அரசியல் சாசனத்தைப் படிக்கச் சொல்லுங்கள் – பாஜகவினருக்கு ப.சிதம்பரம் சூடு

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, வரும் ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக, கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. நாளை (ஜூன் 1) தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 3 ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 இடம் கிடைத்துள்ளது. அதில் 3 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் காங்கிரசும் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் 2 பேர் போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.கல்யாணசுந்தரம், ஆர்.கிரிராஜன், ராஜேஷ்குமார், அதிமுக சார்பில் போட்டியிடும் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர், காங்கிரசு சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் ஆகியோர் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது. வேறு தகுதியான வேட்புமனுக்கள் வராதபட்சத்தில், தேர்தல் நடைபெறாது. எனவே, இறுதி அறிவிப்பு வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தலைமைச் செயலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ப.சிதம்பரம் அளித்த பேட்டி…

மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவு தருகிற திமுக, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வேட்புமனு தாக்கல் செய்ததைக் கட்சித்தலைவர் சோனியா காந்தியிடம் கூறினேன். அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறையைப் பற்றி நான் புதிதாக கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 2 நாட்களுக்கு முன் ஷாருக்கான் மகனின் வழக்கு எந்த விதத்தில் முடிந்தது என்று உங்களுக்குத் தெரியும். நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். நான் ஒரு மனிதன். நான் காங்கிரசுக் கட்சியையும், கொள்கையையும் பிரதிபலிக்கிறேன்.

பாஜக என்னைப் பார்த்துப் பயப்படுவதாக நான் நினைக்கவில்லை. காங்கிரசுக் கட்சியின் கொள்கையைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்தியாவிலேயே என்னை விட தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் காங்கிரசுக் கட்சியில் பலர் இருக்கிறார்கள். ஆனால், தேர்வு செய்ததைப் பற்றி நான் கருத்துக்கூற முடியாது.

முதல்வர் மீது பாஜக வைக்கும் விமர்சனம் தவறு. பிரதமருக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழக அரசு தந்துள்ளது. பிரதமர் தனது அரசின் சாதனைகளை விளக்கிக் கூறினார். அதேபோல், முதல்வர் தனது மாநிலத்தின் தேவைகளை எடுத்துக்கூறினார். இருவர் பேசியதும் சரி தான்.

எனவே, பாஜக வைக்கும் விமர்சனம் சரியானது இல்லை. அரசியல் சாசனத்தில் யூனியன் என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்படுகிறது. அதை அவர்களைப் படித்துப்பார்க்கச் சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response