ஊரடங்கை நீக்கி பொதுப்போக்குவரத்து தொடங்கவேண்டும் – வைகோ கோரிக்கை

தமிழகத்தில் பொது முடக்கத்தை நீக்க வேண்டும் எனவும், போக்குவரத்துத் தடையை விலக்க வேண்டும் எனவும், மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (ஆகஸ்ட்.25) வெளியிட்ட அறிக்கையில்…….

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது. நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கியது. ஆனால், அவை போதுமானதாக இல்லை.

அதேவேளையில், டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டது. அதனால் ஏழை, எளிய, அடித்தட்டுப் பொதுமக்கள் குடும்பங்களின் அமைதி பறிபோய்விட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் பெருகி வருகின்றன.

மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை நிறுத்தி, இ-பாஸ் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த ஐந்து மாதங்களில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த 47 இலட்சம் பேருக்கு வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை.

குழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. ஆனால், அவர்களுக்கு அந்தப் பாடத்தை படிப்பதற்கான கணினி, திறன் அலைபேசி வசதிகள் இல்லை. பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் அரசு, திறன் செல்பேசிகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

அப்படி, தமிழக அரசும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அரசிடம் அதற்கான நிதி இல்லை. கடந்த ஐந்து மாதங்களில் தமிழக அரசின் நிதி நிலை சீரழிந்துவிட்டது. அரசு திவால் ஆகும் நிலையில் இருக்கின்றது. கர்நாடக அரசு அனைத்துத் தடைகளையும் விலக்கிக் கொண்டுவிட்டது.

மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி புதுச்சேரி மாநில அரசு தனது எல்லைகளைத் திறந்துவிட்டது. தமிழ்நாட்டை விட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்லியில், ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்துத் தடைகளும் விலக்கப்பட்டு விட்டன. இப்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது.

எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் நலன் கருதி, தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு உள்ளே போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும்; அரசுப் பேருந்துகளைக் கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும்; செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இரயில்கள் ஓடுவதற்கும் ஆவண செய்ய வேண்டும்;

வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கும் வகை செய்ய வேண்டும் என மதிமுகவின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Response