நியூஸ் 18 இல் வெளியேறிய குணசேகரன் சன் நியூஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் ஜூலை 17 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அந்த யூடியூப் சேனலில் உள்ள அனைத்து காணொலிகளும் நீக்கப்பட்டு அது முடக்கப்பட்டது. அதோடு அதன் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கறுப்பர் கூட்டம் மீதான அரசின் நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்னொருபக்கம்,இதனோடு தொடர்புடையவர்கள் என்று சொல்லி, நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணியாற்றும் குணசேகரன், ஆசிப்முகமது உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

அதன்காரணமாக அவர்கள் இருவரும் அந்நிறுவனத்திலிருந்து அழுத்தம் கொடுத்து வெளியேற வைக்கப்பட்டனர்.

அந்த குணசேகரன் இப்போது சன் நிறுவந்த்தில் சேர்ந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது…. சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக (Editor-in-Chief) பொறுப்பேற்கவிருக்கிறேன் என்ற செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழச்சி அடைகிறேன். அளவற்ற ஆதரவை அள்ளி வழங்கிய அனைவரின் கரங்களையும் நெகிழ்ச்சியோடு பற்றிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response