இராமர்பாலம் மணற்திட்டுவரை வந்த சீனத்தூதர் – இந்தியாவுக்கு ஆபத்து இராமதாசு எச்சரிக்கை

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்ட அறிக்கையில்…

இலங்கைக்கான சீனத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள கி சென்ஹாங், கடந்த புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்களும் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிவிலுக்கு வேட்டி அணிந்து சென்ற சீனத் தூதர், அங்கு இந்து சமய முறைப்படி வழிபாடு நடத்தியதுடன், கோயிலுக்கு நன்கொடைகளையும் வழங்கியுள்ளார்.

சீனாவையும், சிங்களத்தையும் எதிரியாகப் பார்க்கும் ஈழத்தமிழர்கள் மத்தியில் தனக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொண்டு, இலங்கையின் வடக்குப் பகுதியிலும் கால் பதிக்க வேண்டும், அதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பது தான் சீனாவின் நோக்கமாகும்.

யாழ்ப்பாணத்தில் பயணம் மேற்கொண்ட சீனத் தூதர் சென்ஹாங், பருத்தித்துறைக்குச் சென்று அங்குள்ள சிங்களக் கடற்படையினரிடம் ‘‘இங்கிருந்து இந்தியா எவ்வளவு தூரம்?’’ என்று கேட்டறிந்ததும், அங்கிருந்து டிரோன்கள் மூலம் இந்திய எல்லையைக் கண்காணித்ததும், கடைசியாக தமிழக எல்லைக்கு அருகில் இராமர் பாலத்தின் மூன்றாவது மணற்திட்டு வரை படகில் பயணித்து பார்வையிட்டுச் சென்றுள்ளதும் பொழுதுபோக்குவதற்காக அல்ல, இந்தியாவைக் கண்காணிப்பதற்கான உத்திகளை வகுப்பதற்காகத் தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகள் எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இதைக் கருத்தில் கொண்டு இந்தியா பாதுகாப்பு உத்திகளிலும், வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response