அறிஞர் அண்ணா எனும் அதிசயம்

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று.

பெரியார் சூரியன் என்றால் அண்ணா மழை. பெரியார் இலட்சியவாதி. அண்ணா எதார்த்தவாதி. பெரியார் நாளையைப் பற்றி சிந்தித்தார். அண்ணா இன்றைய பொழுதை தமிழர்க்கு கையளிக்கச் செயல்பட்டார்.

பெரியாரின் இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பை, மொழி உரிமையை, மாநில சுய ஆட்சிச் சிந்தனையை, சமூகநீதிக் கோட்பாட்டை, ஆரிய எதிர்ப்பை, மாற்று தேசிய உரையாடலாக்கியது அண்ணாவாலே சாத்தியமானது.

இரண்டு அறிவுசீவிகள் ஒரே கட்சியில் இருக்க முடியாது என்கிற நடைமுறை எதார்த்தத்திலிருந்து உருவானதே தி.மு.க. பெரியார் திருமணம் என்பதெல்லாம் பிரிவதற்காக உருவாக்கப்பட்ட காரணங்களே.

அண்ணா போன்ற சிந்தனையும் செயல்திறமையும் இணையப் பெற்ற தலைவர்கள் நீண்ட நாட்கள் ஒரு தொண்டனாக நீடிப்பது சிரமம்தான். ஆனாலும் குரு, சிஷ்யரிடையே ஏற்பட்ட இந்த உடைப்பு தமிழகத்தில் பெரும் ஆற்றலை வெளிக்கொணரும் ஒரு அறிவியல் நிகழ்வாகவே அணுகப்பட வேண்டும்.

அதிகாரத்துக்கு வெளியே இருந்ததால்தான் பெரியாரால் சமரசமின்ற சமராட முடிந்தது. சிறிய அளவில் தேர்தல் சனநாயகத்தோடு சமரசம் செய்து கொண்டதால்தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த பல முட்களைப் பிடுங்க முடிந்தது அண்ணாவால்.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார் பெரியார். எந்த பக்தி இலக்கியங்களை பெரியார் கழுவி ஊற்றினாரோ அதே திருமூலரிடமிருந்து ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்கிற பதத்தை உருவி கையாண்டார் அண்ணா.

விநாயகரையும் உடைக்க மாட்டோம்! விநாயகருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்! என மென்மை காட்டினார்.
மாநிலங்களவை கன்னிப் பேச்சிலேயே திராவிட நாடு குறித்து அனல் கக்கினார். ஆனாலும் சீனப்போர் வந்தபோது, திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டார். வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என அதற்கொரு விளக்கமும் தந்தார்.

தான் நிதானமானவன். அவசரப்பட்டு குழிக்குள் விழுந்து விட மாட்டேன். அதற்காக அச்சப்பட்டு அடங்கிப்போகவும் மாட்டேன் என அரசியல் நுட்பம் கூடியவர் அண்ணா.

ஓரடி முன்னே, ஈரடி பின்னே என இயங்கியவர். இத்தகைய சாதுர்யத்தால்தான் முதல்வராக பதவி வகித்த குறுகிய காலத்தில் (2 ஆண்டுகள்) மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்ற முடிந்தது. சுயமரியாதை திருமணத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்க முடிந்தது.

தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை மனதில் கொண்டு, தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழி திட்டம் கொண்டுவர முடிந்தது.

ஆகாஷ்வாணி வானொலியாக மாறியதும். ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசியும் சாத்தியமானது.
புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்ய முடிந்தது.

பேருந்துகள் அரசுடைமை ஆகியது.ஏழை பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிந்தது. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற்றன.

சென்னை செகரட்டேரியட், தலைமைச் செயலகமானது.

விதவைகளைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க முடிந்தது.

ஒரு குமாஸ்தாவாக, ஆசிரியராக வேலை செய்தவர் அண்ணா. செங்குந்தர் இளைஞர் மாநாட்டுக்கு திருப்பூர் சென்ற இடத்தில் பெரியாரைச் சந்திக்கிறார் . அன்று பற்றிய பொறி பிறகு அணையவே இல்லை அண்ணாவிடம்!

கூட்டத்தில் நின்றால் கண்டுபிடிக்க முடியாத தோற்றம். குள்ளமான உருவம். மாற்று சிந்தனை, தீவிரமாக செயலாற்றும் திறன், சனநாயகப் பண்பு, நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை, எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், ஆங்கில அறிவு, எளிமை, நேர்மை இத்தகைய எல்லா படிக்கட்டுகளிலும் அயராது ஏறி, தன்னை உயரமாக்கி, உலகுக்கு காண்பித்தார் அண்ணா.

கட்டுடைப்பு (deconstruction) தமிழுக்கு அறிமாகும் முன்பே, கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் காணப்பட்ட மூடநம்பிக்கைகளை, பிற்போக்குத் தனங்களை, பெண்ணடிமைக் கருத்துகளை, டி கன்ஸ்ட்ரக்ட் செய்து பிரதியை கவிழ்த்துக் கொட்டியவர் அண்ணா.

யாரும் பேசப் பயந்ததைப் பேசியவர். மாநில சுய உரிமை பற்றி மாநிலங்களவையில் அவர் பேசியபோது நம் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அண்ணாவுக்கு ஆதவாக இல்லை.

தனித்து களமாடியவர். அதனால்தான் இந்தியாவிலேயே முதன்முறைதாக, காங்கிரசு அல்லாத அரசை அவரால் தமிழகத்தில் அமைக்க முடிந்தது.

தொடர்பு சாதனங்கள் அதிகம் இல்லாத காலத்தில், பேச்சையும் எழுத்தையும் வைத்து ஓர் இயக்கத்தை சாத்தியப்படுத்தியவர் அண்ணா.

வாழும்போது கிளையாக விரிந்து, நிழலையும் கனிகளையும் தமிழர்க்கு தந்த பெருமகன். இன்று மண்ணுக்குள் வேராக தமிழர் வாழ்வைத் தாங்கி நிற்கிறார்.

அண்ணாவைப் போற்றுவோம்!

– கரிகாலன்.ஆர்

Leave a Response