திருப்பூரில் மாவீரர்நாள் – சீமான் உரையாற்றுகிறார்

உலகத் தமிழர்களால் இன்று மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவுநாள்.

தமிழீழத்தில் சிங்கள இராணுவத்துடன் நடைபெற்ற சண்டையில் படுகாயமடைந்து, சிகிச்சைக்காகத் தமிழகம் கொண்டுவரப்பட்ட அவரைப் பிழைக்க வைக்க அவரது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்காமல், தலைவரும்,தோழர்களும் கண்கலங்கி நிற்க 27.11.1982 அன்று மாலை 6.05 மணிக்கு சங்கர் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக் கொள்கிறார்.

தமிழீழ விடுதலைக்காக முதற் களப்பலியான லெப்.சங்கரின் நினைவுநாள், தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தாயின் மடியில் புதைக்கப்பட்ட அனைத்து மாவீரர்களையும் நினைவு கூரும் மாவீரர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

தனது இனிய உயிர் அர்ப்பணிப்பால் விடுதலைக்கு வித்திட்டு உரமான மாவீரர்களை நினைவுகூரும் புனித நாளான இந்நாள்,தமிழீழத்தின் தேசிய நாளாகக் கருதப்படுகிறது.சங்கர் உயிர் பிரிந்த நேரமான 6.05 மணிக்கு,மாவீரர் நாளில் மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.

உலகெங்கும் கடைபிடிக்கப்படும் இந்நிகழ்வு தமிழகத்தில், திருப்பூர் தாராபுரம் ரோடு வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…

அந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி 67 பேர் கண் தானம் மற்றும் இரத்ததானம் செய்கிறார்கள்.

மாலை 3 மணிக்கு நிமிர்வு பறையிசை முழக்கமும், 4 மணிக்கு சமர்ப்பா இன எழுச்சிப் பேரிசை நடக்கிறது. மாலை 5.50 மணிக்கு புலிக்கொடி ஏற்றப்படுகிறது. 6.05 மணிக்கு நினைவொலி எழுப்புதல், 6.07 மணிக்கு அகவணக்கம், ஈகைச்சுடர் ஏற்றம் மற்றும் மாவீரர் பாடல்கள் பாடப்படுகிறது.

மாலை 6.50 மணிக்கு சீமான் மாவீரர் நாள் உரையாற்றுகிறார். தொடர்ந்து திருப்பூரில் பல இடங்களில் பனை விதை நடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது.

இவ்வாறு நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

Leave a Response