கழகம் காக்கப்படும் – அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்ற சசிகலா, தண்டனைக் காலம் முடிந்து 2021 சனவரி 27 ஆம் தேதி விடுதலையானர்.

ஏபரலில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார்.

தேர்தல் முடிந்த பின்பு அதிமுக தொண்டர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும் சசிகலா, அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார். 17 ஆம் தேதி அதிமுக பொன்விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அவர் தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்குச் சென்று அதிமுக கொடியை ஏற்றினார். மேலும், அவர் அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்க விழா நாள் கல்வெட்டைத் திறந்து வைத்தார்.

அதில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா என்று எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது. இது அதிமுகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘கல்வெட்டில் சசிகலா தனது பெயர் போட்டால் மட்டுமே கட்சியின் பொதுச் செயலாளர் ஆக முடியாது. கட்சி அதற்கான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.

இந்த நிலையில் மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் தொண்டர்களுக்கு வி.கே.சசிகலா கடிதம் ஒன்றை நேற்று எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி ஆளுமையால், ஆட்சிச் சிறப்பால் மக்கள் மனம் வென்ற ஜெயலலிதா பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம். பகை வெல்வோம். “தமிழ்ச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணமென்று மக்களுக்கு உரைப்போம். புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா. மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அதிமுக நாடாண்டதையும் அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். எத்தனை, எத்தனை இன்னல்களைக் கடந்த ஜெயலலிதா சென்ற வழியில் தடையின்றி செல்ல உறுதி கொள்வோம்.

நீங்கள் நினைப்பது புரிகிறது. கழகம் காக்கப்படும். காலத்திற்காய்க் காத்திருப்பவன் ஏமாளி. காலத்தைக் கைப்பற்றுபவன் புத்திசாலி. ஜெயலலிதாவின் பிள்ளைகளான நாம் புத்திசாலிகளன்றோ. கரம் கோர்ப்போம். அம்பாய்ப் பயணிப்போம். இலக்குகளைத் தொடுவோம். அயராது உழைக்க மனம் கொள்வோம். எதிர்காலத்தை நம் கழகத்தின் கையில் கொண்டுவர சூளுரைப்போம். அஞ்சாது உறுதியேற்போம். மக்களுக்காய் நாமிருப்போம். நமக்காக மக்கள் இருப்பார்கள்.

ஆதிக்கம் ஒரு நாள் மக்களிடம் மண்டியிடும். ஜெயலலிதா பாதையில் மக்கள் மனம் வெல்வோம். ஒன்றுபடுவோம். வென்று காட்டுவோம். தலைவர் புகழ் ஓங்கட்டும். தலைவி புகழ் நிலைக்கட்டும். பொன்விழா பிறக்கும் இந்த நாள் கழகத்தின் வரலாற்றில் புது நாளாகட்டும். தலைவரின் எத்தனை எத்தனை திட்டங்களால் சமூகம் எழுச்சி கண்டது. கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது. தொடர்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response