நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து இன்று மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனைக்குப் பிறகு தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்….

* சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

* மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

* அனைத்துப் பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

* அனைத்துப் பொருட்காட்சிகள், புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

1) 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்படும்.

2) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

3) உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படும்.

4) பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park / Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

5) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

6) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

7) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

8) கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

9) உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

10) பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.

11) மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

12) திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் (Multiplex/Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

13) திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

14) உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

15) அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Response