கைவிட்டார் மோடி கையறு நிலையில் எடப்பாடி – ஓபிஎஸ் அணி உற்சாகம்

இந்திய ஒன்றியத்தின் புதிய குடியரசுத்தலைவராக பாஜக அறிவித்த வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். இதனால் அவரது பதவி ஏற்பு விழா நாளை (ஜூலை 25,2022) டெல்லியில் நடைபெறுகிறது.

இதைக் காரணமாக வைத்துக் கொண்டு அதிமுக உள்கட்சி மோதல், ஓ.பன்னீர்செல்வம் மீது புகார் செய்வது என்று பல்வேறு திட்டங்களுடன் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதற்காக நான்கு நாள் டெல்லியில் தங்கியிருக்கவும் திட்டமிட்டார்.

நேற்று முன்தினம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமியை அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து சாணக்கியாபுரியில் இருக்கும் புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி பயணத் திட்டத்தின் முதல் நாளாக நேற்று முன்தினம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய பிரிவு உபசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதையடுத்து இரண்டாவது நாளான நேற்று காலை சுமார் 11.15மணியளவில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து கிளம்பிய எடப்பாடி பழனிச்சாமி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க நேரம் கேட்டு இருந்தார்.

அப்போது, அதிமுக கட்சிக்குள் ஓ.பன்னீர்செல்வம் செய்த பிரச்சனைகள் ஆகியவை குறித்து விளக்கமாகவும், புகாராகவும் தெரிவிக்கத் திட்டமிட்டு இருந்தார். மேலும், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர்களும் ஒப்பந்ததாரர்களுமான செய்யாத்துரை, முத்து, முருகப் பெருமாள், சரவணப்பெருமாள் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தி பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் கட்டுக்கட்டாகப் பணம், நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

இதனால் வருமான வரித்துறை சோதனை குறித்தும் பிரதமர் மோடியிடம் புகார் தெரிவிக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்து விட்டனர். இதனால் இன்று காலை டெல்லியில் புறப்பட்டு, பிற்பகல் சென்னை வருகிறார்.

நான்கு நாள் பயணத்தை இரண்டே நாளில் முடித்துக் கொண்டு திரும்புவதால் அதிமுகவில் பரபரப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் பிரதமர் மோடியின் ஆதரவு உள்ளது என்று கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பயணத்தை பாதியிலேயே இரத்து செய்து விட்டுத் திரும்புவது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஓபிஎஸ் அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave a Response