பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. பள்ளி, மாணவர்கள் மற்றும் நிர்வாக நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகளைக் கல்வித் துறை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் 77 விதமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்……
தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் பள்ளி தொடங்குவதற்கு முன்னரே பள்ளிக்கு வரவேண்டும்.
மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது, ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து இன்னும் பிற அசம்பாவிதம் என பள்ளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலரின் நேரடி கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும்.
பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விடும்போது முதன்மைக் கல்வி அலுவலருக்கு கைபேசி மற்றும் கடிதம் மூலம் தெரிவிக்கவேண்டும்.
அனைத்துத் தலைமை ஆசிரியர்களும், பாட ஆசிரியர்களும் பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி விழுக்காடு, பாட தேர்ச்சி விழுக்காடு, தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
10, 12 ஆம் வகுப்பு பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் சரியாக பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்தியிருக்கிறார்களா? என்பதை தலைமை ஆசிரியர் கண்காணிக்கவேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வேண்டிய உதவிகளை அப்பகுதியில் வசிக்கும் தொழில் அதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரைச் சந்தித்து பள்ளிக்கு வேண்டிய உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளியில் தீத்தடுப்பு சாதனம் கண்டிப்பாக இருக்கவேண்டும். மேலும் அவ்வப்போது புதுப்பிக்கவேண்டும்.
பள்ளிகள்-பொதுமக்கள் உறவு நன்றாக இருக்கவேண்டும்.
மாணவர்களுக்கு அவர்களின் மனதைப் பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது.
ஆசிரியர்கள் வகுப்புகளுக்குச் செல்லும்போது, கற்பித்தல் உபகரணங்களுடன் செல்லவேண்டும்.
ஆசிரியர்கள் பள்ளியில், வகுப்பறையில் கைபேசி பேசுவதைத் தவிர்க்கவேண்டும். ஆய்வு அலுவலர் பார்வையின்போது கைபேசியில் பேசிக்கொண்டிருந்தால், அந்த ஆசிரியர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளியிலும் படிக்கும் மாணவர்களை எக்காரணத்தைக் கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைப் பெற்றோர் அறிந்துகொள்ள சுமுகமான முறையில் கலந்துரையாடல் மேற்கொள்ளவேண்டும்.
மாணவர்களுக்கு நல்லொழுக்கமும், தன்னம்பிக்கை சார்ந்த வாழ்வியல் திறன்களை வளர்க்கவேண்டும்.
விளையாட்டுப் பாடவேளையில் மாணவர்களை விளையாட ஊக்கப்படுத்தி உடல்நலமும், மனநலமும் பெற உதவ வேண்டும்.
மாணவர்கள் கைபேசியை பள்ளிக்குக் கொண்டு வருவதை முழுவதுமாகத் தவிர்க்கவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்துக்குள் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டுவிழா நடத்தி முடிக்கப்படவேண்டும். திரைப்படப்பாடல்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
மாணவர்கள் மோதிரம், செயின், கையில் ஒயர் போன்றவைகளைக் கண்டிப்பாக அணிந்துவரக்கூடாது.
மாணவர்கள் அணிந்துகொண்டு வந்தால், அவர்களின் பெற்றோரை அழைத்து வரச்சொல்லி விவரத்தைத் தெரிவிக்கவேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் சதுரங்க விளையாட்டுக்கு தனி வகுப்பறை உருவாக்கப்பட்டு, பெயர்ப் பலகை பொருத்தியிருக்கவேண்டும்.
இந்த முக்கிய அறிவுரைகள் உட்பட பல்வேறு வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது.
இதற்கு பெற்றோர்கள் வரவேர்பு தெரிவித்துள்ளனர்.