ஜக்கிவாசுதேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் – ஊடகமையம் வலியுறுத்தல்

‘சேவ் சாயில்’ இயக்கத்துக்காக 100 நாள்கள் 27 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட ஈஷா ஃபவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பிபிசி தமிழுக்கு அளித்த ஒரு பிரத்யேக பேட்டியில், மண் வளப் பாதுகாப்புக்கான அவரது இயக்கம் பற்றியும் சர்ச்சைக்குரிய பிற பிரச்னைகள் பற்றியும் பேசினார்.

அப்போது, ஈஷாவுடைய கடிதத்திலேயே “சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் விதிகளை மீறிவிட்டோம்” என்று குறிப்பிட்டு, அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய உங்கள் கருத்து? என்று கேட்டவுடன்,
பிபிசியின் கேமராவை ஆஃப் செய்யுமாறு ஜக்கி வாசுதேவ் தனது தன்னார்வலர்களிடம் அறிவுறுத்தினார். பிபிசியின் 3 கேமராக்களையும் அவர்களே கட்டாயமாக ஆஃப் செய்துவிட்டார்கள்.

இதற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

பத்திரிகையாளரை மிரட்டி, பணிசெய்ய விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபட்ட ஜக்கி வாசுதேவ் மற்றும் உதவியாளர்களை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

ஈஷா ஃபவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பிபிசி தமிழ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின்போது, கோவையில் உள்ள ஈஷா மையத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்தும், அதன் பிறகே அனுமதி பெறப்பட்டது குறித்தும் ஜக்கி வாசுதேவிடம் பிபிசி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளிக்க முடியாமல் திணறிய ஜக்கி வாசுதேவ், கேள்வி எழுப்பிய செய்தியாளரை நோக்கி கையை நீட்டி அச்சுறுத்தும் வகையில் ஒருமையில் பேசியதுடன், அவரை பொது அறிவற்றவர் என்றும் கூறியுள்ளார்.

ஜக்கி வாசுதேவின் அந்த நேர்காணலை 09.06.22 அன்று டிஜிட்டல் தளத்தில் பதிவேற்றியுள்ள பிபிசி தமிழ் செய்தி நிறுவனம், நேர்காணலின் இடையிலேயே ஜக்கி வாசுதேவின் ஆட்கள் கேமராக்களை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

அமைதியையும், அன்பையும் போதிப்பதாகக் கூறிக்கொள்ளும் ஜக்கி வாசுதேவ், செய்தியாளர் எழுப்பிய ஒரு நியாயமான கேள்வியை எதிர்கொள்ள முடியாமல், அவரிடம் கோபப்பட்டு, அவரை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அத்துடன், ஜக்கி வாசுதேவின் உதவியாளர்கள் செய்தியாளர்களைப் பணிசெய்யவிடாமல் தடுக்கும் வகையில், கேமராக்களை நிறுத்தியது அராஜகத்தின் உச்சம்.

ஆகவே, செய்தியாளரை அச்சுறுத்தும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் நடந்துகொண்ட ஜக்கி வாசுதேவின் நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவருடைய உதவியாளர்கள் பத்திரிகையாளர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response