சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் அரசியல் தலைவர்களின் பட்டியலை ஆர்எஸ்எப் என்று அழைக்கப்படும் எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் 37 தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஊடக செய்திகளுக்கு தணிக்கை முறையை ஏற்படுத்துவது, பத்திரிகையாளர்களைச் சிறையில் தள்ளுவது அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவீழ்த்து விடுவது அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்தியாளர்களின் மரணத்திற்குக் காரணமாக அமைவது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட 20 பேர் ஏற்கனவே இடம்பெற்றவர்கள். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாமு ஆகிய 2 பெண் தலைவர்கள் உட்பட 17 பேர் புதிதாக இடம் பிடித்துள்ளனர். அவர்களில் இந்திய பிரதமர் மோடியும் ஒருவர்.
2014 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற நாள் முதல் ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை நெறித்து வருவதாக ஆர்எஸ்எப் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
2001 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராகப் பதவியேற்ற மோடி, அந்த மாநிலத்தை செய்தி மற்றும் தகவல்களை கட்டுப்படுத்தும் ஆய்வுக் கூடமாக பயன்படுத்தினார் என்றும் அந்த அமைப்பு விமர்சித்துள்ளது.
பிரதமரான பின்பு முன்னணி ஊடகங்களில் சாமானிய மக்களுக்கான ஆதரவு நிலைப்பாடு போன்ற தேசிய கொள்கை பேச்சுகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அதிகப்படியாக பரவ விடுதல் போன்றவற்றைக் கொள்கையாகக் கொண்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக நிறுவனங்களை நடத்தும் பெரு முதலாளிகளுடன் மோடி நட்பு பாராட்டியதால் அவற்றில் பணிபுரிவோர் பிரதமர் மோடியை விமர்சிக்க அஞ்சியதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மற்றொரு புறத்தில் மோடிக்கு எதிராகச் செய்தி வெளியிடுவோரை மிரட்டும் செயலில் அவரது ஆதரவு செயல்பட்டதாகக் கூறி உள்ள ஆர்எஸ்எப் அமைப்பு, கர்நாடக பெண் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதைச் சுட்டிக் காட்டியுள்ளது. பத்திரிகை சுதந்திரம் உள்ள 180 நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 142ம் இடமே கிடைத்துள்ளது என்று ஆர்எஸ்எப் அமைப்பு பட்டியலிட்டுள்ளது.
உலக அளவில் சீன அதிபர் ரசிய அதிபர் ஆகியோர் வரிசையில் மோடி இடம் பிடித்திருப்பது பெருமைக்குரியதல்ல அவமானப்படவேண்டியது எனப் பலர் விமர்சனம் செய்கிறார்கள்.