குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்ட கு.ராமகிருஷ்ணன் – கி.வீரமணி கண்டனம்

கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸின் ஷாகா என்னும் வன்முறைப் பயிற்சிக்கு அனுமதி அளிப்பதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது கண்டன அறிக்கை வருமாறு:….

கோவை மாநகரில் தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். என்னும் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பின் ஷாகா என்னும் வன்முறைப் பயிற்சி நடந்து கொண்டுள்ளது.

கே.எம்.சி.எச். என்னும் செவிலியர் பள்ளியில்கூட பெண்களுக்கு வன்முறைப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்ட நிலையில், எதிர்ப்பின் காரணமாக பள்ளி நிர்வாகம் அங்கு ஷாகா பயிற்சி அளிப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டது – சில வாரங்களுக்கு முன்பு.

அதேநேரத்தில் கோவை விளாங்குறிச்சியில் உள்ள தர்மசாஸ்தா மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸின் வன்முறையைக் கற்றுத்தரும் ஷாகா பயிற்சி சில நாள்களாக நடத்தப்பட்டு வரும் நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருஷ்ணன் தலைமையில், 40-க்கும் மேற்பட்ட தோழர்கள், ஒரு கல்வி நிறுவனத்தில், மாணவர்களுக்கு வன்முறைப் பயிற்சியும், வன்முறைத் தொடர்பான வகுப்பும் நடத்தப்படுவதைக் கண்டித்து நேற்று (30.12.2021) ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது, காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தோழர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிக் காவல் துறை வாகனத்தில் ஏற்றி, ரிமாண்ட் செய்ய ஆயத்தமானார்கள்.

பிரச்சினை பெரிய அளவுக்கு வெடித்துக் கிளம்பி- பொது மக்களின் ஆதரவும் பெருகும் என்ற சூழ்நிலையில், கடைசி கட்டத்தில் நேற்றிரவு 8 மணியளவில் தோழர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நேரத்தில், மற்றொரு நிகழ்வைக் குறிப்பிட்டாக வேண்டும். அப்பொழுதுதான் கோவை மாநகரக் காவல்துறையின் எண்ணமும், போக்கும் எந்த அளவில் இருக்கிறது – இரட்டை அணுகுமுறை இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

கடந்த 17 ஆம் தேதி கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேராசிரியர்சுப.வீரபாண்டியன், எழுத்தாளர் ஓவியா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதனைக் கண்டிக்கும் வகையில் இரண்டு நாள்கள் கழித்து 19.12.2021 அன்று வாய்த் துடுக்குப் பேர்வழி (கெஞ்சினால் மிஞ்சுவதும் – மிஞ்சினால் கெஞ்சும் மன்னிப்புப் புகழ் ஆசாமி) எச்.ராஜா தலைமையில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வாசலில் மேடை போட்டு ஆர்ப்பாட்டத்தை காவல்துறை அனுமதியோடு நடத்தியுள்ளனர். 300 பேர் வரை ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

தந்தை பெரியார் பற்றியும், முதலமைச்சரைப் பற்றியும் வாய்க்கு வந்தவாறு கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் பேசியுள்ளார்.

ஒரு கல்வி நிறுவனத்தின் வன்முறை ஷாகா பயிற்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால், கைது நடவடிக்கை – ஒரு பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கம் நடத்துவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதற்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, அனுமதி என்றால், இது என்ன இரட்டை அணுகுமுறை?

பிஞ்சு உள்ள மாணவர்கள் மத்தியில், மத நஞ்சையும், வன்முறை உணர்வையும் விதைப்பது ஆபத்தானதல்லவா? இது எப்படி அனுமதிக்கப்படுகிறது?

காக்கிச் சட்டையில் காவிகள் பால் காருண்யப் பார்வையா? அணுகுமுறையா? காவல்துறையில் கருப்பாடுகள் ஊடுருவலா?

தமிழ்நாட்டில் ஷாகா பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்று முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் மன்னார்குடி தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் பேசவில்லையா?

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸின் மண்டைக்காடு கலவரத்தை (1982) மய்யப்படுத்தி, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் டில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை முன் அனுமதியின்றிச் சந்திக்க வந்ததோடு அல்லாமல், முதலமைச்சருடன் கைகலக்கும் அளவுநடந்துகொண்ட போக்கை முதலமைச்சர் வன்மையாகக் கண்டிக்கவில்லையா?

தமிழ்நாட்டில் எங்குமே ஆர்.எஸ்.எஸ். ஷாகா நடத்திட அனுமதி மறுக்கப்பட்டதே! இந்த நிலையில், கோவையில் ஆர்.எஸ்.எஸ். வன்முறைப் பயிற்சிக்கு அனுமதி கொடுத்தது எப்படி? சட்ட விரோத செயலைக் கண்டித்தவர்களைக் கைது செய்தது எந்த அடிப்படையில்?

ஷாகா பயிற்சி நடத்தி, அதில் பிஞ்சு உள்ளங்களில் மத நஞ்சை ஊட்டி – சிறுபான்மை மக்கள்மீது வெறுப்பை உமிழ்ந்து வளர்ப்பதும் ஏற்கத்தக்கதா? சட்டம் ஒழுங்கு பிரச்சினையை அது ஏற்படுத்தாதா?

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உரிய வகையில் கவனம் செலுத்தி, தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசர அவசியமாகும்.

அமைதி தவழும் அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் அமளியை உண்டாக்கும் வன்முறைப் பயிற்சிகளுக்கு இடம் அளிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வன்முறையைத் தடுக்கவேண்டிய காவல்துறை ஆர்.எஸ்.எசுக்கு ஆலவட்டம் சுற்றுவதற்கும் ஒரு முடிவு ஏற்படுத்தப்படவேண்டும்.

இது தமிழ்நாடு உத்தரப்பிரதேசமல்ல என்பது காவிகளுக்கும் நினைவிருக்கட்டும்!

கி.வீரமணி,தலைவர்,திராவிடர் கழகம்.
சென்னை
31.12.2021

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response