சிதம்பரம் நடராசர் கோயிலில் தேவாரம் திருவாசகம் பாட வாருங்கள் – பெ.மணியரசன் அழைப்பு

சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம் திருவாசகம் ஓதி வழிபட ஆறுநாள் தொடர் அணிவகுப்பு நடத்தப்படும் என
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

சிதம்பரம் நடராசர் திருக்கோயில் எந்த சாதியாருக்கும் எந்தப் பிரிவார்க்கும் தனி உடைமை அல்ல. பொதுவாகப் பக்தர்கள் அனைவர்க்கும் – குறிப்பாக – சிவநெறியாளர்கள் அனைவருக்குமான புனித நிலையமாகும். அத்திருக்கோயில் சோழப் பேரரசர்களாலும், சிவநெறிச் செல்வர்களாலும் எழுப்பப்பட்டது. சிதம்பரத்தில் வசித்து வரும் தீட்சிதர் எனப்படும் ஒரு சாதிப் பிரிவினர் தங்களுக்கு மட்டும் உரிய கோயில் அது என்று சொத்துரிமை கோர முடியாது.

அன்றாடம் பல்லாயிரக்கணக்கான இந்து மக்கள் வந்து வழிபட்டுக் காணிக்கை செலுத்தும் சிதம்பரம் நடராசர் கோயில், இந்திய அரசமைப்புச் சட்ட வரம்புக்குள் (உறுப்பு 25 (b)) வராத ஒரு நிறுவனமல்ல. அதேபோல், சமூகச் சமநிலை, மனித உரிமை, பொது ஒழுங்கு முதலிய வற்றிற்குப் பொறுப்பான தமிழ்நாடு அரசின் பொதுவான சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டதும் அல்ல!

நடராசர் திருக்கோயிலில் உள்ள சிற்றம்பலம் (கனகசபை) கருவறை அல்ல. அது பூசை (அர்ச்சனை) செய்யப்படும் இடம் அல்ல. பக்தர்கள் சிற்றம்பல மேடையிலிருந்து நாடராசரைத் தரிசிப்பதற்கும், தேவாரம் – திருவாசக மந்திரங்களை ஓதுவதற்கும், பாடுவதற்கும் உரிய இடம் அது. அம்மேடையில் சாதி அடிப்படையில் தங்களைத் தவிர மற்ற பக்தர்களை அனுமதிக்க மாட்டோம் என்று விதிமுறைகள் வகுப்பதற்குத் தீட்சிதர்களின் நிர்வாகக் குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை.

அண்மையில் (13.02.2022), சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த செயசீலா என்ற இலட்சுமி என்பவர், சிற்றம்பல மேடை ஏறி வழிபடச் சென்றபோது, தீட்சிதர்கள் அவரைத் தடுத்து, கொச்சையாக ஏசி, வலுவந்தமாக வெளியேற்றியுள்ளார்கள். இக்கொடுமை குறித்து அப்பெண் கொடுத்த புகாரில், காவல்துறையினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

கோயில்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா முடக்கம் தளர்த்தப்பட்டு, அன்றாடம் கருவறை முன் திரளான பக்தர்கள் கூடி நடராசரை வழிபட்டுவரும் இக்காலத்தில், கொரோனா முடக்கத்தைக் காரணம் காட்டி, சிற்றம்பல மேடையில் யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவது முற்றிலும் சட்டவிரோதச் செயல்!

தீட்சிதர்கள் தில்லை அம்பலவாணர் கோயிலில் கடைபிடிக்கும் வர்ணாசிரமக் கொடுமை – மனித உரிமைப் பறிப்பு நந்தனார் காலத்திலிருந்து நாளது வரை தொடர்வது பேரவலம் ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிராமணரல்லாத சிவநெறியாளர் ஆறுமுகசாமி அவர்கள் தில்லைச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம்பாடி நடராசரை வழிபட்டபோது, தீட்சிதர்கள் அவரை அடித்துக் காயப்படுத்தி வெளியேற்றினர்.

”சத்திரம் பலபேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்தீர்?” என்று திருநாவுக்கரசர் ஏழாம் நூற்றாண்டிலேயே செவியில் அறைவதுபோல் கேள்வி கேட்டார். எனவே, தொடரும் தீட்சிதர்களின் சாதி ஆதிக்க வெறிக்குத் தீர்வு கண்டாக வேண்டும். பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தெய்வத் தமிழ்ப் பேரவை தொடர் அறவழி ஆன்மிக இயக்கம் நடத்தவுள்ளது.

“சிற்றம்பலத்தில் தேவாரம் திருவாசகம் பாடச் செல்வோம்” என்ற வேண்டுகோளுடன் 28.02.2022 திங்கட்கிழமை முதல் 05.03.2022 சனிக்கிழமை வரை முதல்கட்ட வழிபாட்டு இயக்கம் அறவழியில் நடைபெறும். சிற்றம்பல மேடையில் ஏறி, மெய்யான வழிபாட்டுணர்வுடன் தேவாரம், திருவாசகம் ஓதி நடராசரை வணங்கிட அன்பர்கள் அணி அணியாக ஒவ்வொரு நாளும் பங்கேற்குமாறு தெய்வத் தமிழ்ப் பேரவை அழைக்கிறது!

கோரிக்கைகள்

1.தமிழ்நாடு அரசே, சிதம்பரம் நடராசர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் ஓதி இறைவனை வழிபட ஏற்பாடு செய்க! பாதுகாப்பு வழங்குக!

இந்திய அரசமைப்புச் சட்டம் 25(b)-க்கு எதிராகச் செயல்படும் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடு!

2.தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றி, சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையில் சேர்த்திடுக!

3.சிற்றம்பல மேடையேறி நடராசரை வழிபடச் சென்ற பெண்ணைத் தாக்கியவர்களை உடனடியாகச் சிறையில் அடை!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response