள் ஒய்வெடுக்கும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.45 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் பிரதமர், நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 8 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார்.அங்கு அவர் பாஜக நிர்வாகிகள், அதிமுகவின் ஓபிஎஸ், பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினரைச் சந்திக்கிறார்.

நாளை மறுநாள் காலை 9.50 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, 69 பேருக்கு தங்கப் பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். பின்னர் பகல் 12 மணிக்கு சென்னை விமானநிலையம் செல்லும் அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் அகமதாபாத்துக்கு செல்கிறார்.

இந்நிலையில், ஜவர்கலால் நேரு விளையாட்டு அரங்கில் பாதுகாப்புப் பணி ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் வருகை தந்தார்,

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் போடப்பட்டுள்ள பாதுகாப்பானது ஏழு மடங்கு அதிகரிக்கப்படும்.மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் திட்டமிட்டு இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தாலும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு பதிவின் தன்மையைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த எச்சரிக்கையையும் மீறி ட்விட்டரில் கோபேக்மோடி (திரும்பிப்போ மோடி) எனும் குறியீட்டுச் சொல் முன்னிலை வகித்துவருகிறது. ஏராளமானோர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Response