விடிய விடிய ஆறாய்ப் பாய்ந்த பணம் – கேலிக்கூத்தாகும் தேர்தல்

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகிய 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.

1,369 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,824 நகராட்சி உறுப்பினர்கள், 7,409 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,602 பதவி இடங்களுக்கு இந்தத் தேர்தல் நடக்கிறது.

இந்தப் பதவியிடங்களைக் கைப்பற்ற 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர்.

இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும், நாம் தமிழர் கட்சி, பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்காக 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளன. இந்தத் தேர்தலில் 2 கோடியே 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்தத் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை ஆறு மணியோடு நிறைவடைந்தது.

ஆனால் அதன்பின்னர், விடிய விடிய திமுக, அதிமுக ஆகிய கட்சியினர் பம்பரம் போல் பணியாற்றியிருக்கின்றனர்.

வாக்காளர்களுக்குத் தேடித் தேடிப் பணம் கொடுத்ததாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.ஐநூறு ரூபாய் முதல் மூன்றாயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளனர்.

எவ்வளவு விழிப்புணர்வுப் பரப்புரைகள் செய்தாலும் பணம் கொடுப்பதை கட்சிக்காரர்களும் நிறுத்தவில்லை, பணம் வாங்குவதை மக்களும் நிறுத்தவில்லை.

சனநாயகம் கேலிக்கூத்தாகிக் கொண்டேயிருக்கிறது.

Leave a Response