லியோனியின் பொறுப்பு என்னவெனத் தெரியாமல் எதிர்க்கும் அன்புமணி படித்தவரா? – தெறிக்கும் விமர்சனங்கள்

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நிறுவனத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார்.

இவருடைய நியமனத்துக்கு பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்,

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்குப் படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களைத் தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

என்று கேட்டிருந்தார்.

இதனால் பலரும் அன்புமணியை விமர்சனம் செய்துவருகிறார்கள். இந்நிலையில் பேராசியர் அ.இராமசாமி இதுகுறித்து எழுதியுள்ளார்.

அதில்….

ஒரு விளக்கம்
=============
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் என்ற பதவி பாடத்திட்டங்களை உருவாக்கும் குழுக்களுக்கு வழிகாட்டும் பொறுப்புடைய பதவி அல்ல. அதன் தலைவர் பாடத்திட்டத்தின் கொள்கை வகுப்பாளர் அல்ல. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத் திட்டக்குழுக்களில் பங்கேற்றவன் என்ற நிலையில் இதைச் சொல்கிறேன். அப்பதவி வாரியத்தலைவர் பதவி போன்ற ஒன்றுதான். கல்விநிலைக்குழுக்கள், பாடத்திட்டக்குழுக்கள், தேர்வு வாரியங்கள் போன்றன வல்லுநர்களைக் கொண்டு திட்டமிட்டு உருவாக்கி, எழுதிப் பிழைதிருத்தித் தரும் நூல்களை அச்சிட்டு விநியோகிக்கும் பொறுப்பு மட்டுமே அதனுடையது.

அச்சு நூலாக்கத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, அச்சகங்களைத் தேர்வுசெய்து அச்சுக்குக் கொடுப்பது, உரிய நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்புவது போன்ற வேலைகளை பாடநூல் கழகம் செய்கிறது. அதற்கென ஒரு வாரியம் இருக்கிறது. அதன் தலைவராகத் திரு லியோனிக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பட்டிமன்ற/ அரசியல் பேச்சாளர் என்ற அடையாளம் மட்டுமல்ல; முன்னாள் ஆசிரியர் என்ற அனுபவமும் கூட அதற்குத்தேவையில்லை. இவருக்கு முன்னால் பொறுப்பேற்றவர்கள் செயல்பட்டதைப் போலவே இவரும் செயல்பட்டால் போதும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

பாடநூல் கழகத்தின் தலைவர் பொறுப்பு பாடநூல்களைத் தயாரிக்கும் பொறுப்புள்ள பதவி அல்ல, அது அச்சிடும் பணியை மட்டுமே மேற்கொள்ளும் நிறுவனம் அதன் தலைவராகத்தான் லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகூடத்தெரியாமல் லியோனி தலைமையில் பாடநூல்கள் தயாரிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சராகப் பதவி வகித்த, மருத்துவர் படிப்பு படித்த, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அன்புமணிக்குத் தெரியாதது ஏனோ? தெரியாவிட்டாலும் இதுதொடர்பாகப் பேசும்போதாவது தெரிந்துகொண்டு பேசியிருக்கலாமே? என்று பலரும் அன்புமணியை விமர்சனம் செய்கிறார்கள்.

Leave a Response