மழுப்பும் சேகர்பாபு எதிர்க்கும் பெ.மணியரசன் – என்ன நடக்கிறது?

தமிழுக்கு எதிரான குடமுழுக்குத் தீண்டாமைக்குத்
தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது என
தெய்வத் தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பளார் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

பழனியில் 27.1.2023 அன்று நடைபெற உள்ள தமிழ்க் கடவுள் முருகன் கோயில் திருக்குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா என்று, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் திரு.கோ.வி.செழியன் அவர்கள் இன்று (12.1.2023) சட்டப்பேரவையில் எழுப்பிய வினாவுக்கு நேரடியாக விடை கூறாமல் கேட்கப்படாத வினாக்களுக்கு விடையளித்தார் அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு.

தமிழிலேயே குடமுழுக்கு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது, நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஓதுவார்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தமிழிசை மந்திரம் ஓத குடமுழுக்கு தமிழிலேயே நடைபெறும் என்று அமைச்சர் விடை கூறினார்.

பழனிமுருகன் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக் கலசப் புனித நீர் ஊற்றல் ஆகிய மூன்று இடங்களிலும் தமிழ் மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வேள்விச் சாலையிலும், கோபுரக் கலசத்திலும் சமற்கிருதம் சொல்வோர் எண்ணிக்கைகுச் சமமாக தமிழ்மந்திரம் அர்ச்சிப்பாரும் இடம் பெற வேண்டும். கருவறைக்குள் தமிழ் மந்திர அர்ச்சனை நடைபெற வேண்டும்.

இது குறித்து விளக்கம் சொல்லாமல், ஓதுவார்களை வெளியே நிறுத்தி ஒலிபெருக்கி முன் பாட விடுவது தமிழ் மந்திர அர்சனை அல்ல; தமிழ்க் குடமுழுக்கும் அல்ல.
ஏற்கெனவே 2020-இல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கிலும், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கிலும் அளித்த தீர்ப்புகளில் மேலே சுட்டிக்காட்டப்பட்டவாறு சமற்கிருதத்திற்குச் சமமாகத் தமிழிலும் அர்ச்சனைகள் நடைபெற வேண்டும் என்று கூறப்பட்டது.

இத்தீர்ப்பைச் செயல்படுத்த வலியுறுத்தி பழனியில் 20.1.2023 அன்று காலை 10 மணிக்கு தெய்வத் தமிழ்ப்பேரவை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response