நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

18 ஆவது மக்களவைத் தேர்தல், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 27 ஆம் தேதி கடைசி நாள். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவி வருகிறது.

இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தார்.அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

கரும்பு விவசாயி சின்னத்திற்கு சிக்கல் ஏற்பட்டதால் சின்னம் இல்லாமல் நாம் தமிழர் கட்சி பரப்புரை செய்து வந்தது.

இந்நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு, தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Leave a Response