36 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டின் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு – பழ.நெடுமாறன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக பா.ச.க. அரசும், எதிர்க்கட்சியான காங்கிரசும், ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டுத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டு எல்லையிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் இந்த அணையைக் கட்டி 67.17 டி.எம்.சி. நீரைத் தேக்கத் திட்டமிட்டுள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ண சாகர் அணை, கபினி அணை ஆகியவை நிரம்பி வழியும் நீர் முழுமையாகத் தமிழ்நாட்டிற்கு வருகிறது. இந்த மிகை நீரைத் தடுத்து நிறுத்துவதே கர்நாடகத்தின் திட்டமாகும்.

ஆண்டுதோறும் காவிரியில் 200 டி.எம்.சி. நீருக்கு மேல் வீணாகக் கடலில் கலக்கிறது. அதைத் தடுக்கும் வகையில் தமிழகம் எதுவும் செய்யவில்லை. அவ்வாறு நீர் வீணாவதைத் தடுக்கவே மேகதாட்டு அணைத் திட்டம் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கர்நாடகம் பொய்யாகக் கூறி வருகிறது.

1961 ஆம் ஆண்டில் தமிழகம் ஒகேனக்கல், ராசிமணல் ஆகிய இடங்களில் 2 அணைகள் கட்டி மிகை நீரையும், வெள்ள நீரையும் சேமித்து மின் உற்பத்தி செய்வதற்கும், எஞ்சிய நீரை மேட்டூர் அணையின் உயரத்தை மேலும் 10 அடி உயர்த்திக் கட்டி வெள்ள நீரைச் சேமித்துப் பாசனத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தத் திட்டமிட்டது.

ஆனால், தமிழகத்தின் அணைத் திட்டங்களுக்குக் கர்நாடகம் கடும் எதிர்ப்புக் காட்டியது. இதன் விளைவாக இத்திட்டங்களுக்குக் கர்நாடக மாநிலத்தின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு கூறியது. கடந்த 36 ஆண்டு காலத்திற்கும் மேலாகத் தமிழக அணைத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், இப்போது கர்நாடகத்தின் திட்டத்திற்குத் தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றிய அரசு அதைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை.

கர்நாடகத்தில் தனது கட்சி அரசு பதவி வகிப்பதால் ஒன்றிய பா.ச.க. அரசு இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடும் என்ற ஐயம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும், அனைத்து விவசாய அமைப்புகளும் ஒன்றிணைந்து மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை வற்புறுத்தும் வகையில் போராட்டம் நடத்துவதற்கு முன்வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response