தீபாவளியன்று நடந்த போட்டி – இந்திய அணி வீரர்கள் செய்த 11 சாதனைகள்

ஐசிசி ஒருநாள் மட்டைப்பந்து உலகக் கோப்பைப் போட்டித் தொடர் நடந்துவருகிறது. இந்தத் தொடரில் தீபாவளி நாளான நேற்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மட்டைப்பந்து மைதானத்தில், கடைசி தகுதிச்சுற்று ஆட்டம் நடந்தது.

அந்த ஆட்டத்தில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதின.

இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நான்கு வீரர்களை இழந்து 410 ஓட்டங்கள் எடுத்தது. அதன்பின் விளையாடிய நெதர்லாந்து அணி,47.5 ஓவர்களில் அனைத்து வீரர்களையும் இழந்து 250 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது.

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம்,விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் செல்கிறது.

நெதர்லாந்துக்கு எதிரான ஒரே போட்டியில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை புரிந்தனர்.

அவற்றில் சில…

1. சர்வதேச போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி 14,000 ஓட்டங்களைக் கடந்து அணித்தலைவர் ரோகித் சர்மா சாதனை.

2. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் கடந்து 61 ஓட்டங்களைச் சேர்த்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ரோகித் சர்மா.

3. அதேபோல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில், ஒரு ஆண்டில் மட்டும் 59* சிக்சர்களை பறக்கவிட்டு, அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்தார். இவருக்கு அடுத்ததாக டி வில்லியர்ஸ் – 58 (2015), கெயில் – 56 (2019) ஆகியோர் உள்ளனர்.

4. மேலும், நடப்பு தொடரில் 24 சிக்சர்கள் விளாசியதன் மூலம், ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய அணித்தலைவர் என்ற சாதனையையும் ரோகித் படைத்தார். இவருக்கு அடுத்ததாக மோர்கன் (22 சிக்ஸ், 2019 உலகக் கோப்பை) உள்ளார்.

5. நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 2000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சுப்மன் கில்.

6. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி.இவர் 594 ஓட்டங்கள் எடுத்தார். இவருக்கு அடுத்ததாக டி காக் – 591, ரச்சின் ரவீந்திர – 565, ரோகித் – 503 உள்ளனர்.

7. இப்போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ், கே.எல்.ராகுல் ஆகிய 5 தொடக்க வீரர்களும் அரை சதம் விளாசினர். ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக, முதல் 5 ஆட்டக்காரர்களும் அரை சதம் விளாசி உள்ளனர். அதேநேரம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது 3 ஆவது நிகழ்வு ஆகும். இதற்கு முன் (AUS vs IND, Jaipur, 2013 | AUS vs IND, Sydney, 2020) இரு தொடர்களிலும் நிகழ்ந்துள்ளது.

8. இன்றைய போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் விளாசிய சதம், உலகக் கோப்பையில் அவரின் முதல் சதம் ஆகும்.

9. மற்றொரு சதம் விளாசிய கேஎல் ராகுல், உலகக் கோப்பைத் தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இன்றைய போட்டியில் 62 பந்துகளில் இந்தச் சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 63 பந்துகளில் ரோகித் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

10. இன்றைய இரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுக்கும்விதமாக விராட் கோலி பந்துவீசினார். தான் வீசிய மூன்றாவது பந்திலேயே நெதர்லாந்து அணியின் தலைவர் ஸ்காட் எட்வர்ட்ஸை 17 ஓட்டங்களில் வீழ்த்தினார் விராட் கோலி. 9 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பந்துவீச்சில் விக்கெட் கைப்பற்றினார் விராட்.

11. விராட் கோலி போல் அணித்தலைவர் ரோகித் சர்மாவும் இப்போட்டியில் பந்துவீசினார். ரோகித் ஓவரில் சிக்சர் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்த தேஜா நிடமானுரு, அவரின் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.அதோடு ஆட்டம் முடிந்தது.

குறிப்பிடத்தக்க இந்த நிகழ்வுகள் நேற்றைய போட்டியில் நடந்தன.

Leave a Response