“தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” முழக்கத்தோடு, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் ஒரு வாரம் தொடர் மறியல் போராட்டத்தின், மூன்றாம் நாள் போராட்டம் 14.09.2020 – திங்கள் அன்று காலை நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள இந்திய அரசு அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் தொடர்ந்து வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரை இந்திய அரசு பணியமர்த்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, கொரோனா முழுமுடக்கக் காலத்திலும் தமிழ்நாட்டு இரயில்வேயில் 3,218 பேரை வேலையில் சேர்த்துள்ளது.
இவர்களில் 90 விழுக்காட்டினர்க்கு மேல் இந்திக்காரர்களும், பிற அயல் மாநிலத்தவர்களும் ஆவர். திருச்சி பொன்மலை தொடர்வண்டித் தொழிற்சாலையில் அண்மையில் பணியில் சேர்க்கப்பட்ட 541 பேரில், 400 பேர்க்கும் மேல் இந்திக்காரர்கள்! இதே இரயில்வேத் துறையில் இரண்டாண்டு பழகுநர் (Act Apprentice) பயிற்சி முடித்த பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்களைப் புறக்கணிக்கிறது இரயில்வே!
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2016 இல் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத பிற மாநிலத்தவரும் சேரலாம்; வேலையில் சேர்ந்த பின் இரண்டாண்டுகளில் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்று அத்திருத்தம் கூறுகிறது.
ஆனால், கர்நாடகம், குசராத், மகாராட்டிரம், சத்தீசுகட், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், ஆந்திரம், மத்தியப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் மாநில அரசு, தனியார் துறை, இந்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 100 விழுக்காடு, 90 விழுக்காடு, 80 விழுக்காடு – வேலை வழங்க வேண்டும் என்று சட்டங்கள் போடப்பட்டு செயல்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும், கொரோனா காலத்தில் தென்னகத் தொடர்வண்டித்துறையில் பணி நியமனம் செய்த 3,218 பேரில் வெளி மாநிலத்தவர்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள அனைவரின் தேர்வையும் இரத்துச் செய்ய வேண்டும், அப்பணி இடங்களைத் தேர்வெழுதிய தமிழர்களுக்கு வழங்க வேண்டும், மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் மண்ணின் மக்களுக்கான வேலைச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம் அமைத்து உடலுழைப்புப் பணிகள் உட்பட அனைத்துப் பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு கடந்த 11.09.2020 அன்று தொடங்கி 18.09.2020 வரை ஒரு வாரம் தொடர் மறியல் நடத்தப்படுகின்றது.
அதன்படி, 14.09.2020 திங்கட்கிழமை காலை, திருச்சி பொன்மலை தொடர்வண்டித் துறைத் தொழிற்சாலை முன்பு – மூன்றாம் நாள் மறியல் போராட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.முருகன் தலைமையில் நடைபெற்றது. த.தே.பே. திருச்சி மாநகரச் செயலாளர் வே.க. இலக்குவன் போராட்டப் பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பா.மணிமாறன், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்பிரமணிய சிவா, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் சி.பிரகாசு, சாத்துக்கூடல் இளையநிலா, வேல்முருகன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சின்னமணி, பொன்னிவளவன், மகளிர் ஆயம் வழக்கறிஞர் செந்தமிழ்ச்செல்வி, தமிழ்மொழி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.
முன்னதாக,14.09.2020 காலை புதுச்சேரியில் காலமான பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகளும், தமிழின உணர்வாளருமான தேன்மொழி அம்மாள் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, போராட்டக் களத்திலேயே அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தினர்.
போராட்டத்தில், த.தே.பே. பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு க.அருணபாரதி, சீர்காழி செயலாளர் அரவிந்தன், காட்டுமன்னார்குடி சிவ.அருளமுதன், கூடலூர் பா.தமிழ்ச்செல்வன், பொதுக்குழு மூ.த.கவித்துவன், வெற்றித்தமிழன், வெள்ளம்மாள், மகளிர் ஆயம் பொருளாளர் கனிமொழி, செயற்குழு உறுப்பினர் இந்துமதி, பெண்ணாடம் வித்தியா, திருச்சி கிருட்டினமூர்த்தி, பாஸ்கரன், தினேசு, அழகர் உள்ளிட்ட திரளான பேரியக்கத் உறுப்பினர்கள் பெண்களும் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
இப்போராட்டம் இன்னும் நான்கு நாட்கள் தொடர்ந்து நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.