இவ்வாண்டு கோடையில் அதிகத் தகிப்பு – வானிலை மையம் அறிவிப்பு

இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்றும் இந்தியாவின் மேற்கு மற்றும் தென் இந்தியாவின் மேற்கு பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மொகபாத்ரா கூறுகையில்….

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதில், மத்திய இந்தியா, தீபகற்ப இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் இதற்கான வெப்பம் கடுமையாக இருக்கும்.

இமாலயப் பகுதிகள், வட கிழக்கு மாநிலங்கள், வடக்கு ஒடிசாவில் குறைந்த மற்றும் வழக்கத்துக்கும் குறைவான அதிகபட்ச வெப்பநிலையே இருக்கும். இந்த காலக்கட்டத்தில், சமதள பகுதிகளில் வழக்கத்துக்கும் அதிகமான வெப்ப அலை இருக்கும்.

வழக்கமாக 4 முதல் 8 நாட்கள் வரை இருக்கும் வெப்ப அலை 10 முதல் 20 நாட்கள் வரை நீடிக்கும்.

குஜராத், மத்திய மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மபி,ஒடிசா, வடக்கு சட்டீஸ்கர்,ஆந்திரா ஆகிய மாநிங்களில் வெப்ப அலை கடுமையாக இருக்கும்.

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் குறிப்பாக தென்னிந்தியாவில் வழக்கமானதை விட அதிகபட்ச வெப்ப நிலையே இருக்கும்.மத்திய இந்தியா, வட இந்திய சமதள பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அதிக நாள் வெப்ப அலை நீடிக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 19 ஆம் தேதியில் இருந்து ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழுகட்டங்களாகத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன.தேர்தல் நடக்கும் இந்தக் காலக்கட்டத்தில்தான் நாட்டில் கடுமையான வெப்பம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Response