மதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்

மதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,,

வீழ்ந்துவிட்ட ஓர் இனம் தன் நிலையிலிருந்து மேல்நோக்கி முன்னேறி எழ வேண்டுமாயின் அது தன் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். நம் முன்னவர்களின் புகழ்மிக்க வரலாற்றைத் தேடிப் போற்றுவதன் மூலமே நம்மை நாம் தேற்றிக்கொள்ளவும், இழிநிலையிலிருந்து மேம்படுதற்கான உந்துதலையும் பெற முடியும். வரலாற்றைத் தொலைத்து விட்ட எந்த ஓர் இனமும் வாழாது; வளராது!

எனவே ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தமிழினம் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட தன் வரலாற்று விழுமியங்களை மீளப் பெறுவதன் மூலமே தமிழ் எத்தகைய மூத்த தொன்மொழி என்பதையும், தமிழர்கள் எந்தளவு பண்பாடும், நாகரீகமும் மிக்க தொல்குடி என்பதையும் சான்றுகளோடு, அறிவியல்பூர்வமாக நம்மால் உலகின் முன் நிறுவ முடியும். அதுமட்டுமின்றி சிற்பம், ஓவியம், இசை, உள்ளிட்ட கலைநுட்பத்திலும், உலோகப் பயன்பாடு, கருவிகள் பயன்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பத்திலும் பண்டைகாலத் தமிழர்கள் எவ்வாறு சிறந்து விளங்கினர் என்பதனையும் நம்மால் அறியமுடியும். எனவே அதை நோக்கிய ஆய்வுகள் என்பது மிக முக்கியமானது.

பெருமளவில் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தமிழகத்தில் தொல்லியல்துறையினரால் மேற்கொள்ளப்படும் ஒன்றிரண்டு ஆய்வுகளிலேயே உலக வரலாற்றைத் திருத்தி எழுதக்கூடிய பல்வேறு தொல்லியல் பொருள்கள் கிடைத்து வருகின்றன. பல்வேறு தடைகளைத் தாண்டி அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கீழடி தொல்லியல் ஆய்வுகளே அதற்கு மிகச்சிறந்த சான்றாகும்.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படாத இடங்களில் நடத்தப்படும் ஆய்வுகளில் கிடைக்கும் தொல்லியல் பொருட்களின் வயதுகூட மிக மூத்ததாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. எனவே தமிழகத்தில் பெருமளவு தொல்லியல் ஆய்வுகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமான காலத்தேவையாகும்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள உலைப்பட்டியில் தொல்லியல் எச்சங்கள் பெருமளவு கிடைப்பதாக அப்பகுதியை சார்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாகக் கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள், ஈமச்சின்னங்கள், வண்ணம் பூசிய பானைகள், நடுகற்கள் ஆகியவை அதிகளவு கிடைக்கப்பெறுகின்றன. மேலும் பண்டைகாலத் தமிழர்களின் இரும்பு உருக்கு உலை ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதனருகிலேயே குவியல் குவியலாகப் பழமையான இரும்பு கழிவுகளும் ஏராளமாகக் கிடைப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தொல்லியல்துறை மூலம் விரிவான தொல்லியல் ஆய்வினை மேற்கொண்டு தமிழரின் பெருமைகளை உலகறியச் செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response